சுடச்சுட

  

  இந்தியாவின் இரும்பு மனிதர்!

  By என்.லட்சுமி பாலசுப்ரமணியன்  |   Published on : 12th January 2019 01:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sm6

  2. கல்வி

  தனது ஆரம்பக் கல்வியை குஜராத்தில் உள்ள திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்த வல்லபாய் படேல் தமது உயர் கல்வியை பரோடா உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.
  அந்தக் காலத்தில் மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து வைப்பார்கள். அதன்படி வல்லபாய் படேலுக்கு 18 வயது ஆனபோது திருமணம் நடைபெற்றது. அவர் அண்ணன் திரு வித்தல் பாய் படேல் வக்கீலாக பணிபுரிந்து கொண்டிருந்தார்.அவரது வழிகாட்டுதலின் படியே மூன்றாண்டு மாவட்ட வக்கீல் பட்டப்படிப்பை வல்லபாய் படித்து முடித்தார்.
  "கோத்ரா' என்ற இடத்தில் வெற்றிகரமாக தனது வக்கீல் தொழிலை நடத்தினார். அவரது அண்ணன் வித்தல் பாய் படேல் வேறொரு நகரத்தில் வக்கீலாக பணிபுரிந்து கொண்டிருந்தார். இதற்கிடையே அந்நகரத்தில் நீதிபதி ஒருவர் பணம் பெற்றுக் கொண்டு நீதி வழங்கினார்.இதை அறிந்த வித்தல் பாய் படேல் அந்த நீதிபதியின் மீது வழக்கு தொடர்ந்தார்.தமது குற்றச்சாட்டை நிரூபித்தும் காட்டினார்.இதனால் அந்த நீதிபதிக்கு தண்டனை கிடைத்தது.
  இது ஒருபுறம் பெருமையையும் புகழையும் அளித்தாலும் மற்றொரு வகையில் பேராபத்தையும் கொடுத்தது.தண்டிக்கப்பட்ட நீதிபதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வித்தல் பாயின் பகைவர்கள் ஆகினர்.இதனால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்படும் அளவிற்கு நிலைமை மோசமானது. வித்தல் பாய் பலமுறை தெய்வாதீனமாக அவர்களது சூழ்ச்சியிலிருந்து உயிர் தப்பினார்.
  இதை அறிந்த வல்லபாய் படேல் தன் அண்ணனின் உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டி தமது தொழிலை அண்ணன் வசித்த ஊருக்கே மாற்றிக்கொண்டார். தனது அண்ணன் குடும்பத்திற்கு முழுப் பாதுகாப்பும் அளித்தார்.
  அந்நாட்களில் மாநில அளவில் ஒருவர் வக்கீல் தொழில் புரிய வேண்டும் எனில் லண்டனுக்குச் சென்று பார் அட் லா படிக்க வேண்டும். இதற்கு பல லட்ச ரூபாய்கள் செலவாகும். இதனால் ஆங்கிலேயர்கள் மட்டுமே மாநில அளவில் வழக்கறிஞர்களாக செயல்பட்டனர். இதன் காரணமாக அவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தது. மேலும் இந்திய தட்பவெப்ப நிலை ஒத்துக்கொள்ளாத பல ஆங்கிலேய அதிகாரிகள் தமது வேலையை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் இங்கிலாந்திற்கு திரும்பி சென்றனர். இதனால் பல வழக்குகள் முடிக்கப்படாமல் இருந்தன. இதற்கு என்னதான் வழி என்று யோசித்த "தாமஸ் குக்'என்ற பிரிட்டிஷ் நிறுவனம் உபாயம் ஒன்றை கூறியது.
   இந்தியர்களலேயே தகுதியும் திறமையும் வாய்ந்த ஒரு சிலரை மட்டும் தேர்வு செய்து அவர்களுக்கு லண்டனில் உள்ள சட்ட கல்லூரியில் பயில அனுமதியும், உதவித் தொகையும் அளிக்க அந்த நிறுவனம் தயாராக இருப்பதாக கூறியது.அந்நாளில் வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபு இந்த யோசனையை ஏற்றுக் கொண்டு அனுமதி அளித்தார்.
  அதன்படி கடுமையான தேர்வுகளுக்கு பிறகு ஒரு சிலர் மட்டும் லண்டனில் சட்டம் பயில தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுள் வல்லபாய் படேலும் ஒருவர் ஆவார். அவர் தமது முகவரியில் வி. படேல் என்று மட்டும் குறிப்பிட்டு இருந்தார்.அவருக்கு அனுப்ப பட்ட அனுமதி கடிதம் அவரது சகோதரர் வித்தல் பாய் இடம் கிடைத்தது.
  அவர் உடனே தன் தம்பி வல்லபாய் படேலிடம் பின்வருமாறு கூறினார்.  ""தம்பி எனக்கு வயதாகிவிட்டது! இனிமேல் நான் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கடினம்! ஆகவே நீ அனுமதி அளித்தால் நான் லண்டன் சென்று சட்டம் பயில்வேன். சட்டம் பயின்று முடித்து வந்து உன்னை சட்டம் பயில லண்டனுக்கு அனுப்புகிறேன்! உன் கல்வி செலவை நான் ஏற்றுக் கொள்கிறே. தகுதித் தேர்வை மீண்டும் எழுத உனக்கு வயது இருக்கிறது. எனக்கு இனி அது இல்லை!ஆகவே இந்த வாய்ப்பை எனக்குக் கொடு!'' என்று வேண்டினார்.
  தமது சொந்த அறிவாலும் , திறமையாலும் பெற்ற வாய்ப்பை தனது அண்ணனுக்கு அளித்தார் வல்லபாய் படேல். மேலும் அவரை லண்டனுக்கு அனுப்பி வைத்ததோடு இல்லாமல் அவரது குடும்பத்தை பராமரிக்கும் செலவையும் தானே ஏற்றுக்கொண்டார். உறவுக்கூட்டம் வல்லபாயை எச்சரித்தது ""உன் அண்ணன் குடும்பத்தை  நீ ஏன் பராமரிக்க வேண்டும்?உன் அண்ணியை அவரது பிறந்த வீட்டிற்கு அனுப்பி விடு!''  என்றது.
  அதற்கு அவர் சொன்ன  ஒரே பதில்,  ""ஏக்தா மே பல் ஹாய்!''
  இதன் பொருள் "ஒற்றுமையே வலிமை' என்பதாகும்.
  பின்னாளில் சிதறிக்கிடக்கும் சமஸ்தானங்களை தாம் ஒன்றிணைக்க போகிறோம் என்பது அன்று அவருக்கு தெரியாது!இது ஒரு ஆச்சரியம் அல்லவா!
  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai