கூழ்!

கூழ்!

அரங்கம்
 காட்சி - 1

 இடம் - அரச சபை
 மாந்தர் - மன்னர் விஜயசிம்மர், மகாராணி மரகதவல்லி, இளவரசன் குழந்தை புலவேந்திரன், அமைச்சர் நல்லான் அவையோர்
 
 அமைச்சர் நல்லான் : மன்னா..திருவேங்கட திருப்பதி யாத்திரை சென்று வந்தேன். பெருமாள் பிரசாத லட்டு கொண்டு வந்துள்ளேன். அவையில் எல்லோருக்கும் தர அனுமதி தர வேண்டுகிறேன்.
 மன்னர் விஜய சிம்மர் : இதற்கு ஏன் அனுமதி அமைச்சரே. அதைப் பெற்றுக்கொள்ள நாங்கள் அல்லவா பாக்கியம் செய்திருக்க வேண்டும்.
 (அமைச்சர் வெள்ளித் தட்டில் பிரசாதத்தை நீட்ட மன்னர் சிறிது பிட்டு வாயில் போடுகிறார். மகாராணியும் அப்படியே செய்ய அவை முழுவதும் பிரசாதம் வினியோகிக்கப் படுகிறது)
 
 மன்னர் : ஆஹா அற்புதம். எம்பெருமான் கோவிந்தனின் நினைவு மேலிட இதைச் சாப்பிடும் போது அமுதமாய் இருக்கிறது. இதை விட சுவையான பொருள் ஏதும் உள்ளதா.. யாரேனும் சொல்ல முடியுமா.
 நல்லான் : தலைமைப் புலவரே.. மன்னரின் கேள்விக்குப் பதில் என்ன.
 புலவர் பாப்பைய கிழார்: ( எழுந்து வணங்கி) – இறைவன் திருப்பிரசாதத்துக்கு ஈடு இணை ஏது. ஆயினும் சுவை என வந்து விட்டால் எத்தனையோ பண்டங்கள் உள்ளன. இதற்கு பதில் உடனே என்னால் கூற இயலாது.. சற்று அவகாசம் வேண்டும்.
 மன்னர் : தலைமைப் புலவரே, கால அவகாசம் கேட்டால் இதில் விஷயம் ஏதோ இருக்க வேண்டும். அமைச்சரே இதையே ஒரு போட்டியாக அறிவியுங்கள். உலகில் எல்லாவற்றிலும் அதிக சுவை மிக்கது எது ? சரியான விடை எழுதுபவருக்கு பத்தாயிரம் கழஞ்சும் ஒரு வெள்ளி அகப்பையும் வழங்கப்படும்.
 அமைச்சர் நல்லான் : அப்படியே மன்னா.
 
 காட்சி - 2
 இடம் - நாற்சந்தி
 மாந்தர் - பறை அறிவிப்போன்
 சமையல் கார குப்பண்ணா,
 விகடகவி வெங்கண்ணா
 
 (பறை அடித்து அறிவிப்பு நா ற் சந்திகளில்...)
 
 பறை அறைவோன் : (டம்!... டம் !... டம்!... டம் !) நல்லோரே அறிவு சார் பொது மக்களே.. மன்னர் ஒரு சிந்தனைப் போட்டி அறிவித்துள்ளார்.. உலகிலேயே சுவைமிக்க பொருள் எது.. சரியான விடையும் முகவரியும் ஓலையில் எழுதி அரண்மனை வாசலில் உள்ள பெட்டியில் போடுங்கள். வென்றால் பரிசு பத்தாயிரம் கழஞ்சுகள்
 (மக்கள் இதை சிந்தித்த படி காதில் வாங்கிச் செல்கிறார்கள்.)
 
 கோவில் மடைப்பள்ளி சமையல்கார
 குப்பண்ணா: ( விகடகவி வெங்கண்ணாவிடம் ) வெங்கண்ணா.. நீ தான் சிந்தனையில் புலியாச்சே விடை தெரிந்தால் சொல்லேன்.
 விகடகவி வெங்கண்ணா : எனக்குத்தெரிந்த வரை உன் கையால் சமைக்காத எதுவுமே சுவையானது தான். பாவம் அந்த பெருமாள் கற்சிலையாக இருப்பதால் உன் கை பதார்த்தங்களை பார்ப்பதோடு சரி.
 குப்பண்ணா: என் கை புளியோதரையும் வடையும் அகில உலகிலும் பிரசித்தம் தெரியுமா. சரி அதையே எழுதிப் போடுகிறேன்.
 வெங்கண்ணா : இந்தக் கேள்விக்கு விடை அறிவது மிக க் கடினம்,, சரி சிந்திப்போம்.

காட்சி - 3
 இடம் : அரண்மனை
 மாந் தர் - மன்னர், மகாராணி,
 குழந்தை இளவரசன் புலவேந்திரன்
 
 மன்னர் :– மகாராணி, என்ன இது? ஒரு மண் கலயத்தில்.. என்ன உள்ளது அதில்? போட்டியில் நீயும் குதித்து விட்டாயா..
 மகாராணி : சேடிப் பெண் கூழ் மதிய உணவாகக் கொண்டு வந்திருந்தாள். அவளிடம் நான் உண்ண இருந்த அரண்மனை உணவைத் தந்து விட்டு அவள் கூழை சாப்பிட உள்ளேன்.
 மன்னர் : அப்படியா.. எனக்குக் சிறிது கிடைக்குமா ?
 மகாராணி : ஓ! சிறிது சுவைத்துப் பாருங்களேன். கெட்டி எருமைத் தயிர் சேர்த்து சின்ன வெங்காயம் மற்றும் தேங்காய்த் துவையலுடன் என்ன மணம். அரண்மனை அறு சுவை உண்டி சலித்து விட்டது எனக்கு!
 (அப்போது இதைக் காதில் வாங்குகிறான் குழந்தை புலவேந்திரன்)
 
 புலவேந்திரன் : அம்மா, அம்மா,..... அப்பாவுக்கு என் கையால் கூழ் ஊட்டுவேன்!
 மன்னர் : சரி. புலவேந்திரா, உன் கையால் ஊட்டி விடப்பா
 (குழந்தை கூழ் கலயத்தில் தன் கை விட்டு அளைந்து எடுக்கிறான்.... தத்தி தத்தி நடந்து வந்து மேலும் கீழும் சிந்த - மன்னர் வாயில் தன் பிஞ்சுக் கையால் ஊட்டி விட...)
 
 மன்னர் : ஆஹா! அற்புதமான சுவை. இளவலே.... இது கூழின் சுவையா அல்லது உன் கையால் ஊட்டிய சுவையா?
 மகாராணி : ( சிரித்தபடி..) இது நம் வேலையாட்களின் அன்றாட இல்லத்து உணவு. இதற்கு இத்தனை அலங்காரமா.
 (சிரிக்கிறாள்)
 
 (அப்போது இதையெல்லாம் கவனித்தபடி வருகிறார் விகடகவி வெங்கண்ணா)
 வெங்கண்ணா : மன்னா,.. வணக்கம்! போட்டியில் அரசு ஊழியனாகிய நான் கலந்து கொள்ளலாமா."
 மன்னர் : நன்றாகக் கலந்து கொள்ளேன்!
 விடையை எழுதி பரிசு வெல்ல உனக்கு எந்தத் தடையுமில்லை!"
 
 காட்சி - 4
 இடம் - அரசவை, மாந்தர்- மன்னர், அமைச்சர், அவையோர் விகடகவி வெங்கண்ணா
 
 மன்னர் : போட்டிக்கான ஓலைகள் வந்து விட்ட தா.
 அமைச்சர் : செப்புத் தவலை நிறைய விடை எழுதிய ஓலை நறுக்குகள் அவற்றில் சிறந்தவை எனக் கருதிய நான்கை தெரிவு செய்துள்ளது அறிஞர் குழு. சில ஓலைகளில் நகைச் சுவையாக க் கூட உள்ளது ஒரு ஆள் என் மனைவி கையால் சமைக்காத எதுவுமே சுவையானது என்கிறார்.
 மன்னர் : படியுங்கள் அமைச்சரே.. நம் தலைமைப் புலவர் பாப்பையக் கிழார் சரியான விடையைத் தேர்வு செய்யட்டும்.
 (அமைச்சர் ஒவ்வொன்றாகப் படிக்கிறார்)
 புலவர் ஞானவள்ளல் : ஓலை! விடை .. தாயின் கை உணவே சிறப்பு என்கிறார்!
 மன்னர் : ஆஹா பலே!
 அமைச்சர் : ( படிக்கிறார்) கவிஞர் கல்லாடன், விடை .. பசித்தவனுக்கு எது கிடைத்தாலும் சிறப்பே. பசியோடு உண்டால் எதுவும் ருசிக்கும்.. தாகத்தோடு குடித்தால் தண்ணீரும் இனிக்கும்.
 மன்னர் : உண்மை தானே.
 அமைச்சர் : மன்னா!.... நம் விகடகவி வெங்கண்ணா ஒரு விடை எழுதியுள்ளான்.
 மன்னர் : என்ன அது?
 அமைச்சர் : புதல்வரைப் பெறுதல் குறள் அறுபத்தி நான்கு என.....
 மன்னர் : புரியவில்லையே.... வெங்கண்ணா உன் விடை என்ன?
 வெங்கண்ணா : ( எழுந்து வணங்கி) வள்ளுவர் பெருமான் எழுதியதே என் விடை மன்னா.. அந்த அறுபத்து நாலாவது குறளைச் சொல்கிறேன் .......
 ......." அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
 சிறுகை அளாவிய கூழ். "
 தன் குழந்தை சிறு கையால் அளாவி ஆட்டிய கூழின் ருசி அமிர்தத்தை விட தாய் தகப்பனுக்கு இனிக்குமாம் அரசே.. இதை நான் சில நாட்கள் முன் நம் அரண்மனையிலேயே கண்ணால் கண்டேன்!. குழந்தை இளவல் தன் கையால் தங்களுக்கு கூழ் ஊட்டிய போது!....
 (அரசவையில் ஒரே நிசப்தம்.....சில வினாடிகளுக்குப் பின் பலத்த கரவொலி.....)
 
 தலைமைப் புலவர் : (எழுந்து) நான் என்ன முடிவைச் சொல்வது.. அவையின் கரவொலி சொல்லிவிட்டதே.. வெங்கண்ணா வள்ளுவரை வைத்து வென்றுவிட்டான்.
 
 (வெங்கண்ணாவுக்கு மன்னர் பரிசு வழங்க அவன் தோழன் சமையல்கார குப்பண்ணா மனதுக்குள் – இப்படி ஒரு குறள் இருக்கா.. சரியா படிக்காம விட்டுட்டேனே)
 
 (திரை)
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com