சுடச்சுட

  
  sm12

  குயவன் ஒருவன் மண் பாண்டங்களை செய்து கொண்டிருந்தான். அப்போது வயதான பாட்டி ஒருவர் அங்கு வந்தார். 

  ""குயவரே! என் வீட்டில் இருந்த ஒரே ஒரு பானையும் பழுதாகிவிட்டது.  தண்ணீர் பிடித்து வைக்க வேறு பாத்திரம் இல்லை. வீட்டோடு பலகாரம் செய்து விற்கிறேன்! ஆனால், இப்போது பானை வாங்க போதுமான பணம் என்னிடம் இல்லை. பெரிய மனது வைத்து எனக்கு ஒரு பானை கொடுத்து உதவினால் உனக்குப் புண்ணியமாகப் போகும்... நான் சில நாட்களில் அதற்கு உண்டான காசைத் தந்து விடுகிறேன்!'' என்று கேட்டார். 

  அந்தப் பாட்டி கூறியதைக் கேட்ட குயவனுக்கு, "பாவம் இந்தப் பாட்டி, இந்த வயதிலும் உழைத்து சம்பாதித்து வாழ வேண்டும் என்று நினைக்கிறார். அவருக்குக் கொடுத்து உதவுவதில் தவறில்லை ' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, அந்தப் பாட்டிக்கு ஒரு பெரிய பானையை எடுத்துக் கொடுத்தான். அதை வாங்கிக் கொண்டு குயவனுக்கு நன்றியும் சொல்லிவிட்டுச் சென்றாள்.

  ஒரு வாரத்துக்குப் பிறகு அந்தக் குயவனைத் தேடி அந்தப் பாட்டி வந்தாள்.

  பாட்டி வந்தபோது குயவன் தன் குடிசை வாசலில் சோர்ந்து போன முகத்துடன் உட்கார்ந்திருந்தான்.

  ""ஐயா, நீ ஏன் இப்படி சோர்வாக உட்கார்ந்திருக்கிறாய்? ஏதாவது சாப்பிட்டாயா இல்லையா...?'' என்று பாட்டி பரிவோடு அந்தக் குயவனைப் பார்த்து கேட்டார். 

  ""இல்லை பாட்டி... ருசியாகச் சாப்பிட்டு இரண்டு நாளாகிறது. என் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை. ஏதோ கஞ்சியைக் காய்ச்சி அவளுக்கும் கொடுத்து விட்டு நானும்  குடிக்கிறேன். ருசியாக ஏதாவது சாப்பிட வேண்டும் போல இருக்கு... என்ன செய்வது? காய்கறி மளிகைச் சாமான்கள் எல்லாம் வீட்டில் இருந்தும்  எனக்கு சமைக்கத் தெரியாது...'' என்றான்.

  ""அதற்காக ஏன் நீ வருத்தப்படுகிறாய். நான் ஏதாவது செய்து தரட்டுமா? ''

  ""உங்களுக்கு ஏன் சிரமம்?'' என்றான் குயவன்.

  ""இதோ!  கொஞ்சம் பொறு!....  நான் உனக்கு சமைத்துப் போடுகிறேன்!'' என்று கூறிவிட்டு நாக்குக்கு ருசியாக பாட்டி சுடச்சுட சமைத்து முடித்தாள்.  
  சூடான சாம்பாரும், ரசமும்,  பொறியலும் மணத்தன. குயவன் திருப்தியாக சாப்பிட்டான். 

  அவன் கண்கள் கலங்கின. அவனுக்குத் தன் அம்மாவின் ஞாபகம் வந்தது. அவன் மனைவிக்கும் சிறிது ரசத்தை ஊற்றிக் கரைத்துக் கொடுத்தாள் பாட்டி! அவளும் அதை பொறியலைத் தொட்டுக்கொண்டு குடித்தாள். அவளுக்கு அந்த உணவு சற்று தெம்பாக இருந்தது. 

  குயவன் சாப்பிட்டு முடித்துவிட்டு,  ""பாட்டி ரொம்ப ருசியா சமைச்சிருக்கீங்க! '' என்றான். 

  பாட்டி தன் இடுப்பில் முடிந்து வைத்திருந்த பணத்தை வெளியே  எடுத்தாள். ""இந்தாப்பா... நீ அன்றைக்குக் கொடுத்த பானைக்கான பணம். இந்தப் பணத்தை சேர்க்க ஒரு வாரமாச்சு. இதைக் கொடுக்கத்தான் வந்தேன். வாங்கிக் கொள்'' என்றாள் பாட்டி.

  ""வேண்டாம் பாட்டி! ....இந்தக் குயவன் உங்களுக்கும், உங்கள் அன்பிற்கும் உழைப்புக்கும் கொடுத்த  என் அன்புப் பரிசு அது! பரிசுப் பொருளுக்கு யாராவது பணம் வாங்குவார்களா பாட்டி? பசித்த வயிற்றுக்கு உடனே உணவிட்ட உங்கள் அன்புக்கு முன்னால் இந்த உலகில் எதுவும் ஈடாகாது பாட்டி...'' என்றான்.

  ""உங்க அன்பினாலே எனக்கு உடல் சரியாயிடும்!.... இப்பவே கொஞ்சம் தேறினாமாதிரி இருக்கு!...  அடிக்கடி இங்கே வந்து போங்க பாட்டி!....'' என்றாள் குயவனின் மனைவி. அவளுக்குத் தாய் போல் தெரிந்தாள் பாட்டி!

  அன்புக்கு விலையில்லை!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai