எங்கே என் பொருட்கள்? 

தினேஷ் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் ஒரு சிறுவன். தினேஷின் உலகம் அலாதியானது.
 எங்கே என் பொருட்கள்? 

தினேஷின் உலகம்!
 லக்ஷ்மி பாலசுப்ரமணியம் 1

 தினேஷ் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் ஒரு சிறுவன். தினேஷின் உலகம் அலாதியானது. அவன் உலகம் சந்தோஷம், ஆர்வம் போன்ற பூக்களால் நிரம்பியது. நம்மைப் போலவே அவனும் சுற்றுச் சூழலை உற்று நோக்குகின்றான். வினை எழுப்புகிறான், விஷமம் செய்கிறான்.... அதன் மூலம் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் ஏதோ ஒன்றைக் கற்றுக் கொள்கிறான். நாம் எல்லோரும் அவனுடைய உலகத்தைக் காணலாம் வாருங்கள்!
 காலை நேரம். தினேஷ் மெல்லக் கண் விழித்தான். அவனை எப்பொழுதும் சீக்கிரம் எழுப்பிவிடும் அம்மா அன்று இல்லை.சமையல் அறையில் இருப்பாரோ? நேரே அங்கு ஓடினான்.
 பாட்டிதான் காய்கறிகளை நறுக்கிக் கொண்டும் சமைத்துக் கொண்டும் இருந்தார்.
 "அம்மா எங்கே பாட்டி?''
 "ஒங்க சித்திக்கு திடீர்னு உடம்பு சரியில்லையாம்!... அவுங்களை ஆஸ்பத்திரியிலே சேர்த்திருக்காங்களாம்!..... காலையில்தான் ஃபோன் வந்தது.... அவங்களைப் பார்க்க ஒங்க அம்மாவும், அப்பாவும் போயிருக்காங்க!....மதியம் வந்திடுவாங்க!'' என்றார் பாட்டி.
 தினேஷ் ஒன்றுமே செய்யத் தோன்றாமல் அப்படியே சிறிது நேரம் நின்றான்.
 "போ!.... மொதல்லே பல்லைத் தேய்ச்சிட்டு முகம் கழுவிட்டு வா!.... காப்பி தர்றேன்!'' என்றார் பாட்டி.
 ஐந்தாம் வகுப்பு தினேஷுக்கு எந்த வேலையும் செய்யத் தெரியாது. எல்லாம் அவன் அம்மாதான் செய்து தருவார். பாட்டிக்குப் பேஸ்டைக் கொஞ்சமாக எடுக்கத் தெரியவில்லை. நடுங்கும் கையை வைத்து அழுத்தவும் பேஸ்ட் அதிகமாக வெளியேறிக் கீழே சிந்தியது. ஒரு வழியாகப் பல் துலக்கி முகம் கழுவி விட்டு வந்தான்.
 ""பாட்டி, குளிக்கணும்!... என் யூனிஃபார்மை எடுத்துத் தர்றீங்களா?...'' என்று மறுபடியும் பாட்டியிடம் வந்தான்.
 "எனக்கென்னப்பா தெரியும்?... உன் யூனிஃபார்மை நீதான் எடுத்துக்கணும்!... நீ ஸ்கூல் போறதுக்குள்ளே சமைச்சு உனக்கு டிபன் கட்டித் தரணுமில்லே!'' என்றார்,
 துணிகள் அடுக்கி வைத்திருக்கும் அலமாரிக்கு வந்தான். அடுக்கி வைத்திருந்த துணிகளை வெளியே வீசினான். அவன் சீருடை அங்கே இல்லை! துணிகள் காய வைக்கும் மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தான்!.... அங்கும் இல்லை!.... வெள்ளிக் கிழமை மாலை சீருடையைக் கழற்றி மாடிப்படியின் கீழே போட்டது நினைவுக்கு வந்தது!அவன் சீருடை அங்கேயே இருந்தது. இரண்டு நாட்களாக வீட்டு வேலை செய்யும் பெண்மணி வரவில்லை. ஆகையால் ஒருவரும் இதைக் கண்டு கொள்ளவில்லை!
 சீருடையைக் கழற்றியவுடன் துணி துவைக்கும் இயந்திரத்தின் அருகில் இருக்கும் வாளியில் போடச் சொல்வார் அம்மா. தினேஷ் கேட்கவே மாட்டான். சில சமயம் கட்டிலின் மேல்!.... சில சமயம் கட்டிலின் கீழ்!.... சில சமயம் வரவேற்பு அறையில் இருக்கும் சோஃபாவின் மேல் என்று ஒரு நாளைக்கு ஒரு இடத்தில் இவன் சீருடைகளும், டையும் இன்ன பிற பொருட்களும் இறைந்து கிடக்கும்! அதிலும் கால் சட்டை ஓரிடம்!.... மேல் சட்டை ஓரிடம்!.... என்று! அம்மாதான் பொறுமையாக அனைத்தையும் தேடி எடுத்து வைப்பார்கள்!
 அவனிடம் இரண்டுக்கும் மேற்பட்ட சீருடைகள் இருந்தன. ஆனால் அவற்றை இஸ்திரி செய்பவரிடம் போட்டது நினைவுக்கு வந்தது. நேற்று ஞாயிற்றுக் கிழமை. இன்று திங்கட்கிழமை.... கடை திறந்து எல்லாத் துணிகளையும் இஸ்திரி செய்துகொண்டு வந்து கொடுக்க மதியத்திற்கு மேலாகிவிடும்!
 எனவே வண்ண உடை அணிந்து கொண்டான். சாப்பாட்டு மேஜை மேல் அமர்ந்துகொண்டு, ""பாட்டி சாப்பாடு கொண்டு வாங்க!'' என்று சத்தம் போட்டான்.
 ""மொதல்லே ஒன் தட்டை எடுத்துக் கழுவிக்கிட்டு வந்து உட்காரு!..... நான் அப்புறமா ஒனக்கு டிபன் தர்றேன்!....'' என்றார் பாட்டி.
 தினேஷுக்கு அலுப்பாக இருந்தது. அவன் அம்மாவிற்கு எந்த உதவியும் செய்ய மாட்டான். அலுவலகம் செல்லும் பரபரப்பிலும் அவரே இவன் தட்டை எடுத்துக் கழுவி உணவு தருவார். வேறு வழியில்லாமல் வெறுப்போடு தன் தட்டை எடுத்து அலம்பிக் கொண்டு வந்து அமர்ந்தான். பாட்டி இட்டிலிகளையும், சட்டினியையும் பரிமாறினார். அவற்றைத் தின்னத் தொடங்கியதும் அவனுக்கு விக்கல் ஏற்பட்டது.
 ""பாட்டி!... பாட்டி!... தண்ணி கொண்டு வாங்க!...'' கத்தினான். ஆனால் பாட்டியோ வரவேற்பு அறையில் இருந்த தொலைபேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். அவனுக்கு இட்டிலி தொண்டையில் சிக்கிக் கொண்டது.
 ""விக்!....விக்!.... விக்!.... விக்!''
 எப்படியோ சமாளித்து சமையலறைக்குச் சென்று ஃப்ரிட்ஜைத் திறந்தான். அதில் இருந்த தண்ணீர் பாட்டில்கள் எல்லாம் காலியாக இருந்தன! அம்மாதான் அவற்றை எப்பொழுதும் நிரப்பி வைப்பார். விக்கிக் கொண்டே குழாயிலிருந்து தண்ணீர் குடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டுப் போனான்.
 அடுத்து புத்தகப் பையைத் தேடும் வேட்டை ஆரம்பமானது. ஒருவாறு கிடைத்தது. ஆனால் பென்சில் டப்பா இல்லை! எப்படியோ எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டான். தலையில் எண்ணெய் தடவாமல் தானே வாரிக் கொண்டான். அவன் அம்மா சீவி விடுவது போல் அது இல்லை!
 அடுத்து அவன் தேடி எடுக்க வேண்டிய பொருள் காலுறைகள்! அவற்றைத் துவைக்கப் போடாமல் சனிக்கிழமை மாலை எங்கோ தூக்கி எறிந்தது ஞாபகம் வந்தது. இவன் இப்படித் தன் பொருட்களைத் தேடிக்கொண்டே இருப்பதால் வீட்டில் செல்லப் பெயர் வைத்தனர்!
 ""வேட்டைக் காரன்!''
 நல்ல பொருத்தமான பெயர்தானே நம் தினேஷுக்கு?... சாதாரண ரப்பர் காலணிகளை அணிந்து கொண்டு பள்ளிக்குச் சென்றான்.
 பள்ளிப் பேருந்து வந்தது. சீருடை அணியாமல் வந்த இவனை அனைவரும் விநோதமாகப் பார்த்தனர்.
 ""டேய் தினேஷ்!... இன்னிக்கு திங்கள் கிழமை! யூனிஃபார்ம் போடாம வந்தா என்ன ஃபைன்னு தெரியுமா உனக்கு?'' என்று கேட்டான் ரவி.
 "எங்க அம்மா இல்லேடா....'' என்றான் தினேஷ்.
 "அம்மா இல்லைன்னா என்ன?... நீயே உன் பொருட்களை எல்லாம் சரியா எடுத்து வெச்சுக்க வேணாமா?'' என்றான் ரவி.
 தினேஷுக்கு அப்போதுதான் தன் தவறு புரிந்தது! இறை வணக்கத்தின் போது சீருடை அணியாமல் வருபவர்களையும், தாமதமாக வருபவர்களையும் தனியே நிற்க வைப்பர். தினேஷுக்கு அவமானமாக இருந்தது. பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் அவனிடம், "இந்த மாசத்தோட "சிறந்த மாணவன்' பதக்கத்தை ஒனக்குக் கொடுக்கலாம்னு இருந்தேன்!.... நீ இப்படி அன்யூனிஃபார்ம்லே அதுவும் "மண்டே' அன்னிக்கு வந்திருக்கே!.... ஒனக்கு பதிலா யஷ்வந்துக்குத்தான் இந்த மெடலைக் கொடுக்கப் போறேன்!'' என்றார்.
 தினேஷுக்கு அடக்க முடியாமல் அழுகை வந்தது. ஒவ்வொரு மாதமும் ஒரு மாணவனை சிறந்த மாணவனாகத் தேர்ந்தெடுப்பர். அப்படித் தேர்ந்தெடுப்பவரே திங்கள் கிழமை கொடி ஏற்ற முடியும். யஷ்வந்த் தான் ஒவ்வொரு மாதமும் இந்தப் பெருமையை அடைகிறான். தினேஷ் வெகு நாட்களாக அந்தப் பெருமைக்குத்தான் காத்திருந்தான். இனி இந்த மாதம் முழுவதும் அவனுக்குக் கிட்டாது!
 நண்பன் ரவி அவனருகே வந்தான். ""தினேஷ்!....
 உனக்கு எல்லாமே ஒங்க அம்மாதான் செய்வாங்கன்னு சொல்லி இருக்கே!.... அம்மா இல்லாத சமயத்திலே உன் வேலைகளையெல்லாம் நீயே செஞ்சுக்கணும்! முதல் நாளே திட்டமிட்டு அடுத்த நாளைக்குத் தேவையான பொருட்களை ஒழுங்கா எடுத்து வைக்கணும்!.... எப்பவுமே யஷ்வந்த்துக்குத்தான் எல்லாப் பெருமையும் கிடைக்குது! ஏன் தெரியுமா?.... அவனுக்கு அப்பா, அம்மா கிடையாது! தன்னுடைய மாமா வீட்டிலேயிருந்தான் படிக்க வர்றான்! தன்னுடைய வேலைகளைத் தானே பொறுப்பா செய்யறான்! நல்லாப் படிக்கிறான்! ‘‘ என்றான்.
 அன்று மாலை, தினேஷின் வீடு பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தவன் தன் சீருடைகளைக் கழற்றிப் போடும் வாளியில் உடைகளைக் கழற்றிப் போட்டான். தனது புத்தக அலமாரியில் உள்ள பொருட்களை சீராக வைக்கத் தொடங்கினான்!
 தொடரும்....
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com