உருவு கண்டு எள்ளாமை! - 4: தினேஷின் உலகம்

அன்று வகுப்பில் ஆசிரியர் அனைவரிடமும் உரையாடிக் கொண்டிருந்தார்.""நீ பிற்காலத்தில் என்னவாக விரும்புகிறாய்?'' என்று ஒவ்வொரு மாணவனையும் கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைக் கூறினர்.
உருவு கண்டு எள்ளாமை! - 4: தினேஷின் உலகம்


அன்று வகுப்பில் ஆசிரியர் அனைவரிடமும் உரையாடிக் கொண்டிருந்தார்.

""நீ பிற்காலத்தில் என்னவாக விரும்புகிறாய்?'' என்று ஒவ்வொரு மாணவனையும் கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைக் கூறினர். சம்பத் என்ற மாணவன் எதுவும் கூறாமல் மெüனமாக இருந்தான். மாணவர்களுள் ஒருவன், ""இவன் அழகுக்கு இவன் பெரிய சினிமா ஸ்டார் ஆயிடுவான்!...

இவன் முகத்தைப் பார்க்கவே பெரிய கூட்டம் வரும்!.""  என்று கூறவும், அனைவரும் ஏளனமாகச் சிரித்தனர்!... தினேஷ் உள்பட!

இதைக் கண்ணுற்ற ஆசிரியர் மிகவும் வருந்தினார். ""எல்லோரும் வாயை மூடுங்க!'' என்று மாணவர்களை அடக்கினார். ""சம்பத் நீ உட்கார்! என்று அந்த மாணவனை அமர வைத்தார்.  சம்பத்தின் முகம் கோணலாக வித்தியாசமாக இருந்தது. அன்று மாலை சம்பத்தை ஆசிரியர் அழைத்து ஏதோ கூறினார். அவனும், ""சரி!'' என்பது போல் தலையை ஆட்டினான்.

ஒரு மாதம் கடந்தது. வகுப்பில் பாடம் நடத்துவதற்கு முன் ஆசிரியர் எப்பொழுதும் கதை கூறுவது வழக்கம். அன்றும் ஒரு கதை கூறினார். ""டியர் ஸ்டூடன்ட்ஸ்!.... ஒரு நாளைக்கு பசுமாடு, முயல், குரங்கு, கழுதை ஆகிய நான்கு விலங்குகளும் சுற்றுலா செல்ல முடிவு செய்தன. அதன்படி நான்கு விலங்குகளும் ஒவ்வொரு பொருளை கையில் கொண்டு வந்தனவாம். 

பசுமாடு ஒரு துணிப்பையில் அரிசியை எடுத்துக் கொண்டு அதைத் தன்னோட கொம்புலே மாட்டிக் கொண்டு வந்தது! முயல் தன்னுடைய ரெண்டு கைகள் நிறைய கேரட்களைக் கொண்டு வந்தது! குரங்கு நிறையப் பழங்களைக் கொண்டு வந்தது! கழுதை தன் முதுகிலே நிறைய விறகுக் கட்டைகளைச் சுமந்து வந்ததாம்!'' என்று கூறிச் சற்று இடைவெளி விட்டார். 

வகுப்பில் அமைதி!.... மாணவர்கள் ஆசிரியரைக் கூர்ந்து கவனித்தனர். ஆசிரியர் மீண்டும் தொடர்ந்தார். 

""இந்த நான்கு விலங்குகளும் காட்டை நோக்கி நடக்கும்பொழுது எதிரே ஒரு பெரிய யானை வந்ததாம்! ""நீங்களெல்லாம் எங்கே போறீங்க?'' என்று கேட்டதாம்.

அதற்கு அந்த நான்கு விலங்குகளும், ""சுற்றுலாப் போறோம்!'' என்றன.

அதற்கு யானை, ""நானும் வரேன்!.... என்னையும் சேர்த்துக்கோங்க!'' ன்னு கேட்டதாம்!

அதற்கு அந்த நான்கு விலங்குகளும், ""வேணாம்!.... நீ வரக்கூடாது!'' என்றன. 

""ஏன் சார் அப்படி அந்த விலங்குகள் சொல்லின?'' என்று தினேஷ் கேட்டான். 

""அந்த விலங்குகளுக்கு யானையைக் கண்டா பிடிக்கலை!..... "நீ ரொம்பப் பெரிசா இருக்கே!' ...ன்னு முயல் சொன்னதாம்!'' 

""யானைன்னா பெரிசாத்தானே இருக்கும்?.... அந்த முயலுக்கு அறிவே இல்லை சார்!....'' என்றான் திலீப்.

""நீ ரொம்பக் கறுப்பா இருக்கே!....'' என்று கழுதை சொன்னது!

""ஆமாம்!.... கழுதை ரொம்ப அழகாக்கும்!.... ‘‘ என்றான் அரவிந்த். 

""உனக்கு சாப்பாடு போட எங்களாலே முடியாது!....'' என்றதாம் பசுமாடு!

""யானை தனக்கு வேண்டிய உணவைத் தானே காட்டிலே தேடிச் சாப்பிடுமே!.... அது ஏன் இவங்க சாப்பாóடடைக் கேட்கப் போகுது?'' என்றான் யஷ்வந்த்.

""முக்கியமா நீ ஒரு காட்டு விலங்கு!.... அதுனாலே உன்னை எங்க டீம்லே சேர்த்துக்க முடியாது! '' ன்னு குரங்கு சொன்னது. 

""ஆ...மா... குரங்கும் ஒரு காட்டு விலங்குதானே!.... அது ஏன்  ரொம்ப யோக்கியம்  மாதிரி யானையைக் குறை சொல்லுது? '' என்றான் நவீன்.

""குறுக்கே பேசாதீங்க!.... கவனமா கதையைக் கேளுங்க!.... '' என்ற ஆசிரியர் கதையைத் தொடர்ந்தார். 

""நான்கு விலங்குகளும் எங்கே போனாலும் அந்த யானையும் கொஞ்சம் தள்ளி தொடர்ந்து வந்துகொண்டே இருந்ததாம்!.... காட்டோட மையத்துலே திடல் மாதிரி ஒரு இடம்!... அருகிலேயே ஒரு ஓடை!... அங்கே  சமையல் பண்ணிச் சாப்பிடணும்னு நான்கு விலங்குகளும்  முடிவு செய்தன. கழுதை, தான் கொண்டு வந்த விறகையெல்லாம் அடுக்கி வைத்தது! குரங்கு காய்ந்துபோன சருகையெல்லாம் குமிச்சு வெச்சு கல்லை உரசி நெருப்பை உருவாக்கியது! காற்றடிச்சு நெருப்பும் சீக்கிரம் பற்றிக் கொண்டது.  காற்று வேகமா அடிக்கவும் நெருப்பு பிடித்த சருகுகள் பறந்தன. இதனால காட்டுலே இருந்த மரங்கள் தீப்பிடிக்க ஆரம்பித்தன. இந்த நான்கு விலங்குகளுக்கும் என்ன செய்யறதுன்னே தெரியலே... ""உதவி!... உதவி!...'' ன்னு கத்த ஆரம்பித்தன. இவைகளைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த யானை, அருகில் இருந்த ஓடையிலே தன் துதிக்கையாலே நீரை உறிஞ்சி நிரப்பி வந்து அந்த நெருப்பை அணைச்சதாம்!'' என்று ஆசிரியர் கூறவும் மாணவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர். 

""அந்த நான்கு விலங்குகளும் தங்கள் தவற்றை உணர்ந்து வருந்தின...."உருவத்தைக் கண்டு ஒருவரை மதிப்பிடக் கூடாது! ' ன்னு இன்னைக்குத் தெரிஞ்சுக்கிட்டோம்! எங்களை மன்னிச்சிடு! '' ன்னு யானை கிட்டே மன்னிப்புக் கேட்டன!....இந்தக் கதை மாதிரியே நம்ம வகுப்பிலேயும் நடந்திருக்கு!.... எந்த மாணவனை நீங்க எல்லோரும் அழகில்லேன்னு கேலி பண்றீங்களோ அவன்தான் நம்ம ஸ்கூலுக்குப் பெருமை சேர்த்துட்டான்!.... போன வாரம் அரிமா சங்கம், கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டின்னு பல போட்டிகள் பள்ளிகளுக்கு இடையே நடத்தினாங்க!.... மற்ற ஸ்கூல் எல்லாம் நிறையப் பரிசுகள் வாங்கினாங்க!.... ஆனா நம்ம பள்ளிக்கு ஒரே ஒரு பரிசுதான் கிடைச்சுது! அதவும் ஓவியப் போட்டியில் மட்டும்தான்! .....நீங்க எப்பவும் கேலியும், கிண்டலும் செய்யற நம்ம மாணவன் "சம்பத்' தான் அந்த முதல் பரிசு பெற்ற மாணவன்! '' என்று சொல்லவும் மாணவர்கள் அனைவரும் தம் செயலுக்காக வெட்கித் தலை குனிந்தனர். 

தினேஷ் சம்பத்தின் அருகில் சென்று, "" சம்பத்! ரொம்ப சாரிடா!... இனிமே உன்னைக் கேலி பண்ண மாட்டேன்!... '' என்று கூறியபடியே ஒரு ரப்பர் வளையத்தை அவன் கையில் மாட்டி விட்டான்! ""இது ஃபிரெண்ட்ஷிப் பேண்ட்!..... இனிமே நீயும் நானும் க்ளோஸ் ஃபிரெண்ட்ஸ்!'' என்றான். 

சம்பத் முகத்தில் மகிழ்ச்சி! இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியரின் முகத்திலும்தான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com