சுடச்சுட

  

  பாராட்டுப் பாமாலை!  46: மதிப்புறு முனைவர்!  மாணவர் மதுரம்! 

  By குரு.சீனிவாசன்  |   Published on : 13th July 2019 02:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sm8

   

  சேலம் வாழப் பாடியதன் 
  சிற்றூர் முத்தம் பட்டியிலே 
  சீலம் கொண்ட செல்வகுமார்
  செல்வம், "மதுரம் ராஜகுமார்!'

  ஆங்கிலப் பள்ளி அவன் கனவு!
  அதற்கெதி ரானது வீட்டு நிலை!
  தாங்க வியலாப் பொருட் செலவு....
  தந்தையின் ஊதியம் மிகக் குறைவு!

  ஆட்டிப் படைக்கும் ஏழ்மையினால் 
  ஆங்கில மோகம் அகன்றதுவே!
  நாட்டம் வந்தது நற்றமிழ்மேல்!
  நடந்தான் அரசுப் பள்ளிக்கு!

  கொஞ்சும் குழவிப் பருவத்தில் 
  குமர குருவுடன் சம்பந்தர் 
  செஞ்சொற் கவிதை செய்ததுபோல் 
  செய்தான் இன்றுநம் மதுரகவி!

  அகவை யிப்போது பத்தேதான்
  ஆற்றல், திறனில் முத்தானான்!
  நிகழும் வகுப்பும் ஜந்தேதான்!
  நினைத்தால் வடிப்பான் சிந்துகவி!

  பட்டம், பந்துடன் பம்பரங்கள்
  செல்பேசி, மனதில் சேராமல்
  பட்டை தீட்டிப் பைந்தமிழில் 
  பாக்கள் வடிக்கப் புறப்பட்டான்!

  பாடும் தலைப்பைப் பகர்ந்ததுமே
  பறப்பான் கற்பனைத் தேர் ஏறி!
  ஈடில்லாத இன்சுவையில் 
  ஈவான் நொடியில் எழிற்கவிதை!

  நான்காம் வகுப்பில் அவன் சமைத்த 
  நற்கவி ஐம்பத்தைந்தாகும்!
  பாங்காய்த் தொகுத்து நூலாகப் 
  படைத்தனர் நல்விதை முதல் தளிராய்!

  மழலை வழியும் இளங்கொடியில் 
  மலர்ந்த கவிதை மாலையினால் 
  பழகு தமிழிளம் பாவலனாய்ப்
  பைந்தமிழ் ஆர்வலர் போற்றினரே!

  வாழப்பாடியின் தமிழ் மன்றில் 
  வளர்கவி மதுரம் ராஜகுமார்
  தாழாது தொடர்ந்து தரப்பட்ட 
  தலைப்பில் பொழிந்தான் கவிதைமழை!

  மொத்தம் பத்து மணிநேரம்!
  மொழிந்த பாக்கள் நூற்றுக்குமேல்!
  சித்தம் மகிழ்ந்த பெருமன்றம்
  சேர்த்தது விருதாய் "இளங்கம்பன்!'

  பன்னாட் டுத்தமிழ்ப் பல்கலைக்கழகம்
  பால கவியைப் பாராட்டி
  எந்நாட் டிலும்இவன் புகழ்விளங்க 
  ஈந்தது மதிப்புறு முனைவர் பட்டம்!

  அமிழ்தாம் அழகுக் கவி புனையும் 
  அரும்புக் கவிஞன் திறனறிந்து 
  தமிழக முதல்வரும் சான்றோரும் 
  தந்தனர் ஆயிரம் பாராட்டு!

  மதிப்புறு முனைவர் மதுரகவி!
  மாணவர் திலகம் மதுரகவி !
  பதிப்புறும் பற்பல காவியங்கள் 
  படைத்தினிது வாழ்க பல்லாண்டு!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai