இன்னலைப் போக்கும்  - இலுப்பை மரம்

நான் தான் இலுப்பை மரம்  பேசறேன்.  எனது அறிவியல் பெயர்  ஃபேசியாலேட்டி ஃபோலியா மற்றும் மதுகா லாங்கி போலியா என்பதாகும். நான் சப்போட்டேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.
இன்னலைப் போக்கும்  - இலுப்பை மரம்


என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?

நான் தான் இலுப்பை மரம்  பேசறேன்.  எனது அறிவியல் பெயர் ஃபேசியாலேட்டி ஃபோலியா மற்றும் மதுகா லாங்கி போலியா என்பதாகும். நான் சப்போட்டேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் இந்தியாவை தாயகமாகக் கொண்டவன். ஒருகாலத்தில் தமிழகத்தில் பல பகுதிகளில் நான் நிறைந்திருந்தேன்.  இன்றும் என் பெயரில் இலுப்பூர் (புதுக்கோட்டை மாவட்டம்), இலுப்பைக்குடி (அரியலூர் மாவட்டம்), இலுப்பையூர் (விருதுநகர் மாவட்டம்) என்ற ஊர்கள் உள்ளன.  குழந்தைகளே, நானும் இப்போது அழிவின் விளிம்பின் இருக்கிறேன். 

எனக்கு இருப்பை, சூலிகம், மதூகம் என்ற வேறு பெயர்களும் உண்டு.  நான் கொத்துக் கொத்தான நீண்ட இலைகளையும், கொத்தான வெண்ணிற மலர்களையும், முட்டை வடிவ சதைக் கனியையும், நொறுங்கக் கூடிய உறையினால் மூடப்பெற்ற விதையினையும் கொண்டிருப்பேன். 

எனது வேரை இடித்து நீரில் கலந்து கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் தலைவலியையும் போக்கி, நீரிழிவையும் குணமாக்குவேன்.  என் பூ அதிக சுவை கொண்டது. அதனால் தான் ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்ற பழமொழி உருவானது.  இதில் புரதங்கள், வைட்டமின்கள், கால்சியம் சத்து அதிகமாக உள்ளது.  

என் பூவை உண்டால் பாம்பு கடித்த விஷம், வாத நோய் குணமாகும்.   இதில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.  என் பூவை தினசரி நீங்கள் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை போன இடம் தெரியாது, இருமல் நீங்கும், தீரா தாகம், நீர்ச்சத்து குறைபாடு இருக்காது.   அரைத்து பாலில் கலந்து குடித்தால் இளைப்பு நீங்கும். காய்ந்த என் பூவை வதக்கி வீக்கங்களுக்கு ஒத்தடமிட்டு வந்தால் வீக்கம் மறையும்.  

என் காயைக் கீறினால் பால் வெளிப்படும்.  அந்தப் பாலை உடம்பில் தோன்றும் வெண்படலங்களின் மீது தடவினால் வெண்படலம் விரைவில் குணமாகும்.  என் பழம் இனிப்பு சுவை உடையது.  மலச்சிக்கலைப் போக்கும் தன்மையுடையது. என் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் திருகோவில்களில் விளக்கேற்றவும், சோப்புத் தயாரிக்கவும் பயன்படுகிறது.  

நான் தஞ்சாவூர் மாவட்டம், கஞ்சனூர், கீழச்சூரியமூலை அருள்மிகு சூர்யகோடீஸ்வரர், சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு திருவள்ளுவர், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீசுவரர், வேலூர் நகரம், கஜேந்திரகிரி, அருள்மிகு காசி விஸ்வநாதர், திருநெல்வேலி மாவட்டம், காரையாறு, சொரிமுத்து அய்யனார், நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பழமண்ணிப்படிக்கரை அருள்மிகு அமிர்தகரவல்லி உடனுறை நீலகண்டர், ஆகிய திருக்கோயில்களில் தலவிருட்சமாக இருக்கிறேன். 

என் நட்சத்திரம் ரேவதி. நான் தமிழாண்டில் விக்ரம ஆண்டை சேர்ந்தவன்.   மரம் வளர்ப்போம், மழை பெறுவோம், புவியைக் காப்போம்.  நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 

(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com