பகிர்ந்து கொள்வோம் வாருங்கள்!
By DIN | Published On : 27th July 2019 10:41 AM | Last Updated : 27th July 2019 10:41 AM | அ+அ அ- |

தினேஷின் உலகம்!
லக்ஷ்மி பாலசுப்ரமணியம் 7
தினேஷின் வீட்டிற்கு அருகே சாலை போட்டுக்கொண்டு இருந்தார்கள். ஜல்லியையும், உருகிய தாரையும் ஒரு இயந்திரம் கலக்கிக் கொண்டு இருந்தது. அதை சட்டிகளில் எடுத்து வந்து சாலையில் கொட்டிப் பரப்பினர். அதன் பின் ரோடு ரோலர் இயந்திரத்தை அதன் மேல் ஓட்டி சமன்படுத்திக் கொண்டிருந்தனர். இயந்திரங்களால் ஒரே இரைச்சல்! எங்கும் ஒரே தூசி!
தினேஷ் இவை யாவற்றையும் தன் வீட்டு மாடியில் இருந்த ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த சாலையை ஒட்டி எதிர்ப்புறம் இருந்த காலி மனையில் தற்காலிகமாகக் கூடாரம் போல் அமைத்திருந்தார்கள். சாலை போடும் பணியாளர்கள் அங்குதான் தங்கி இருந்தார்கள்.
"ஏம்ப்பா!.... இவங்கல்லாம் இப்படி ஒரு இடத்திலே தங்கி இருக்காங்க?'' என்று கேட்டான் தினேஷ்.
"அவுங்கல்லாம் அப்படித்தான்!..... எங்கே ரோடு போடறாங்களோ அந்த இடத்துலேதான் தங்குவாங்க!.... பாவம்!...'' என்றார் அப்பா.
சிறுவன் ஒருவன் தன் தம்பியையும், தங்கையையும் பொறுப்பாகப் பார்த்துக் கொண்டான். சாலை போடும் ஒரு பணியாளரின் மகனாக அந்தச் சிறுவன் இருக்க வேண்டும்!..... அவனுக்கும் தினேஷின் வயதுதான் இருக்கும்.
"அப்பா!....அந்தத் தம்பியும், தங்கையும் ரொம்பப் பாவம்ப்பா!.... அவங்களுக்கு விளையாட பொம்மையே இல்லை!.... என்னோட டாய்ஸ் எடுத்துக் கொடுக்கட்டுமா?....''
"ம்!.... தாராளமா குடு!'' என்றார் அப்பா.
உடனே தன்னிடமிருந்த பொம்மைகள் சிலவற்றை ஒரு பையில் போட்டு அவர்களிடம் கொடுத்தான். அந்தக் குழந்தைகள் அதை ஆவலோடு வாங்கிக் கொண்டனர். அவர்களது சந்தோஷம் இவனையும் சந்தோஷப்படுத்தியது.
உடனே வீட்டுக்குள் ஓடி வந்து ஃபிரிட்ஜைத் திறந்து பிஸ்கட் பாக்கெட் ஒன்றை எடுத்துச் சென்று அவர்களுக்குக் கொடுத்தான். அந்தச் சிறுவன் தன் தம்பிக்கும், தங்கைக்கும் அதைப் பிரித்துக் கொடுத்தான்.
"உன்னோட பேர் என்ன?'' என்று கேட்டான் தினேஷ்!
"என் பேர் முருகன்.... இவன் என் தம்பி சண்முகம்,.... இவ என் தங்கச்சி மல்லிகா!''
"ஹாய்!...'' என்று அவர்களை அறிந்து கொண்ட சந்தோஷத்தை கைகளை அசைத்துக் காண்பித்தான் தினேஷ்!
அவர்களும் கைகளை அசைத்துக் காண்பித்தனர்.
"இன்னும் எத்தனை நாள் இங்கே இருப்பீங்க?''
"பக்கத்தில் நாலைந்து ரோடு போட வேண்டியிருக்குது... இன்னும் ஐந்தாறு நாட்கள் ஆகும்!...அதுவரை இங்கேதான்!'' என்று தங்கள் தற்காலிக கூடாரத்தைக் காண்பித்தான் முருகன்.
பிஸ்கட்டை சந்தோஷமாக உண்ண ஆரம்பித்தார்கள்.
"வெரிகுட் தினேஷ்!.... இப்படித்தான் பகிர்ந்து சாப்பிடணும்!... ''
"எனக்குத்தான் தம்பி, தங்கை யாருமே இல்லையே?... அப்ப நான் யார் கிட்டே ஷேர் பண்ணிக்க முடியும்? ''
தினேஷின் அப்பா சிரித்தார்.
"தம்பி, தங்கை கிட்ட மட்டும் இல்லே!.... மத்தவங்க கிட்டக் கூடப் பகிர்ந்துக்கலாம்! '' என்றார்.
அன்றிலிருந்து தினேஷ் தன் புது நண்பர்களான, முருகன், சண்முகம், மல்லிகாவுக்கு ஏதாவது ஒரு பொருளைக் கொடுத்துக் கொண்டே இருந்தான்.
அந்த சாலைப் பணியாளர்களின் குழந்தைகளுக்காக தினேஷ் தன் பள்ளி நண்பர்கள், தெரு நண்பர்கள் ஆகியோரிடம் ஆடைகளைச் சேகரித்துக் கொண்டிருந்தான். அது ஒரு பெரிய பையில் நிரம்பி விட்டது.
பள்ளியிலிருந்து அன்று திரும்பி வந்தபோது சாலை போடும் பணி முடிந்திருந்தது! கன்னங்கறேல் என்று சாலை மின்னியது! சாலையில் நடக்க சந்தோஷமாக இருந்தது தினேஷுக்கு!
திடீரென்று நல்ல மழை!... தினேஷ் பிளாஸ்டிக் பையில் சேகரித்திருந்த துணிகளை எடுத்துக் கொண்டு வந்தான் தினேஷ்.
"என்னடா இது?'' என்று கேட்டாள் அம்மா.
"அதுவா?... "டிரெஸ்' மா!... ரோடு போடறாங்களே!... அவங்களோட பிள்ளைகள் முருகன், சண்முகம், மல்லிகாவுக்காக!'' என்றான் தினேஷ்.
அம்மா புன்னகைத்தாள்.
"அப்பா!.... நீங்க கொஞ்சம் வாங்க!.... வந்து இந்த டிரெஸ்ûஸ எல்லாம் விநியோகம் பண்ணணும்!''
"சரி வரேன்!... '' என்று கூறிவிட்டு தினேஷின் அப்பாவும் துணிகள் நிரம்பிய பையைக் கொண்டு வந்தார்.
"இந்த மழையிலே எங்கே போறீங்க?...எல்லாம் மழை விட்ட பிறகு போய்க்கலாம்!'' என்றார் பாட்டி.
"இரும்மா!... அவன் ட்ரெஸ்ùஸல்லாம் கொண்டு வந்திருக்கான்!... அவனோட ஃபிரெண்ட்ஸுக்குக் கொடுக்கணுமாம்!''
"குடையை எடுத்துக்கிட்டுப் போங்க!'' என்றார் பாட்டி.
"சரி, இதோ கொடுத்துட்டு வந்துடறோம்!''
முருகன், சண்முகம், மல்லிகா இருந்த கூடாரத்தை நோக்கி தினேஷும், தினேஷின் அப்பாவும் குடையுடன் விரைந்தார்கள்.
இருவரும் உடைகளை அவர்களுக்குக் கொடுத்தனர். அவர்களது பெற்றோரும் அப்போது அங்கு இருந்தனர். தினேஷின் அப்பா கொண்டு வந்த பையில் நான்கு புடவைகளும், சில வேஷ்டிகளும் இருந்தன. அவைகளையும் முருகனின் பெற்றோருக்குக் கொடுத்தனர்.
எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
"நாளைக்கு என்னோட பிறந்தநாள்!... நீங்க வந்துடுங்க!'' என்று எல்லோரையும் அழைத்தான் தினேஷ்!
"சரி!'' என்றான் முருகன்.
மழை நின்று போயிருந்தது. தினேஷின் அப்பாவுக்கு தினேஷை நினைத்துப் பெருமையாய் இருந்தது.
"இந்தாங்க இதையும் நீங்க மழைக்கு உபயோகப்படுத்திக்குங்க!'' என்று குடையையும் அவர்களிடம் கொடுத்துவிட்டார்.
மறுநாள்.....
தினேஷின் பிறந்தநாள்! அம்மாவும், அப்பாவும் வீட்டை நன்றாக அலங்கரித்திருந்தனர். நண்பர்களும், உறவினர்களும் அங்கு குழுமியிருந்தனர். பாட்டிகூட புதுப் புடவை அணிந்து கொண்டு "பளிச்' சென்று இருந்தார்.
"தினேஷ்!... கேக்கை வெட்டு!.... டயமாகுதில்லே!.... எல்லோரும் வெயிட் பண்றாங்க... எல்லோரும் வந்தாச்சு!.... இன்னும் யாருக்காக வெயிட் பண்றே?'' என்று கேட்டாள் தினேஷின் அம்மா.
"இரும்மா!.... முருகன், சண்முகம், மல்லிகா வரணுமே!...'' என்றான் தினேஷ்.
மூவரும் வந்து விட்டார்கள்!.... அவர்களைத் தன் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான் தினேஷ்! கேக் துண்டங்களை ஒரு தட்டில் வைத்து அவர்களுக்குக் கொடுத்தான்.
அனைவரும் "ஹாப்பி பர்த் டே டு யூ!'' என்று பாடினர். எல்லோரும் பரிசுகளை தினேஷிடம் வழங்கினர். அனைத்தும் அழகாக பேக் செய்யப்பட்டிருந்தன. முருகன் ஒரு பழைய செய்தித்தாளில் சுற்றப்பட்ட பொட்டலத்தை தினேஷிடம் கொடுத்தான். தினேஷ் அதை சந்தோஷமாய் வாங்கிக் கொண்டான். இரவு நேரமாகிவிட்டதால் அனைவரும் விடை பெற்றுக் கொண்டனர். வீடே "வெறிச்' சென்று ஆகிவிட்டது. தினேஷ் இரவு உணவை அருந்தினான். அவனுக்குக் களைப்பாக இருந்தது. பரிசுப் பொருட்களை அவன் பிரித்துப் பார்க்கவில்லை. படுத்து உறங்கிவிட்டான்.
மறுநாள் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றான். போகும்போது முருகன், சண்முகம், மல்லிகாவிடம் டாடா காண்பித்துவிட்டுச் சென்றான்.
மாலை வீடு திரும்பியபோது அங்கு சாலை போடும் தொழிலாளர்களின் கூடாரம் இல்லை!...
"அவங்களெல்லாம் எங்கேம்மா?''
"இங்கேஅவங்க வேலை முடிந்து விட்டது! அடுத்து வேறே எங்கேயாவது போயிருப்பார்கள்!... '' என்றார் அம்மா.
தினேஷ் நேற்று பரிசாக வந்தவைகளைப் பிரிக்க ஆரம்பித்தான். பலவிதமான பரிசுகள்! கலர் க்ரேயான்ஸ், ஒரு நாய்க்குட்டி பொம்மை, ஒரு பேட்டரி ரயில் வண்டி, ஜிக்ஜாக் பசில், சம்மரில் போட்டுக்கொள்ளும் கேப், என்று விதவிதமாய் பரிசுகள் வந்திருந்தன.
பிறகு.... பழைய செய்தித்தாளில் சுற்றப்பட்ட பொட்டலத்தைப் பிரித்தான். அதில்.... கறுப்புத் தார் உருண்டைகளால் செய்யப்பட்ட ஒரு அழகான யானை பொம்மை இருந்தது! அந்த யானைக்கு விபூதிப் பட்டையும் குங்குமப் பொட்டும் இடப்பட்டிருந்தது! அந்த யானையின் முதுகில் வெள்ளைக்கலரில் அழகாக டிசைன் வரையப்பட்டிருந்தது! அந்த பொம்மையை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் தினேஷ்! அதில் அன்பு என்னும் பரிசு அவன் மனதைச் சூழ்ந்து கொண்டது! இரவு வாசலை எட்டிப் பார்த்தான். சாலை பளிச்சென்று இருந்தது. "வெறிச்' சென்றும் இருந்தது! "அவங்களுக்கு "பர்த் டே ' எப்போது வரும்?.... அப்போ அவங்க என்னைக் கூப்பிட வருவாங்களா?''.... என்றெல்லாம் நினைத்தவாறு தூங்கிப்போனான் தினேஷ்!

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...