சுடச்சுட

  

  ஆண்டு முழுவதும் வயல்காட்டில்
  அல்லும் பகலும் உழைத்தவர்கள்
  வேண்டி விளைத்த செல்வத்தை 
  வீட்டில் கொணர்ந்து சேர்க்கின்றார்!

  "போகி' என்றொரு நாள் குறித்து
  பொலிவாய் சுற்றுப் புறம் யாவும் 
  ஆகும் வண்ணம் பழமையினை 
  அகற்றித் தூய்மை செய்கின்றார்!

  தமிழர் திருநாள் பெயர்தாங்கி
  "தை' மகள் பிறந்து வரும் நாளை
  அமிழ்தம் பெற்று மகிழ்வது போல் 
  ஆன்றோர் தந்தார் கொண்டாட!

  இல்லம் தோறும் அழகு செய்து
  எங்கும் மங்கலப் பொருள் வைத்து 
  வெல்லமா, அரிசி, மணப்பொருளால்
  வீதிகள் எல்லாம் பால் பொங்கல்!

  பொங்கலைப் படைத்து எல்லோரும்
  புத்துடை அணிந்து கூடி நின்று 
  "செங்கதிர்' வணங்கி நன்றியினை
  சிறப்பாய்க் கூறுவர் வாழ்த்தொலியாய்!

  உழவுத் தொழிலைப் புரிவதற்கு
  உற்ற துணை செயும் கால்நடைக்கும்
  விழாவை அன்புடன் நடத்துவதே 
  வீரம் செறிந்த பண்பாடாம்!

  உள்ளம் கொள்ளை கொள்கின்ற 
  "உலகப் பொதுமறை' தந்திட்ட 
  "வள்ளுவர் தினத்' தைப் பெருமையுடன் 
  வாழ்த்தி அரசும் கொண்டாடும்!

  உண்டு உடுத்தி உரிமையுடன் 
  உற்றார், உறவினர் நண்பர்களைக் 
  கண்டுகளிக்கும் நாளினையே 
  "காணும் பொங்கல்' என்பார்கள்!

  மூன்று தினமும் திருநாளாம்!
  முத்தமிழ் போற்றும் நன்னாளாம்! -இப் 
  "பொங்கல்' என்னும் இந்நாளில் 
  பொங்குக மகிழ்ச்சி எங்கெங்கும்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai