அன்பான சமுதாயம்

சுகி.. சின்ன டேபிள் மேல வெச்சிருக்கிற நோட்டுக்குள்ள கொஞ்சம் பணம் இருக்குதே , ஏது-டா ..?
அன்பான சமுதாயம்

பாரதி புத்தக நிலையம்

அரங்கம்
காட்சி : 1
 இடம் : சுகேஷின் வீடு.
 நேரம் : காலை 7.10
 மாந்தர் : சுகேஷ் மற்றும் அம்மா.
 
 சுகேஷ் மரத்தடியில் பல் துலக்கியவாறு நிற்கிறான்.
 அம்மா : சுகி.. சின்ன டேபிள் மேல வெச்சிருக்கிற நோட்டுக்குள்ள கொஞ்சம் பணம் இருக்குதே , ஏது-டா ..?
 (சுகேஷ் விரைவாக வாய் கொப்பளித்துவிட்டு வருகிறான்)
 சுகேஷ் : ம்மா.. அதெல்லாம் என்னோடதுதான்.. அப்பப்போ கிடைக்கிறதை சேர்த்துவெச்சிட்டு வர்றேன் ..
 அம்மா : எதுக்கு-டா ..?
 சுகேஷ் : ஒரு முக்கியமான செலவு இருக்கு .. தேவைப்படுது.
 அம்மா : ம்ம்ஸ்ஸ்ஸ்.. அதென்னன்னுதான் சொல்லேன்..
 சுகேஷ் : சொன்னா திட்டுவீங்க.. இல்ல அவசியம் தெரிஞ்சே ஆகணும்னா ஒரு ஆறுநூறு ரூபா கொடுங்க.. சாயங்காலமே வாங்கிட்டு வர்றேன் ..
 அம்மா : ஆறுநூறு ..? ம்ம்ம்,வேண்டாம்ப்பா.. அவ்ளோ எல்லாம் இப்போ இல்ல.. எதாயிருந்தாலும் நீ சேர்த்து வெச்சே வாங்கிக்கோ ..
 (சுகேஷ் பணத்தைப் பெற்று எண்ணத் தொடங்குகிறான்.)
 
 காட்சி : 2
 இடம் : பாரதி புத்தக நிலையம்.
 நேரம் : காலை 8.50
 மாந்தர் : கவின் மற்றும் சுகேஷ் .
 கவின் : நூத்தி முப்பத்தஞ்சு இருக்கு..
 சுகேஷ் : இதை அட்வான்ஸா வெச்சுக்கிட்டு அந்த புத்தகத்தைக் கொடுங்க-ண்ணா . .
 கவின் : எந்தப் புத்தகத்த சொல்றே?
 சுகேஷ் : உலக சிறுவர் கதைகள்-ணா.. ரொம்ப நாளா சொல்லிட்டிருக்கனே.. நான் தினம் இதுவழியாத்தான் போவேன்.. 49 ஸ்டாப்தான்.. அப்பப்போ, கொஞ்சம் கொஞ்சமா காசு கொடுத்துடறேன் ...
 கவின் : அப்டியெல்லாம் எதுக்குடா..? நீ மொத்தமா கொண்டுவந்து கொடு .. தரேன் .. அது வரைக்கும் ஒரு லுக்-குக்காக அந்த புக் இருந்துட்டுப் போகட்டுமே ..
 சுகேஷ் : ம்ம்ம்ம், சரி-ண்ணா.. ஆனா, கண்டிப்பா வேற யாருக்கும் கொடுக்கக்கூடாது ..
 கவின் : ம்ம்ம்..
 (கவினுடைய திறன்பேசி ஒலிக்கிறது)
 
 கவின் : ஹலோ, தாத்தா.. மணி எட்டு.. சாப்டீங்களா?
 (சுகேஷ் ஏமாற்றமாகத் திரும்புகிறான்)
 
 காட்சி : 3
 இடம் : வெவ்வேறு இடங்கள்
 நேரம் : வெவ்வேறு நேரங்கள்
 மாந்தர் : சுகேஷ் மற்றும் கவின்.
 
 முதல் வாரம் : கண்ணாடிச் சுவரின் வழியாகப் புத்தகம் தெரிகிறது. சுகேஷ் அதைப் பார்த்தபடி சாலையில் செல்கிறான்.
 இரண்டாம் வாரம் : சுகேஷ் காசுகளை எண்ணிப் பார்க்கிறான். அவன் முகம் சோர்வடைகிறது.
 மூன்றாவது வாரம் : சுகேஷ் தலை நிமிர்ந்து புத்தகத்தைப் பார்த்தவாறு அசையாமல் நிற்கிறான். கவின் சுகேஷைப் பார்க்கிறான்.
 
 காட்சி : 4
 இடம் : பாரதி புத்தக நிலையம்.
 நேரம் : மாலை 4.45
 மாந்தர் : கவின், ஒரு வாடிக்கையாளர், ரஞ்சித் மற்றும் சுகேஷ்.
 
 கவின் : வாங்க, சார் .. என்ன வேணும்?
 (சட்டைப் பையிலிருந்து ஒரு மடித்த தாளை எடுக்கிறார்)
 
 வாடிக்கையாளர் : இந்த லிஸ்ட்ல எழுதியிருக்கிற எல்லாத்தையும் கொடுங்க.. கூடவே ஒரு ரீம் ஃபுல் ஸ்கேப் பேப்பர்..
 கவின் : ரஞ்சித்.. சாரை கவனிங்க ..
 (ரஞ்சித் வந்து தாளை வாங்கிச் செல்கிறான்)
 கவின் : வேற, சார் ?
 (வாடிக்கையாளர் அமைதியாகத் திரும்பி புத்தக வரிசையைப் பார்க்கிறார். சுகேஷ் வருகிறான்.)
 சுகேஷ் :அண்ணா.. முந்நூறு ரூபா சேர்த்திட்டேன் .. ஃபிஃப்டி பர்செண்ட் .. இன்னும் கொஞ்ச நாள்ல ஃபுல்லா சேர்த்திருவேன் ..
 கவின் : நல்லதுதான்.. இப்போ என்ன வேணும்?
 சுகேஷ் : ப்ளாக் ஸ்டிக், லேமினேடட் ஷீட்.. அப்றம் லேபிள் .. அண்ணா, அயர்ன்மேன் ஸ்டில் இருந்தா
 ஃபர்ஸ்ட் அதைக் கொடுங்க ..
 (கவின் பின்னால் திரும்பி ஸ்டிக் பென்னை எடுக்கிறான்)
 வாடிக்கையாளர் : தம்பி.. இந்த புஸ்தகம் அபூர்வமான பதிப்பு ஆச்சே .. என்ன விலை-ப்பா?
 ரஞ்சித் : ஆறுநூறு ரூபா, சார்!
 (கவின்குமாரும் சுகேஷும் ஒரே சமயத்தில் ஒரே திசையில் திரும்புகிறார்கள்.
 வாடிக்கையாளர் கையில் "உலக சிறுவர் கதைகள்' என்ற புத்தகம் இருக்கிறது)
 
 காட்சி : 5
 இடம் : சுகேஷின் வீடு.
 நேரம் : இரவு 10.10
 மாந்தர் : சுகேஷ் மற்றும் அம்மா.
 
 (சுகேஷ் ஒருக்களித்துப் படுத்திருக்கிறான். அவன் கண்கள் திறந்திருக்கின்றன)
 அம்மா : சுகி.. தட்ல சாப்பாடு அப்படியே இருக்கு .. ஏன் சாப்பிடாம வந்து படுத்துட்ட..?
 (சுகேஷ் அமைதியாக இருக்கிறான்)
 அம்மா : என்னடா, ஒடம்பு கிடம்பு சரியில்லையா?
 (சுகேஷ் எதுவும் பேசாமல் இருக்கிறான்)
 அம்மா : கண்ணெல்லாம் வீங்கிப் போய்.. என்னாச்சுடா, சொன்னாத்தானே தெரியும் ..
 (சுகேஷ் கண் சிமிட்டாமல் பார்க்கிறான்)
 அம்மா : ஒரு சந்தோஷமான விஷயம்.. நமக்கு இன்னிக்கி கொஞ்சம் வியாபாரம் நல்லா போச்சு .. இந்தா,.. நானூறு ரூபா.. நீ என்னமோ வாங்கணும்னு சேர்த்துவெச்சிட்டிருந்தல.. நாளைக்கே முடிஞ்சா வாங்கிக்கோ..
 (அம்மா சுகேஷின் கைகளில் பணத்தை வைக்கிறார்....சுகேஷின் கண்களில் கண்ணீர் வருகிறது)
 
 காட்சி : 6
 இடம் : கவினின் வீடு.
 நேரம் : இரவு 10.10
 மாந்தர் : கவின் மற்றும் தாத்தா.
 
 (தாத்தா அமர்ந்திருக்கிறார். கவின் சுகேஷ் பற்றி அன்று மாலை வரை நடந்தவற்றைச் சொல்கிறான்)
 
 தாத்தா : அதுக்கு அப்புறம்?
 கவின் : நான் எதுவும் சொல்லல.. அமைதியாத்தான் இருந்தேன் .. ஆனா, அந்தப் பையன் கோவிச்சுக்கிட்டு திரும்பிப் போயிட்டான் .. எனக்கு என்னமோ மாதிரி ஆயிடுச்சு .. மனசே சரியில்ல, தாத்தா..
 தாத்தா : அந்தக் கஸ்ட்டமர்கிட்ட என்ன சொன்னே ?
 கவின் : என்ன சொல்றது.. ரேர் எடிஷன், தாத்தா கிட்ட கேட்டுட்டு சொல்றேன்னுட்டேன்.. இப்போ, நான் என்ன பண்ணட்டும் , தாத்தா ?
 தாத்தா : இதுல யோசிக்க ஒன்னுமே இல்ல.. புத்தகத்தை அந்தப் பையனுக்கே கொடுத்திரு ..
 கவின் அமைதியாகப் பார்க்கிறான்.
 தாத்தா : ஆமா, கவின். அதுதான் சரி.. அவன் சின்னப் பையன் .. இந்த வயசுல பல விஷயங்கள் அவன் மனசுல ஆழமா பதிஞ்சிரும் .. நீ அதைக் கொடுத்திட்டா காசு பணத்தை விட அன்புதான் முக்கியம்னு அவன் புரிஞ்சுக்குவான்.. அவனும் மத்தவங்ககிட்ட அனுசரணையா நடந்துக்க இது ஒரு காரணமா இருக்கும்..
 கவின் தாத்தாவின் முகத்தை இமைக்காமல் பார்க்கிறான்.
 தாத்தா : கவின், அறிவாளிங்களையும் பணக்காரங்களையும் உருவாக்கறதை விட அன்பானவங்கள உருவாக்கறதுதான் நம்ம எல்லாத்தோட முதல் கடமை.. அதுக்கான வாய்ப்பு ஒவ்வொருத்தரும் கண்டிப்பா கிடைக்கும்.. அதை சரியா பயன்படுத்திக்கிட்டோம்னா, அன்பான சமுதாயம் ஒன்னு நிச்சயமா உருவாகும் .. அதுதான் பாதுகாப்பான சமுதாயமும்கூட..
 (கவின் கண் சிமிட்டாமல் பார்க்கிறான்)
 
 காட்சி : 7
 இடம் : பாரதி புத்தக நிலையம்.
 நேரம் : காலை 7.45
 மாந்தர் : கவின், ரஞ்சித் மற்றும் சுகேஷ்.
 
 கவின் : ரஞ்சித்.. டெய்லியும் புக் கேட்டு வருவானே .. அந்தப் பையன் இன்னிக்கு வந்தானா ?
 ரஞ்சித் : இல்ல, சார் ..
 கவின் : சரி.. இன்னும் 49 போகல, ஸ்டாப்ல அவன் இருப்பான்னு நினைக்கிறேன்.. கொஞ்சம் பார்த்துக் கூட்டிட்டு வர்றியா ?
 ரஞ்சித் : ஓ.கே., சார்.
 (கவின் காத்திருக்கிறான்.....ரஞ்சித் சுகேஷை அழைத்துக்கொண்டு வருகிறார்)
 கவின் : தேங்க்ஸ், ரஞ்சி .. என்னாச்சு தம்பி, ஏன் காலையில திரும்பிப்பார்க்காமயே போயிட்டே ?
 சுகேஷ் அமைதியாக இருக்கிறான்.
 கவின் : ம்ம்ம் .. சரி, புரியுது .. விஷயம் என்னன்னா , நேத்து நான் அந்த புக்கை கொடுக்கவேயில்ல..அது எங்கிட்டதான் இருக்கு..
 (கவின் புத்தகத்தை எடுத்துக் காட்டுகிறான்)
 சுகேஷ் :( முகம் மலர்ந்து) ஓ.. ஏன்-ண்ணா?
 கவின் : இத வேற யாருக்கும் தரக்கூடாதுனு நீதான சொன்ன, அதான்.. இந்தா.. வெச்சுக்கோ.. இனிமே இது உன்னோடது!........
 (கவின் புத்தகத்தை சுகேஷிடம் நீட்டுகிறான்..... சுகேஷ் ஆவலுடன் புத்தகத்தை வாங்குகிறான்)
 சுகேஷ் : ஆனா, அண்ணா.. இன்னிக்கு நான் காசு கொண்டு வர்லையே ..!
 கவின் : நேத்துத்தான் தெரிஞ்சுது . . இது ரொம்ப பழைய புக் -டா.. இதுக்கு காசெல்லாம் வேண்டாம்.. ஆனா, வாராவாரம் ஒரு கதை படிச்சுட்டு வந்து எங்கிட்ட சொல்லணும், டீலா?
 சுகேஷ் : டீல் }ண்ணா..
 பேருந்து சத்தம் கேட்கிறது.....சுகேஷ் புத்தகத்துடன் துள்ளிக்குதித்து ஓடுகிறான்......கவினும் ரஞ்சித்தும் புன்னகையுடன் சுகேஷைப் பார்க்கிறார்கள்.
 ( திரை)
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com