முத்துக் கதை!: உழைப்பே உயர்வு!

கணபதி என்ற ஒருவர் இருந்தார். பணக்காரன் ஆகவேண்டும் என்று ஆசை இருந்த அளவுக்குக் கடுமையாக  உழைக்க வேண்டும் என்கிற எண்ணம் அவரிடம்  சிறிதும் இல்லை. அதனால் அவர் ஏழ்மையில் வாடினார்.  
முத்துக் கதை!: உழைப்பே உயர்வு!


கணபதி என்ற ஒருவர் இருந்தார். பணக்காரன் ஆகவேண்டும் என்று ஆசை இருந்த அளவுக்குக் கடுமையாக  உழைக்க வேண்டும் என்கிற எண்ணம் அவரிடம்  சிறிதும் இல்லை. அதனால் அவர் ஏழ்மையில் வாடினார்.  

ஒரு நாள் கணபதி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் நடந்து சென்ற பாதையில் பழங்கால  ஓட்டை நாணயம் ஒன்று கிடந்ததைப் பார்த்தார். உடனே குனிந்து அதை எடுத்தார்.  அதன் பின் புறத்தில் "உஉ' என்ற இரண்டு எழுத்துகள் இருந்தன. துளையிட்ட நாணயம் கிடைத்தால் மிகவும் அதிர்ஷ்டம் என்கிற மூட நம்பிக்கை கணபதியிடம் இருந்தது. அதனால் அந்த நாணயத்தை எடுத்து தன் சட்டைப் பையில் பத்திரப்படுத்திக் கொண்டு வீட்டுக்கு வந்தார். 

வீட்டுக்கு வந்ததும் நடந்த நிகழ்வை தன் மனைவியிடம் சொல்லி, "இந்த சட்டைப் பையில் ஒரு  நாணயம் இருக்கிறது! அதுதான் நமக்கு வாழ்வில் மிகப் பெரிய உயர்வைத் தரப்போகிறது! அதை பத்திரமாக எடுத்து வை...' என்று சொல்லி   நம்பிக்கையுடன் தன் முழு திறமையும் பயன்படுத்தி அன்று முதல்  உழைக்கத் தொடங்கினார்.  

அதன் பிறகு பல முயற்சிகளில் ஈடுபட்டு,  தொடர்ந்து கடினமாக உழைத்தார். சிறிது சிறிதாக அவர் கையில் பணப்புழக்கம் அதிகரித்தது. அந்தக் கிராமத்திலே "பெரிய பணக்காரர்' என்ற பெயரையும் புகழையும் பெற்றார். இவை எல்லாம் அந்தத் துளையிட்ட நாணயத்தின் மகிமைதான் என்று இப்போதும்  அவர் நம்பிக் கொண்டிருந்தார்.

பல ஆண்டுகள் கழித்து ஒரு நாள் அந்த நாணயத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்தது. கணபதி தன் மனைவியை அழைத்து ""அந்த அதிர்ஷ்ட நாணயத்தை வெளியே எடுத்துப் பார்க்க ஆசையாக இருக்கிறது... அதைக் கொண்டு வா'' என்றார். 

உடனே மனைவி, "வேண்டாம்' என்றார். 

"ஏன்'  என்றார் கணபதி. 

""சில ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் துணியில் முடிந்து வைக்கச் சொன்ன அந்தப் பழைய நாணயத்தை நான் முடிந்து வைக்க மறந்து விட்டேன். மறுநாள் அந்த சட்டைப் பையை உதறியபோது அந்த நாணயம் எங்கோ உருண்டோடி விட்டது. பலமுறை தேடியும் கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக வேறு ஒரு நாணயத்தை அந்தத் துணியில் மடித்து வைத்தேன். ஆனால், நீங்கள் இந்த நாணயத்தால்தான் அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று நம்பினீர்கள்.  ஆனால், இவை எல்லாம் உங்கள் உழைப்பால்தான் கிடைத்தது. நாம் அதிர்ஷ்டத்தை நம்பி வாழக்கூடாது; உழைப்பை நம்பித்தான் வாழ வேண்டும் என்பதை உங்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் இதுநாள் வரை நாணயத்தை மாற்றி வைத்ததைப் பற்றி உங்களிடம் கூறவில்லை. அதற்காக என்னை மன்னித்து விடுங்கள்'' என்றாள்.

""நீ மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை. பல நாட்கள் உழைக்காமல் உன்னை வறுமையில் வாடவிட்டேன்! எனக்கு உழைப்பின் உயர்வை எடுத்துக்காட்டிய நீ தான் என் அருமை மனைவி'' என்றார். 

""ஓட்டை நாணயத்தில் இருந்த அந்த "உஉ' எழுத்துகளுக்கு "உழைப்பே உயர்வு' என்றும் பொருள் கொள்ளலாம் இல்லையா?'' என்றாள் கணபதியின் மனைவி!
கணபதியில் முகத்தில் சிரிப்பு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com