கருவூலம்: தாத்ரா மற்றும் நகர் ஹவேலி

இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் உள்ள 7 ஒன்றிய பகுதிகளில் (UNION TERRITORY) தாத்ரா மற்றும்நகர் ஹவேலி ஒன்றியப் பகுதியும் ஒன்று. 
கருவூலம்: தாத்ரா மற்றும் நகர் ஹவேலி


தாத்ரா மற்றும் நகர் ஹவேலி!  
DADRA AND NAGAR HAVELI

இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் உள்ள 7 ஒன்றிய பகுதிகளில் (UNION TERRITORY) தாத்ரா மற்றும்நகர் ஹவேலி ஒன்றியப் பகுதியும் ஒன்று. இதன் தலைநகரம் சில்வாசா நகரம்.

புவியியல்

இந்த ஒன்றியப் பகுதி ஒன்றுடன் ஒன்று தொடர்பு இல்லாத இரண்டு தனித்தனி நிலப்பகுதியாக அமைந்துள்ளது. மொத்தம் 491 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. 

நகர் ஹவேலி மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்திற்கு இடையே எல்லையில் ஏறக்குறைய  ‘C'  வடிவத்தில் சற்று பெரிய நிலப்பகுதியாக மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்கு அடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில்தான் சில்வாசா நகரம் உள்ளது. நகர் ஹவேலி பகுதியில் உள்ள மாக்வேல் (MAGHVAL) என்ற கிராமம் குஜராத் மாநில அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. 

தாத்ரா, 1 கி.மீ. தூரத்தில் வடமேற்குப் பகுதியில் குஜராத் மாநிலத்திற்குள் அமைந்துள்ளது. 

தமன் கங்கா நதி!

நகர் ஹவேலிக்கு ஊடாக பாய்ந்து தாத்ரா நகருக்கு தெற்காக எல்லையை ஒட்டிப் பாய்கிறது. சில்வாஸாவும் தாத்ராவும் தமன் கங்கா நதிக்கு வடக்குக் கரையில் அமைந்துள்ளது இந்நதி மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, அரபிக் கடலில் சங்கமிக்கிறது. இதன் துணையாறுகளான வர்ணா, பிப்ரி, சாகர்டோன்ட் ஆகிய மூன்று நதிகளும் இப்பகுதியில் இதனுடன் கலக்கிறது. அதனால் இப்பகுதி வளமான வண்டல் மண் பிரதேசமாகவே உள்ளது. 

இப்பிரதேசத்தின் தென் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாகிய சாயாத்ரி மலைகளால் சூழப்பட்டுள்ளது. இம்மலைப் பகுதி வடகிழக்குப் பகுதி வரை சூழ்ந்துள்ளது. அதனால் இந்த யூனியன் பிரதேசத்தின் 40 சதம் பகுதி வனப்பகுதியாகவே உள்ளது!

236 ச.கி.மீ.  பரப்பளவு நிலம் விவசாய  நிலமாக உள்ளது. உழைக்கும் மக்களில் 60 சதம் விவசாயத்திலேயே ஈடுபட்டுள்ளனர். நெல், கேழ்வரகு, கம்பு, கத்தரிக்காய், மாம்பழம் கொய்யா உள்ளிட்ட பல உணவுப் பொருட்கள் இங்கு விளைகின்றன. வனவளமும், விவசாயமும் முக்கியமான பொருளாதார ஆதாரமாக உள்ளன. 

சில்வாசா நகரத்தில் தொழிற்கூடங்களும், உற்பத்தித் தொழிற்சாலைகளும் நிறைந்து உள்ளது. இந்நகரம் அழகிய தோட்டங்களுக்கு பெயர் பெற்றது.
வரலாறு!

இப்பகுதியை ஆட்சி செய்த மராத்தியர்கள் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும், முகலாயர்களுடனான எதிப்பை வலுப்படுத்தவும், எண்ணினார்கள். அதற்காக 1779 - இல் போர்ச்சுகீசியர்களுடன் நட்பு ரீதியிலான ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.  அதன்படி தாத்ரா மற்றும் நகர் ஹவேலி பகுதியில் உள்ள 72 கிராமங்களின் வரியை வசூல் செய்யும் உரிமையை போர்ச்சுகீசியருக்கு அளித்தனர். இது 1783 - ஆம் ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வந்தது. பின் வந்த காலத்தில் 1818 - இல் மராத்தியர்களின் பலம் குறைந்து நலிவடைந்தனர். அதனால் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி பகுதி முழுமையாக போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகவே மாறிவிட்டது.  

போர்ச்சுகிசீயர்கள் இப்பகுதியின் வனவளத்தைக் கவர்வதில் ஆர்வம் காட்டினார்களே தவிர, நாட்டின், மற்றும் மக்களின் நலத்தில் ஆர்வம் காட்டவில்லை. அதனால் ஏற்பட்ட  போராட்டங்களின் காரணமாக 1954 - இல் விடுதலை பெற்றது. விடுதலை பெற்ற போதும் சுதந்திர இந்தியாவுடன் இணையாமல் தனிப் பிரதேசமாகவே இருந்தது. 1961 - இல் தான் இந்தியாவுடன் இணைந்து இந்தியத் திருநாட்டின் ஒருங்கிணைந்த பகுதியானது!

சுவாமி நாராயன் கோயில்!

சில்வாசாவிலுள்ள சுவாமி நாராயண் கோயில் கண்ணைக் கவரும் விதத்தில் அமைந்துள்ளது. 

தாடகேஸ்வரர் கோயில்!

பிந்த்ராபின் கோயில் எனப்பம் சிவன் கோயில் இங்கு பிரசித்தி பெற்றது இங்குள்ள மக்களால் இது தாடகேஸ்வரர் கோயில் என அழைக்கப்படுகிறது. 
மேலும் ஜலராம் கோயில், ஐயப்பன் கோயில்,  ஹனுமான் கோயில்களும் இங்கு பிரசித்தமானவை.

அவர் லேடி ஆஃப் பயடி சர்ச்!

போர்ச்சுகீசர் காலத்தில் கட்டப்பட்டது! எழிலான தோற்றம் கொண்டது! 

சில்வாஸா - வசானா லயன் சஃபாரி!

சில்வாசாவில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலம் இது! தலைநகரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த சஃபாரி, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியாகும். இங்கு புகழ் பெற்ற  ஆசியச் சிங்கங்கள் உள்ளன. 

பழங்குடியினரின் கலாச்சார அருங்காட்சியகம்!

சில்வாஸாவில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. இப்பகுதியில் உள்ள பழங்குடி  மக்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் புகைப்படங்களும், அவர்கள் பயன்படுத்திய வேட்டைக் கருவிகள், முகமூடிகள், இசைக்கருவிகள், சமையலறைப் பொருட்கள் உள்ளிட்ட பற்பல பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

நட்சத்திரா கார்டன்!

சில்வாஸாவில் பல அழகிய பூங்காக்கள் உள்ளன.  ஆனால் இது சற்று வித்தியாசமானதாக இந்திய ஜோதிடவியலின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஹிர்லா வன் கார்டன்!

பசுமையான வனப்பகுதியாக உள்ளது ஹிர்லா வான் கார்டன். பிரபலமான சுற்றுலாத்தலம் இது! மனதிற்கு அமைதி தரும் வண்ணமயமான மலர்த்தோட்டங்களும் நீர்வீழ்ச்சிகளும் கொண்டது.

ஐலேண்ட் கார்டன்!

இப்பூங்கா ஒரு ஏரியைச் சுற்றி அமைந்துள்ளது. மரத்தாலான பாலங்கள், குடிசைகள், படகு சவாரி, கண்களைக் கவரும் அழகிய மலர்த்தோட்டம்  என சற்று வித்தியாசமான இடம்! கண்களைக் கவரும் சிறந்த பொழுதுபோக்குக்கு ஏற்ற இடம்!

துத்னி!

சில்வாஸாவில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ளது. "தமன் கங்கா' ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள "மதுபன்' அணையினால் துத்னி நகரில் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இது நீர் விளையாட்டுக்கான பிரபலமான இடம்.

இவற்றை தவிரவும் இயற்கை எழில் கொஞ்சும் கான்வெல், வான் கங்கா ஏரி பூங்கா என பல அழகிய இடங்கள் உள்ளன. 

மேலும் சில தகவல்கள்!

இங்கு மராத்தி, குஜராத்தி, மொழிகளுடன் வட்டார மொழியான வார்லியும் பேசப்படுகிறது.

இந்த யூனியன் பிரதேசத்தில் பலவகைப்பட்ட பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். சுமார் 70 க்கும் மேற்பட்ட கிராமங்கள் இங்குள்ளன. ஒவ்வொரு இனத்திற்கும், அவர்களுக்கென்று தனித்தனியான மொழிகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள் ஆகியவை உள்ளன. இவர்கள் பேசும் மொழிகளுக்கு இன்று வரை எழுத்து வடிவம் இல்லை. இந்த யூனியன் பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகையில் 60 % இப்பழங்குடி மக்களே உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com