Enable Javscript for better performance
கருவூலம்- Dinamani

சுடச்சுட

  

  கருவூலம்: தில்லி யூனியன்பிரதேசம்! 

  By கே.பார்வதி, திருநெல்வேலி டவுன்.  |   Published on : 11th July 2019 01:08 PM  |   அ+அ அ-   |    |  

  sm6

  சென்ற இதழ் தொடர்ச்சி...


  தில்லி - யூனியன் பிரதேசம்!


  ஆசாத் ஹிந்த் கிராம் - தில்லி

  இந்திய தேசிய ராணுவத்தைத் தோற்றுவித்தவரான சுபாஷ் சந்திர போஸ் அவர்களை கெளரவிக்கும் விதமாக சுற்றுலா வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. 

  சுபாஷ் சந்திர போஸ் இந்த இடத்தில்தான் நாட்டை விட்டு வெளியேறுமுன் இந்திய வீரர்களின் முன்னிலையில் வீர உரையாற்றினார்.

  இந்த வளாகம் பாரம்பரியமான கைவினைக் கலையம்சங்களுடன் வட இந்திய கட்டடக்கலைப் பாணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இங்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பல ஓவியங்களும் விடுதலைப் போராட்ட நிகழ்வுகள் குறித்த ஓவியங்களும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்குள்ள குமிழ் கோபுரமும், அருங்காட்சியகமும் குறிப்பிடத்தக்கவை!

  அக்ரசேன் கி பாவ்லி! (படிக் கிணறு!)

  இந்திய தொல்லியல் துறையில் பாதுகாக்கப்படும் ஒரு சுவாரசியமான கலைச்சின்னம்தான் இந்தப் படிக்கிணறு! இக்கிணறு செவ்வக வடிவில் 15 அடி அகலம், 60 அடி நீளத்துடன் மழை நீர் சேமிப்புக்காக கட்டப்பட்டது. 103 படிக்கட்டுகளுடன் 5 அடுக்குகளாக அமைந்துள்ளது.

  தேசிய அருங்காட்சியகம்! (NATIONAL MUSEUM)

  நாட்டிலுள்ள மிகப் பெரிய அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்று! இங்கு கற்காலம் முதல் நவீன காலம் வரையிலான, பலவகையான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஓவியங்கள், ஆபரணங்கள், கலைப்பொருட்கள், தொல்பொருட்கள், ஆயுதங்கள், கவசங்கள், ஆவணங்கள் என சுமார் 2 லட்சம் பொருட்கள் இங்கு பாதுகாப்பாக காட்சிக்கு வைத்துள்ளனர்.

  தாமரைக்கோயில்!

  இது தில்லியில் உள்ள பாஹாபூர் என்ற கிராமத்தில் உள்ளது. பஹாய் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களுக்கான கோயில் இது. தாமரை வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் தாமரை கோயில் என்று அழைக்கப்படுகிறது. டெல்லியின் வசீகரமான இடங்களில் இதுவும் ஒன்று. 1986-இல் கட்டிமுடிக்கப்பட்ட இந்த ஆலயம், எண்ணற்ற கட்டடக்கலை விருதுகளை வென்றுள்ளது. நூற்றுக்கணக்கான பத்திரிகைகளில் இந்த ஆலயம் பற்றிய தகவல்கள் கட்டுரைகளாக வெளிவந்துள்ளது. 

  25 ஏக்கர் பரப்பளவில் சுற்றிலும் தோட்டத்துடன் அமைந்துள்ளது இந்த ஆலயம். அனைத்து மத மக்களும் எந்தவித பாகுபாடும் இன்றி இறைவனை இங்கு வழிபடலாம்! 

  பஹாய் சமயம் பற்றிய சிறு குறிப்பு!

  19-ஆம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசில் வாழ்ந்த பஹாவுல்லா அவர்களால் தொடங்கப்பட்ட சமயம். பஹாவுல்லா நல்ல செல்வாக்கும், செல்வமும் கொண்ட குடியில் பிறந்தவர். பின்னர் அனைத்தையும் துறந்து, மனித குல ஒற்றுமைக்காக தெய்வீகத் தகவல்களைக் கூறத் தொடங்கினார். இவருடைய கருத்துக்களை 160-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 6 மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர். 

  ""உலகம் ஒரே நாடு! மனிதர்கள் யாவரும் அதன் குடிகள்! ஒரே கடவுள், சமயங்களின் ஒற்றுமையே மனித குலத்தின் ஒற்றுமை!'' ஆகிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது பஹாய் சமயம்!

  ராஷ்டிரபதி பவன்!

  இந்தியாவின் முதல் குடிமகன் என்ற பெருமைக்குரிய குடியரசுத் தலைவரின் வசிப்பிடமும், அலுவலகமும் ராஷ்டிரபதி பவன் எனப்படும் குடியரசுத் தலைவர் மாளிகைதான்.

  1929-இல் கட்டிமுடிக்கப்பட்ட 340 அறைகளைக் கொண்ட, நாட்டின் பெருமைக்குரிய கட்டடம் இது! அன்றைய பிரிட்டிஷ் அரசு தலை நகரத்தை கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்ற தீர்மானித்தது. அதன் ஒரு பகுதியாக தில்லியில் கவர்னர் ஜெனரலுக்கான இல்லமாக இதைக் கட்டினார்கள். 

  19,000 ச.அடி பரப்பளவு கொண்ட அரண்மன இது. கிரேக்கக் கட்டடக் கலை, மற்றும் ராஜஸ்தான் கட்டடக் கலைகளை  ஆதாரமாகக் கொண்டு கட்டப்பட்ட இம்மாளிகையில் இந்து, புத்த, சமண மதக் கோயில்களின் வடிவங்களும் மாதிரியாகக் கொள்ளப்பட்டன. 

  இதன் பின் பகுதியில் மனதைக் கவரும் அழகிய மொகல் கார்டன் எனப்படும் தோட்டம் உள்ளது. உயரமான தூண்கள், வளைவுகள், அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தரைதளம் மற்றும் மேற்கூரைகள், கலைப்பொருட்கள், பெரிய தொங்கு விளக்குகள் என பிரமிக்க வைக்கும் பிரம்மாண்ட மாளிகை! 

  லால் சமணர் ஆலயம்!

  செங்கோட்டைக்கு எதிரே சிவப்பு நிற மணற்கற்களால் அமைந்துள்ளது இந்த ஆலயம்! மிகவும் பழமையானது. 

  அக்ஷர் தாம் கோயில்!

  மகான் சுவாமி நாராயணருக்காக கட்டப்பட்டது. யமுனை நதிக்கரையில் 141 அடி உயரம், 316 அடி அகலம், 370 அடி நீளம் கொண்டதாக அமைந்துள்ளது. 30 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது இந்தக் கோயில்! 234 தூண்களோடு, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெய்வ வடிவச் சிலைகள் கொண்டது. 11 அலங்கார வளைவுகளுடன், குவி மாடங்களும் உள்ளன. 148 பெரிய யானைகள் தாங்கி நிற்பதுபோல் கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலய வளாகத்திற்குள் ஆராய்ச்சி மையம், கண்காட்சி அரங்கம், 15 ஏக்கர் பரப்பளவில் பூங்கா முதலியவையும் உள்ளன.

  பிர்லா மந்திர் எனப்படும்லக்ஷ்மி நாராயணர் கோயில் தில்லி

  1939 - இல் ஜி.டி.பிர்லாவால் கட்டப்பட்டது. 7.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலய வளாகத்தில் மலர்களோடு கூடிய  பசுமையான பூங்காவும், நீரூற்றும் உள்ளன. புகழ் பெற்ற ஆலயம்.

  ஜாமா மசூதி!

  இந்தியாவில் இருக்கும் பள்ளி வாசல்களில் மிகவும் பெரியது. ஷாஜஹானால் கி.பி. 1656 - இல் கட்டப்பட்டது. பழைய தில்லியில் 25 ஆயிரம் பேர் தொழக்கூடிய வசதி உள்ளது! 41 மீ உயரம் கொண்ட 2 மினார்களும், 3 குவி மாடங்களும் உள்ளன.

  சாந்தினி செளக்!

  செங்கோட்டைக்கு எதிரே உள்ள வணிக மையம். கி.பி. 1650 ஷாஜஹானால் நிறுவப்பட்டது. 

  1500 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தில்லியின் புகழ் பெற்ற வணிக வளாகம்!

  இந்தியா கேட்!

  தில்லி மாநகரின் மையப் பகுதியில் உள்ள ஒரு முக்கியமான தேசியச் சின்னம்! 42 மீ. உயரமுள்ளது! ஆங்கிலேய ராணுவத்தின் சார்பாகப் போரிட்டு முதலாம் உலகப் போரில் இறந்த 70 ஆயிரம் வீரர்களின் நினைவாகவும், மற்றும் 1919 - இல் நடந்த 3 ஆவது ஆப்கானியப் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாகவும் எழுப்பட்டது இந்த நினைவுச் சின்னம்! ஆரம்ப  காலத்தில் "இந்தியப் போர் நினைவுச் சின்னம்' என்றே அழைக்கப்பட்டது. 1921 - இல் அடிக்கல் நாட்டப்பட்டு 1931 - இல் கட்டி முடிக்கப்பட்டது. 

  இந்த நினைவுச் சின்னத்திற்கு அடியில் "அமர் ஜவான் ஜோதி' எனப்படும் அணையா விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. இது 1971 - ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் போரில் உயிர் இழந்த வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டது. 

  தேசிய அறிவியல் மையம்! (NATIONAL SCIENCE CENTRE)

  எட்டு தளங்கள் கொண்ட இந்த அறிவியல் மையத்தில் கட்டடக்கலை, அறிவியல், உயிரியல்,  வரலாறு தொடர்பான் பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

  ஏர் ஃபோர்ஸ் அருங்காட்சியகம்!

  தில்லியில் பாலம் விமான நிலைய வளாகத்தில் உள்ளது இந்த அருங்காட்சியகம்! இங்கு விமானப்படை சம்பந்தப்பட்ட பல பொருட்களும், தகவல்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

  ராஜ் காட் - காந்தி

  இங்குதான் மகாத்மா காந்தியின் புனித உடல் 1948 - ஆம் ஆண்டு ஜனவரி 31 - இல் தகனம் செய்யப்பட்டது. இங்கு கறுப்பு சலவைக் கல்லால் உருவாக்கப்பட்டுள்ள பீட அமைப்பின் ஒரு முனையில் அணையா தீபம் எரிந்து கொண்டிருக்கிறது. 

  இதற்கு அருகில்தான் நேருஜி, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

  கும்ஹார் மண் பாண்டங்கள்!

  இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவில் மண்பாண்டங்கள் செய்யும் ஒரே இடம் கும்ஹார் கிராமம்தான்! இங்குள்ள சுமார் 700 குடும்பங்களும் கண்கவர் மண் பாண்டங்கள், அகல்  விளக்குகள், மற்றும் களிமண்ணால்  செய்யப்பட்ட அலங்காரப் பொருட்களைச் செய்து வருகின்றனர்! இவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது!

  - நிறைவு -

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai