எட்டி மரம்! 

நான் தான் எட்டி மரம் பேசுகிறேன். ஐயோ, என் பெயர் கேட்டவுடன் ஏன் பயப்படறீங்க. எல்லா மரங்களும் மனிதர்களுக்கு நன்மை செய்யவே வளர்கின்றன. எங்களில் தீயவர்கள் என்று யாருமில்லை
 எட்டி மரம்! 

மரங்களின் வரங்கள்!
 அளவுடன் மருந்து!... மீறினால் நஞ்சு!..
 என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?
 நான் தான் எட்டி மரம் பேசுகிறேன். ஐயோ, என் பெயர் கேட்டவுடன் ஏன் பயப்படறீங்க. எல்லா மரங்களும் மனிதர்களுக்கு நன்மை செய்யவே வளர்கின்றன. எங்களில் தீயவர்கள் என்று யாருமில்லை. ஆனாலும், சில மரங்களை உங்கள் பயன்பாட்டிலிருந்து எட்டியே வைக்கறீங்க. அப்படிப்பட்ட மரங்களில் நானும் ஒருவன். எட்டி காய்த்தென்ன, ஈயாதார் வாழ்ந்தென்ன எனும் பழமொழி என்னிடமிருந்து நீங்கள் எட்டியே இருக்க வேண்டும் என்று சொல்கிறது. கோபமுள்ள இடத்தில் தான் குணமிருக்கும் என்று சொல்வாங்க. நான் பல வகையில் உங்களுக்கு உதவுகிறேன்.
 எனது தாவரவியல் பெயர் ஸ்ட்ரைக்னோஸ் நக்ஸ்வாமிகா என்பதாகும். நான் லாகாநியசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு காஞ்சிகை என்ற பெயரும் உண்டு. நானும் தெய்வீக மூலிகைகளில் ஒருவன். தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அமுதத்துடன் ஆலகால விஷமும் வெளிவந்தது. அந்த ஆலகால விஷத்தால் உலக மக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக சிவனே உண்டு, திருநீலகண்டன் ஆனார். அந்த ஆலகால விஷத்தின் அடையாளம் நான் என்கிறது புராணக் கதை.
 என் இலைகள் எப்போதும் பசுமையாக இருக்கும். ஒரு கன மீட்டர் மரத்தின் எடை சுமார் 960 கிலோ இருக்கும். நான் நீடித்து நன்கு உழைப்பேன். என்னை கரையான் அரிக்காது.
 முள்ளை முள்ளால் எடுப்பது போல், என் விஷம் பல்வேறு விஷங்களுக்கு முறி மருந்தாக பயன்படுத்தறாங்க. என் மரத்தின் வடபாகம் செல்லும் வேரின் பட்டையை உரித்து, அதை எலுமிச்சைப் பழச்சாற்றில் ஊற வைத்து எட்டி வேர்ச் சூரணம் தயாரிக்கிறாங்க. இது காலரா நோய்க்கும் பாம்புக்கடி, தேள்கடி போன்ற விஷக்கடிகளுக்கு பயன்படுகிறது. என் விதை, பட்டை, வேர், இலை, கனி, அனைத்திலும் அல்கலாய்டுகள், அதாவது இயற்கையாக தாவரங்களிலிருக்கும் வேதிப்பொருள்கள் உள்ளன. வயிற்று வலி, வாந்தி, அடிவயிற்று வலி, குடல் எரிச்சல், மன அழுத்தம், தலைவலி, மூச்சுத்திணறல் ஆகியவற்றுக்கு என்னிடமுள்ள அல்கலாய்டுகள் பயன்படுகின்றன. இந்த அல்கலாய்டுகளில் ஸ்டிரிக்னைன், புரூசைன் முக்கியமானவை. ஓடிஷா மாநிலம், புவனேஸ்வரத்தில் உள்ள மத்திய அரசின் சோதனைக் கூடத்தில் என் விதையிலிருந்து ஸ்டிரிக்னைன், புரூசைன் பிரிதெடுக்கிறார்கள்.
 இந்தியாவிலிருந்து பல லட்சம் டன் எட்டி விதைகள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஹாலந்து, இஸ்ரேல், மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் நான் நம் நாட்டிற்கு அதிக அளவில் அந்நிய செலாவணியை ஈட்டித் தருகிறேன். ஆனால், குழந்தைகளே நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். அந்த நாடுகள் நாம் அனுப்பும் அல்கலாய்டுகளை உயிரித் தொழில்நுட்பம் மூலம் மருந்துகளாக மாற்றி, நம் நாட்டுக்கே அனுப்பி அதிக விலையில் விற்பனை செய்கிறார்கள். கேரளாவில் என் பட்டையை அதிக அளவில் விற்பனை செய்றாங்க.
 ஹோமியோபதி மருத்துவத்தில் விஷ முறிவுகளுக்கு நக்ஸ் வாமிகா எனும் மருந்து கொடுப்பார்கள். அது என்னிடமிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. என் இலையை வெந்நீரில் போட்டு அந்த நீரில் குளித்தால் நரம்பு வலி குணமாகும். இளந்தளிரை அரைத்து வெண்ணெயில் கலந்து பூசினால் கட்டிகள் கரையும், வெப்பக் கொப்புளம் குணமாகும். தொழுநோயாளிகளுக்கு வழங்கப்படும் சில பஸ்பங்கள், செந்தூரம், மாத்திரைகள் ஆகியவற்றில் என் பழச்சாறு கலக்கப்படுகிறது.
 மரங்கள் நமக்கு நிழல் அளிப்பதுடன், இதமான காற்றினையும் அளிக்கிறது. மரங்களைக் காப்போம், மழை பெறுவோம். என்னுடைய நட்சத்திரம் அஸ்வினி. நான் தமிழாண்டு சித்ரபானுவை சேர்ந்தவன். நான் வேலூர் மாவட்டம், மேல்விஷாரம் ஸ்ரீவால்மீகீஸ்வரர் திருக்கோயிலில் தலவிருட்சமாக இருக்கிறேன். நன்றி குழந்தைகளே ! மீண்டும் சந்திப்போம் !
 (வளருவேன்)
 பா.இராதாகிருஷ்ணன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com