சுடச்சுட

  

  கருவூலம்: நெருப்புக் கோழிகள் எங்கே முட்டையிடுகின்றன?

  By ச.சண்முகசுந்தரம்  |   Published on : 12th January 2019 01:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sm4

  பறவைகள் கூடு கட்டுவதே முட்டையிடுவதற்குத்தான்! மரக் கிளைகள், கூரை முகடுகள், மரப்பொந்துகள் போன்ற எத்தனையோ இடங்களில் அவை கூடுகள் கட்டுகின்றன. ஆனால் பறக்கவோ நீந்தவோ முடியாத ஒரு பறவை நெருப்புக் கோழி! அது எங்கே முட்டையிடும்?

  ஆப்பிரிக்காவின் கிழக்கு, தெற்குப் பகுதிகளில் வாழும் இந்தப் பறவை, முட்டையிட ஒரு கூடு வேண்டுமே என்று கவலைப் படுவதில்லை! நிலத்தில் சற்றுக் குழியாக இருக்கும் இடமாகப் பார்த்து, அதை மேலும் கால்களால் தோண்டுகிறது! அந்தப் பள்ளம் குறுக்கே மூன்றடி இருக்கலாம்! குழியைத் தோண்டிய பிரதான பெண் நெருப்புக்கோழி அதில் ஆறிலிருந்து எட்டு முட்டைகள் வரை இடும்! ஆச்சரியம் என்ன வென்றால் வேறு சில பெண் நெருப்புக் கோழிகளும் அதே குழியில் முட்டையிடுகின்றன.  எனவே குழியில் சுமார் 50 லிருந்து 60 முட்டைகள் வரை காணப்படுகின்றன!

  ஒவ்வொரு முட்டையும் சுமார் 6 அங்குலம் இருக்கும்! அவற்றின் விட்டம் சுமார் 15 செ.மீ(ஆறு அங்குலம்!) எடை சுமார் 1கிலோ 300 கிராம் இருக்கும்!

  பகலில் பெண்பறவைகளும், இரவில் ஆண்பறவைகளும் அடைகாக்கின்றன. ஒரு பெண்பறவை அடைகாக்கும்போது ஒரு ஆண்பறவை அதற்குக் காவல் காக்குமாம்! 

  மற்றொரு சுவையான தகவல்... நெருப்புக்கோழிக்கு இரண்டே விரல்கள்!
  நாம் கண்களை மூடிக்கொண்டு நேராக நடக்க முடியுமா?

  ம்ஹூம்!.... முடியாது! யாராவது ஒருவரைத் திறந்த வெளிக்கு அழைத்துச் செல்லுங்கள். ஒரு நேர்கோட்டை  வரையுங்கள். ஒரு முனையில் அவரை நிறுத்துங்கள். பிறகு நேர்கோட்டை  நன்றாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லுங்கள். அழைத்துவந்தவரின் கண்களைக் கட்டுங்கள். பிறகு அந்த நேர்கோட்டில் நடக்கச் சொல்லிப் பாருங்கள்! எத்தனைதான் முயன்றாலும் அவர் நேர்கோட்டின் மீது நடக்க முடியாமல் கோட்டிலிருந்து விலகி வட்ட வளையமாக நடந்து கடைசியில் ஆரம்பித்த இடத்துக்கே வந்து சேர்வதைக் காணலாம்! 

  கடுமையான பனி மூட்டத்திலோ, இருட்டிலோ வழி தவறியவர்கள் என்னதான் தன் கற்பனைத் திறத்தால் வழியை ஊகித்துக்கொண்டு நேராகச் செல்ல முயன்றாலும் கடைசியில் ஆரம்பித்த இடத்துக்கே திரும்பி விடுவர். 

  இந்த விந்தையின் மர்மம் என்ன? கண்களைக் கட்டியபின் மனிதன் நேராக நடந்து செல்ல முடியாத காரணத்தைக் கேளுங்கள்..... நமது உடல் சற்றே சாய்வாக ஒரே சீரின்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது நமது உடலில் உள்ள வலது பக்கமும், இடது பக்கமும் ஒரே எடை கொண்டதாகவோ, ஒரே அமைப்பு கொண்டதாகவோ இருக்காது.

  உதாரணமாக நமது இதயம் இடது பக்கமும், கல்லீரல் வலது பக்கமும் வெவ்வேறு எடையில் அமைந்துள்ளன. எலும்புக்கூடு கூட அனைத்துப் பகுதிகளிலும் ஒரே சீராக அமையவில்லை. வலது புறமுள்ள எலும்புப் பகுதிகள் இடது புறமுள்ள எலும்புப் பகுதிகளைவிட சற்றே எடை கூடுதலானவை!

  இந்த சீரின்மை காரணமாகத்தான் கண்ணைக் கட்டிவிட்டால் நம்மால் நேராக நடக்க முடிவதில்லை.  ஒரு பகுதி மற்ற பகிதியைவிட கனமான காரணத்தால் கனத்த பகுதியிலிருந்து வரும் விசையானது நம்மை ஒரு பக்கமாகத் திரும்பத் தூண்டுகிறது. 

  இதன் விளைவாக நாம் வட்டமாக சுற்றுகிறோம். 

  கண்கள் திறந்த நிலையில் இருக்கும்போது அவை நம்மை நமது பாதையிலிருந்து  பிறழ விடுவதில்லை. 
  தொகுப்பு: சம்பத், சென்னை  

  ஓ!....வியம்!

  படத்தில் ஒரு பெண்குழந்தை  புத்தகத்தைப் பிரித்துப் படிக்கும் ஓவியம், காகிதத்தில், துணியில், சுவற்றில் வரைந்தது அல்ல! ஒரு மலை மீது வரைந்தது! 
  பிரான்சு நாட்டு "சேய்பி' என்ற ஓவியர் இப்படி மலை மீது ஓவியம் தீட்டியுள்ளார். "எதிர்காலத்துக் கதை'  என இந்த ஓவியத்துக்குப் பெயர் சூட்டியுள்ளார். 
  இந்த ஓவியத்தை வரைய அறுநூறு லிட்டர் பெயின்ட், தண்ணீர், பால், புரதம், ஆகியவற்றை ஓவியர் பயன் படுத்தியுள்ளார். 
  சுவிட்சர்லாந்து, மான்ட்ரீக்ஸ் மலை மீது சுமார் ஆறாயிரம் சதுரமீட்டர் பரப்பில் இந்த ஓவியம் தீட்டப்பட்டுள்ளது! 
  (அந்தப் பெண் படிக்கும் புத்தகத்தில் இந்தத் தகவல் இருக்குமா?)

  ரோபோ நாய்!

  சோனி நிறுவனம் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு ரோபோ நாயைத் தயாரித்திருக்கிறது! இந்த நாய் முந்தைய நாயைவிட மிக புத்திசாலியாம்! 
  உண்மையான நாயைப் போலவே சொல்லுகிற கட்டளையைப் பின்பற்றிச் செயல்படுகிறது! உரிமையாளரோடு மிகவும் செல்லமாக நடந்து கொள்கிறது. வாலைக் குழைக்கிறது! அன்புடன் பழகுகிறது!
  பிஸ்கட் கேக்காது! கண்ட இடத்தில் உச்சா போகாது! வெரி குட்  நாய்!  நாய்க்குப் பெயர்?  ""அய்போ!'' (அஐஆஞ)அது சரி, நாயின் விலை? சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய்கள்!

  அசைந்தாடும் உலகின் மிகப் பெரிய மணி!

  படத்தில் உள்ள மணி உலகின் மிகப் பெரிய அசைந்து ஆடும் மணியாகும். இது பதிமூன்று அடி உயரம் கொண்டது. மணியின் அகலம் பதினைந்து அடி!  எடை ஐம்பத்தைந்து டன்! மணியை இயக்க நான் பெரிய இயந்திரங்கள் உள்ளன. சுமார் 400 அடி உயரத்தில் இது பொருத்தப்பட்டிருக்கும்! 
  தென்னமெரிக்காவில் உள்ள பிரேசிலில் இந்த மணியை நிறுவப்போகிறார்கள்!

  உலகின் மிக விலை உயர்ந்த தேநீர் ஜாடி!

  படத்தில் உள்ள தேநீர் ஜாடியை இங்கிலாந்து தொண்டு நிறுவனத்திற்காக இத்தாலிய நகைக் கலைஞர் "ஃபுல்வியோ ஸ்கேவியா' உருவாக்கியிருக்கிறார். இந்த ஜாடி, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவாயிருக்கிறது. ஆயிரத்து அறுநூற்று ஐம்பத்தெட்டு வண்ண வண்ண வைரங்கள் பதிக்கப்பட்டு இருக்கின்றன. மத்தியில் உள்ள சிவப்புக் கல் 6.67 கேரட்! 
  "ஈகோயிஸ்ட்'  என்று இந்த ஜாடிக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள்.   
  விலை?....சுமார் 27 கோடி ரூபாய்கள்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai