Enable Javscript for better performance
கருவூலம்: இமாச்சல் பிரதேசம்!- Dinamani

சுடச்சுட

  

  கருவூலம்: இமாச்சல் பிரதேசம்!

  By கே.பார்வதி, திருநெல்வேலி டவுன்.  |   Published on : 13th July 2019 01:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sm7

   

  இமாச்சல் பிரதேசம் 1971 - இல் உருவாக்கப்பட்ட வட இந்திய மாநிலம். ஆங்கிலேயர்கள் காலத்தில் பஞ்சாப் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 55673 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. இம்மாநிலம் இமயமலையில் அமைந்துள்ளதால் மலையும் மலை சார்ந்த பகுதிகளையும் கொண்டதாகக் காணப்படுகிறது. இம்மாநிலத்தில்தான் இந்தியாவின் புகழ் பெற்ற மலை வாழிடங்களாகிய சிம்லா, மணாலி, குலு, தர்மசாலா போன்ற சுற்றுலாத்தலங்கள் உள்ளன. 

  இம்மாநிலத்திற்கு கிழக்கில் திபெத் உள்ளது. பிற பகுதிகளில் ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, உத்திரப் பிரதேசம், உத்திரகண்ட் ஆகிய மாநிலங்கள் சூழ்ந்து உள்ளன. இதன் தலைநகரம் சிம்லா. இங்குள்ள மக்கள் ஹிந்தி, பஞ்சாபி, காங்கிரி, பஹாரி, மண்டியாலி ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர். மாநிலத்தின் 90 % மக்கள் கிராமங்களிலேயே வசிக்கின்றனர். 

  புகழ் பெற்ற சுற்றுலா தலங்கள்!

  சிம்லா!

  சியாமளா தேவி என்னும் இந்து கடவுளைப் போற்றும் வகையில் சிம்லா எனப் பெயர் பெற்றது. குன்றுகளின் ராணி என்று ஆங்கிலேயர்களால் புகழப்பட்ட இடம். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அரசு பிரதிநிதி மாளிகை, ஆக்லாந்து இல்லம், கோர்டான்  கோட்டை, பீட்டர் ஷாஃப் இல்லம் கெய்ட்டி திரையரங்கம்  என பல கம்பீரமான அழகு கொண்ட கட்டிடங்கள் சிம்லாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் திகழ்கின்றன. இங்குள்ள கிறைஸ்ட்  சர்ச் இந்தியாவின் பழமையான தேவாலயம். 

  சிம்லாவிலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள 8000 ஆயிரம் உயரம் கொண்ட ஜக்கு மலை உச்சியிலிருந்து சிம்லா நகரின் அற்புதமான அழகையும், இமயமலையின் அழகையும் பார்த்து ரசிக்கிலாம். 

  குலு!

  இந்நகரம் குலு பள்ளத்தாக்கில் பீஸ் நதிக் கரையில் உள்ளது. பனிச்சிகரங்கள், பள்ளத்தாக்குகள், புல்வெளிகள், நதிகள், நீரோடைகள், காடுகள், தோட்டங்கள் என "ஷோஜா' என்ற இடத்திலிருந்து பார்த்து ரசிக்கலாம். 

  மேலும் இப்பகுதியில் உள்ள ரகுநாத் கோயில் சிறப்பு வாய்ந்தது. இங்கு கொண்டாடப்படும் "தசரா' விழா மிகவும் பிரசித்தி பெற்றது. 

  குலு பகுதி, சிருங்கிரிஷி ஆலயம், பதேஷ்வர் ஆலயம், மஹாதேவ் ஆலயம், மகாதேவ் தீர்த், பிஜி மஹாதேவ் ஆலயம், தேவதா நரசிங் சோயில், போன்ற இந்து கோயில்கள், புத்த மடாலயங்கள், சீக்கிய குருத்வார்கள் நிறைந்த இடம். "கடவுளின் பூமி' எனப் போற்றப்படுகிறது. 

  ராமாயணம், மஹாபாரதம் மற்றும் புராணங்களில் குலு பள்ளத்தாக்கு பற்றிய குறிப்புகள் உள்ளன. புத்தத் துறவி யுவான் சுவாங் கி.பி. 634 - இல் இப்பகுதிக்கு வந்துள்ளார்.  

  இங்கு மணிகரன் வெந்நீர் ஊற்றுகள், ரெப்சன், கசோல், நகார் நகரம், போன்றவையும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள் ஆகும்.

  தி கிரேட் இமாலயன் தேசிப் பூங்கா!

  இப்பூங்கா 1171 ச.கி.மீ. பரப்பளவிற்கு 1500 மீ. முதல் 6000 மீ. வரையிலுமான உயரத்தில் மலைச் சரிவுகளில் பரந்து விரிந்துள்ளது. இப்பூங்கா நீல ஆடுகள், பனிச்சிறுத்தை, இமாலயன் பிரவுன் கரடி, இமாலயன் டார், மஸ்க் மான்கள், உள்ளிட்ட 375 வகையான உயிரினங்களும், எண்ணற்ற தாவர வகைகளும் சூழ்ந்துள்ளன. 

  மணாலி!

  குலு வாலியின் வடக்கு முனையில் உள்ள ஒரு சிறிய நகரம் மற்றும் சுற்றுலாவிற்கு புகழ் பெற்ற ஒரு முக்கியமான மலை வாசஸ்தலம். மணாலி கடல் மட்டத்திற்கு 1950 மீ. உயரத்தில் உள்ளது. 

  இந்து மத கோட்பாடுகளின்படி சப்த ரிஷிகளின் இருப்பிடமாகக் கருதப்படுவதால், கலாச்சார ரீதியாக மிகவும் சிறப்பு வாய்ந்த இடம். 

  நாகர் கோட்டை, ஹிடிம்பா தேவி ஆலயம், ரஹீலா அருவி, சோலாங் பள்ளத்தாக்கு ஆகியவை பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாகும். 

  இவை தவிர மணாலி பனிச்சறுக்கு, ஹைகிங், மலையேற்றம், பாராகிளைடிங், ராப்டிங், டிரெக்கிங் மற்றும் மலை பைக் ஓட்டம் ஆகிய துணிகர சாகச விளையாட்டுகளுக்கும் பெயர் பெற்றது. 

  கால்கா - சிம்லா தொடர் வண்டிப் பாதை!

  2 அடி அகலம் கொண்ட குறுகலான மலைவழி ரயில் பாதை. கால்கா என்னும் இடத்தில் இருந்து 96 கி.மீ. தொலைவில் உள்ள சிம்லாவிற்கு செல்கிறது. 1906 - இல் கட்டப்பட்டது. இப்பாதையில் 806 பாலங்களும், 103 குகைகளும் உள்ளன. இந்த ரயில் பாதை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 

  ஷிவாலிக் புதை வடிவப் பூங்கா!

  சுகெய்ட்டி நகரில் (சிர்மெளர் மாவட்டம்) உள்ள இப்பூங்காவில் 85 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட புதை வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

  பக்ரா அணை!

  பொதுவாக, பக்ரா - நங்கல் அணை என்று சொல்லப்படுகிறது. இவை ஒரே அணை அல்ல. இரண்டு அணைகள்! நங்கல் அணை பஞ்சாபிலும், பக்ரா அணை இமாச்சலப் பிரதேசத்திலும் உள்ளது. பக்ரா என்ற கிராமத்தில் உள்ளதால் பக்ரா அணை எனப்படுகிறது.  பக்ரா அணை 518.25 மீ. நீளமும், 9.1 மீ. அகலமும், 225.55 மீ. உயரமும் கொண்டது. இதுதான்ஆசியாவின் இரண்டாவது உயரமான அணை! 

  இதன் நீர்த்தேக்கமான கோவிந்த்சாகர் 168 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. இதில் 9340 மில்லியன் கன மீட்டர் தண்ணீரை சேமிக்கும் அளவுக்குப் பெரியது. இதுதான் இந்தியாவின் மூன்றாவது பெரிய நீர்த்தேக்கமாகும். 

  சோலாங் பள்ளத்தாக்கு!

  ஸ்னோ பாயின்ட் என அழைக்கப்படும் சோலாங் பள்ளத்தாக்கு மணாலிக்கு 13 கி.மீ. தொலைவில் உள்ளது. 

  மஸ்ரூர் குடைவரைக் கோயில்கள்!

  காங்க்ராவின் தெற்குப்பகுதியில் 15 பாறைகளைக் குடைந்து இக் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. நுணுக்கமான சிற்பங்களுடன் காணப்படுகின்றன. இவை 8 - ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

  ரோதங் குகைப்பாதை!

  இந்த குகைப் பாதை "ரோதங் கணவாய்'  பகுதியில் உள்ளது. மணாலியிலிருந்து 51 கி.மீ. தொலைவில் உள்ளது. குலு பள்ளத்தாக்கையும், லாஹெளல் மற்றும் ஸ்பிடி பள்ளத்தாக்கையும் இணைக்கிறது. மணாலி தேசிய நெடுஞ்சாலை இதன் வழியாகச் செல்கிறது. 

  பிர் பாஞ்சல் மலையின் கிழக்குப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் 10 மீ அகலத்தில் 8.8 கி.மீ. நீளத்திற்கு இரு வழிப் பாதையாக குகைப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதுவே சாலைப் போக்குவரத்துக்காக அமைக்கப்பட்ட மிகவும் நீளமான இந்தியாவின் குகை வழிப் பாதை! மேலு 3000 மீ. உயரத்தில் அமைந்த உலகின் நீளமான குகைப்பாதை இதுதான்!

  சிந்து நீர் ஒப்பந்தம்!

  சிந்து நதி நீரைப் பயன்படுத்துவது குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே 1961 - இல் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதன் படி சிந்து, செனாப், ஜீலம் ஆகியவை மேற்குப் பகுதி ஆறுகள் எனவும், பியாஸ், சத்லஜ், ராவி ஆகியவை கிழக்குப் பகுதி ஆறுகள் எனவும் பிரிப்பட்டுள்ளது. கிழக்குப் பகுதி ஆறுகளின் நீரை முழுக்கப் பயன்படுத்த இந்தியாவிற்கு உரிமை வழங்கப்பட்டது. மேற்குப் பகுதி ஆறுகளின் நீர் பாகிஸ்தானுக்கு உரியது.

  ஜுவாலாமுகி தேவி கோயில்!

  இக்கோயில் 51 சக்தி பீடங்களில் ஒன்று. ஜுவாலாமுகி என்ற ஊரில் உள்ளது. இங்குள்ள பாறைகளிலிருந்து நெருப்பு உமிழ்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நெருப்பே தேவி உருவமாக பூஜிக்கப்படுகிறது.  

  ஊசிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா!

  இது குளிர் பாலைவனப் பகுதியில் உள்ளது. 3500 மீ. முதல் 6000 மீ. உயரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் அரிய வகை மூலிகைத் தாவரங்கள், அரிய வகை உயிரினங்களும் காணப்படுகிறது. 

  ரியோ பர்கில்!

  6816 மீ. உயரம் கொண்ட  மாநிலத்தின் உயரமான சிகரம்! 

  இவற்றைத் தவிர பல மனதுக்கு இதமான சூழல் கொண்ட தர்மசாலா, டால்ஹெசி, ஹஜ்ஜீயர், கல்பா கிராமம், சோலன், கசோலி, பாலாம்பூர், ஜோகிந்தர் நகர், சுஜான்பூர், ராம்பூர், கர்சாங், பார்வதி பள்ளத்தாக்கு, ஸ்பிடி பள்ளத்தாக்கு என பல சுற்றுலா இடங்கள் உள்ளன. ஆப்பிள், ப்ளம், பேரிக்காய், பாதாம், ஆப்ரிகாட் பழங்கள் போன்றவை இங்கு பிரபலமானவை. 

  இதமான கோடைக்காலம், பனிமழை பொழியும் குளிர்காலம், உயரமான  பனி மூடிய சிகரங்கள், பாப்போரை மலைக்க வைக்கும் பள்ளத்தாக்குகள், அடர்ந்த வனங்கள், உறைய வைக்கும் கடும் குளிருடன் ஓடும் நதிகள், நீரோடைகள், பசுமையான புல்வெளிகள், பெரிய ஆப்பிள் மற்றும் பேரிக்காய்த் தோட்டங்கள் என அற்புதமான இயற்கை எழில் கொஞ்சும் மாநிலம் இது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai