மரங்களின் வரங்கள்!

வாழ்வு தரும் தரு!கடுக்காய் மரம்!
மரங்களின் வரங்கள்!

வாழ்வு தரும் தரு!
கடுக்காய் மரம்!

என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?

நான் தான் கடுக்காய் மரம்  பேசுகிறேன்.  எனது தாவரவியல் பெயர் டெர்மினாலியா செடிபுலா என்பதாகும் நான் காம்பிரெட்டேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். என் பூக்கள், மங்கிய வெண்மை நிறமாகக் காணப்படும். எனக்கு அபையன், அமுதம், ரோகிணி, ஜீவந்தி ஆகிய வேறு பெயர்களுமுண்டு. சங்க இலக்கியங்களில் வலி நிவாரணி எனப் பொருள்படும் அப்யதா என்ற பெயரில் என்னை புலவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.   தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய காடுகளில் நான் அதிகமாக இருக்கேன். சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகும் கடுக்காயே மிகவும் உயர்ந்த தரமுடையதுன்னு சொல்றாங்க.

அறுசுவைகளில் உப்பு சுவை தவிர பிற சுவைகள் என்னிடம் உள்ளன. ஒருவருடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை எனக்கு உண்டு. கடுக்காயும் தாயும் கருத்தில் ஒன்று என்றாலும்,  கடுக்காய் தாய்க்கு அதிகம் காண் நீ – கடுக்காய் நோய், ஒட்டி உடல் தேற்றும் உற்ற அன்னையே சுவைகள், ஊட்டி உடல் தேற்றும் உவந்து – என்ற  மருத்துவப் பாடல் கடுக்காய் பெற்ற தாயை விட உயர்ந்தது எனப் புகழ்கிறது. அதாவது குழந்தைகளே, அம்மா உங்கள் மீது உள்ள பாசத்தினால், கண்ட உணவுகளையும் வகை வகையாய் செய்து கொடுத்து, வயிற்றைக் கெடுத்து விடுவார். ஆனால், நானோ உங்கள் வயிற்றிலுள்ள கழிவுகளையெல்லா வெளித் தள்ளி உங்கள் ஆயுளை நீட்டிப்பேன்  என்பதால் என்னை அப்படி சொல்றாங்க.

குழந்தைகளே, இது என் எச்சரிக்கை, கடுக்காயில் விதைப் பகுதி நஞ்சு போல் பாவிக்கப்படுவதால் அதை நீக்கி விட்டு தான் நீங்க பயன்படுத்த வேண்டும். இஞ்சியின் மேல் தோலும், கடுக்காயின் உள்கொட்டையும் உண்ணக் கூடாதவை. ஜீரண சக்தி குறைந்திருப்பவர்கள், பசியுடன் பட்டினியாக இருப்போர், கர்ப்பிணிகள் கடுக்காயை உண்ணக் கூடாது. 

தோல் வியாதியை குணப்படுத்துதல், மண்ணீரல் சக்தியை மேம்படுத்துதல், உடல் வீக்கங்களைப் போக்குதல், சுவாச நோய்களைக் கட்டுப்படுத்துதல், இரத்த நாள அடைப்பை நீக்கி இதயத்தை வலுப்படுத்துதல் போன்ற பல பலன்களை கடுக்காய் உங்களுக்குத் தருகிறது.     அது மட்டுமா, குழந்தைகளே, நாவறட்சி, தலைவலி, ஈரல் நோய், வயிற்று வலி, குஷ்டம், இரைப்பை, தொண்டை நோய், புண், கண்நோய், வாதம், வயிற்றுப் புண், காமாலை போன்ற நோய்களைக் குணப்படும் தன்மை கடுக்காய்க்கு உண்டு. கடுக்காய் தூளை அரைத் தேக்கரண்டி அளவு தினமும் மோரில் கலந்து சாப்பிட்டால் உங்கள் வயிற்றுப் போக்குத் தீரும். இரவில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர உங்களுக்கு செரியாமை, மலச்சிக்கல் இருக்காது. 

கடுக்காய்த் துளை சம அளவு உப்புத் தூளுடன் சேர்த்து பல் துலக்கினால், ஈறு வலி, பல்வலி ஈறிலிருந்து இரத்தம் கசிதல் குணமாகும்.  மூக்கிலிருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய்த் தூளை எடுத்து மூக்கால் உறிய, இரத்தம் வருவது நின்று விடும். காயங்களை ஆற்றுவதற்கும், தீப்புண்களைஆற்றுவதற்கும் கடுக்காய் முக்கியமானதாகும்.  

முற்காலத்தில் கட்டடம், திருக்கோயில்கள் கட்ட கடுக்காய் சாறு பயன்படுத்தினாங்க. இப்போ சாயமேற்றுவதற்கும் என்னை பயன்படுத்தறாங்க. மனிதன் பிறந்தது முதல் இறப்பு வரை அவனோடு நட்போடு உறவாடுவது மரம் மட்டுமே.  பச்சை குடைப் பிடித்து பூமியை பாதுகாப்பதும் மரமே.

நான் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், திருக்குறுக்கை, கொருக்கை வீரட்டேஸ்வரர் திருக்கோயிலில் தலவிருட்சமாக இருக்கிறேன். நான் தாரண தமிழ் ஆண்டை சேர்ந்தவன்.  நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 

(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com