மரங்களின் வரங்கள்!: பூவரசம் மரம்
By - பா.இராதாகிருஷ்ணன் | Published On : 13th July 2019 02:15 PM | Last Updated : 13th July 2019 02:15 PM | அ+அ அ- |

என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?
நான் தான் பூவரசம் மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் தெஸ்பீசியா பாபுல்னியா என்பதாகும். நான் மால்வேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு கல்லால் பூப்பருத்தி, புவிராசன், அர்த்தநாரி, ஈஸ்வரம், பம்பரக்காய், பூளம் என வேறு பெயர்களுமுண்டு. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக நானிருப்பதால் என்னை பூவரசு என்று அழைக்கிறார்கள். சிலப்பதிகாரம், மணிமேகலையிலும் என்னைப் பற்றிய குறிப்பிருக்கு.
மலரும் நினைவுகள், துக்கம் என் தொண்டையை அடைக்கிறது. உங்கள் தாத்தா, பாட்டிகள் பள்ளி விடுமுறை நாட்களில், மதிய வேளையில் என் மர நிழலில் தான் விளையாடுவாங்க. அப்போது, என் இலையைப் பறித்து, சுருட்டி பீப்பீ, பீப்பீ என ஊதி விசில் போல் சத்தம் எழுப்புவார்கள். அது எனக்கு அமுத கானமாக இருக்கும். அவர்களைப் போல் நீங்கள் இல்லையே ஏன்?
நான் எப்போதும் தழைத்து, பசுமையான தோற்றத்தை உங்களுக்குத் தருவேன். நான் காற்றை சுத்தப்படுத்தும் சூழலியல் நண்பன். வளியெங்கும் பரவிக் கிடக்கும் கரியமிலவாயுவை உறிஞ்சி, அதிகளவில் ஆக்சிஜனை வெளியிடுவேன் என்பதால் நம் முன்னோர்கள் என்னை கிராமங்கள் தோறும் நட்டு வளர்த்தார்கள். நான் கடுமையான புயலிலும் சாய மாட்டேன். சாய்ந்தாலும், சாய்ந்த நிலையிலேயே வளருவேன். அந்தக் காலத்தில் பீரோ, கட்டில் போன்றவை செய்வதற்கு என் மரத்தின் பலகையைத் தான் பயன்படுத்தினாங்க. குழந்தைகளே, புவி வெப்பமயமாதலுக்கு என் அழிவும் ஒரு காரணம் என்பதை மறந்துடாதீங்க. என் இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் முதலிவை மருத்துவ குணம் நிரம்பியவை.
என் இலைகள் நன்செய் நிலங்களுக்கு பசுந்தழை உரமாக பயன்படுகிறது. என் மரத்தைப் பலகைகளாக அறுத்துப் பெட்டி, வண்டிச் சக்கரம், படகு, நாற்காலி, வண்டி, துப்பாக்கிக் கட்டை, வேளாண் கருவி, இசைக் கருவி, தளப் பலகை ஆகியவற்றைச் செய்யலாம். என்னை விறகாகவும் பயன்படுத்தறாங்க. உறுதியான என் மரக்கட்டை நீரால் பாதிப்படையாது. நார் கயிறாக பயன்படுகிறது. பட்டையிலிருந்து சிவப்பு சாயம் தயாரிக்கலாம்.
நான் சிறந்த தோல் மருத்துவர். தோல் தொடர்பான பல நோய்களுக்கு என்னிடம் மருந்து இருக்கு. என் காயை உடைத்தால் மஞ்சள் நிறத்தில் திரவம் கசியும் அதை தழும்பு, சொறி, சிரங்கு, படை, விஷக்கடி உள்ள இடங்களில் தடவினால் முற்றாக குணமாகும். என் பழுத்த இலை இரும்புச் சத்து நிறைந்தது. இதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்துக் குடித்தால் மஞ்சள் காமாலை நோய் குறையும். நூறு வருடமான என் மரத்தின் வேரை நன்கு உலர்த்திப் பொடி செய்து முறைப்படி உண்டு வந்தால் தொழுநோய் குணமாகும்.
என் மரப்பட்டையை உலர்த்தி தீயிலிட்டு எரித்து, சாம்பலைத் தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து சொறி, சிரங்கு, கரப்பான், உடல் அரிப்பு உண்டான பகுதிகளில் தடவினால் அவைகள் இருந்த இடம் தெரியாது. என் மரப்பட்டைக்கு உடலை உறுதியாக்கும் தன்மை உண்டு.
மரங்கள் தான் மனித வாழ்வின் ஆதாரம். என்ன குழந்தைகளே எங்கே புறப்பட்டுடீங்க, என் மர நிழலில் விளையாடி, பீப்பி ஊதவா ?
நான் மதுரை மாவட்டம், புதுப்பட்டி, அருள்மிகு சடச்சியம்மன், கோயம்புத்தூர் மாவட்டம், வரப்பாளையம், பொன்னூத்தம்மன் ஆகிய திருக்கோவிலில் தலவிருட்சமாக இருக்கிறேன். என் நட்சத்திரம் கேட்டை. சவுமிய தமிழாண்டை சேர்ந்தவன். நன்றி குழந்தைகளே ! மீண்டும் சந்திப்போம் !
(வளருவேன்)