யாழினி பாப்பாவின் யோசனை!

​புது வீட்டுக்குக் குடிவந்ததிலிருந்து அம்மா மிகவும்  மன உளைச்சலாக இருந்ததை யாழினி பாப்பா கவனித்தாள்.
யாழினி பாப்பாவின் யோசனை!


புது வீட்டுக்குக் குடிவந்ததிலிருந்து அம்மா மிகவும்  மன உளைச்சலாக இருந்ததை யாழினி பாப்பா கவனித்தாள். காலையில் எழுந்து அம்மா காப்பி போட சமையல் அறைக்குச் சென்றால், வெளியே வர அரை மணி நேரத்தும் அதிகமாகும். அங்கே தரையில்  உருண்டு சிதறிக்  கிடக்கும் பாத்திரங்களை அடுக்கி வைப்பதற்கே அவருக்கு நேரம் சரியாக இருக்கும். 

 வீட்டைச் சுற்றி ஆங்காங்கே பெரிய பெரிய ஓட்டைகள் இருந்ததை யாழினி கவனித்கத் தவறவில்லை. 

""அம்மா.. .இது என்ன இவ்வளவு பெரிய ஓட்டைகள்?'' என்று  யாழினி பாப்பா அம்மாவிடம் கேட்டாள்.

""அதுவா பாப்பா.... அதுதான் எலிவளை!  எலிகள் வாழும் வீடு அவை. அவைகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. பாத்திரங்களை எல்லாம் உருட்டிவிடுகிறது. பூஜை அறையில் இருக்கும் விளக்குத்  திரியைக் கூட விட்டு வைப்பதில்லை...  உன்னுடைய டிராயிங் நோட்டைக் கூட கடித்து வைத்திருக்கிறது...இப்படியே விட்டால் துணிமணிகளையும் கடித்துக் குதறி விடுவமே...?'' என்று புலம்பினாள் அம்மா.

மறுநாள் பக்கத்துவீட்டுக் குட்டிப் பெண் கிறிஸ்டிக்கு பர்த்டே பார்ட்டி!   புதிதாகக் குடிவந்திருந்த இவர்களையும் கூப்பிட்டிருந்தார்கள்.  பக்கத்து வீட்டாரை நட்பாக்கிக் கொள்ள இது நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்த யாழினியின் அம்மா, அவளைக் கூட்டிக்கொண்டு பர்தே பார்ட்டிக்குச் சென்றார்.

பார்ட்டியில் கிறிஸ்டிக்கு விதவிமான விளையாட்டுப் பொருள்கள் பரிசாகத் தரப்பட்டன. அதில், சாவி கொடுத்தால் "மியாவ்' என்று  கத்திக் கொண்டே ஓடும் பூனை பொம்மையை ரசித்தபடி யாழினி பாப்பா இருந்தாள். வெகு நேரமாக 
கிறிஸ்டியும் யாழினி பாப்பாவும் அந்த பொம்மையோடு விளையாடிக் கொண்டிருந்தனர். 

ஒரு வாரம் கழித்து பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த யாழினி பாப்பா கையில் ஒரு பை வைத்திருந்தாள். அதன் தலைப்பகுதியைப் பிடித்தபடியே வந்தாள். பையின் ஓர் ஓரத்தில் ஓட்டை ஒன்றும் இருந்தது. 

""என்ன பாப்பா இது ?'' என்றாள் அம்மா வியப்பாகக் கேட்டாள்.

""அதுவாம்மா... இதை உங்களுக்காகத்தான் கொண்டு வந்தேன். உங்க எலிக் கவலையெல்லாம் இன்னியோட போச்சு...  இதோ பாருங்க.... இது வீட்டில் இருந்தா எலித் தொல்லையே இருக்காது...'' என்று பையை மெதுவாகத் திறந்தாள்.

பையிலிருந்து மெதுவாகத் தலையை நீட்டி எட்டிப் பார்த்த குட்டிப் பூனை, "மியாவ்... மியாவ்...' என்று இனிமையாக் கத்தியது.

""அட... இந்தக் குட்டிப் பூனையை எங்கே பிடிச்சே?  இதோட அம்மா தேடுமே... பாவம் பாப்பா... கொண்டுபோய் விட்டுடு'' என்று பதறினாள்.

""தேடாதும்ம்மா... ஏன்னா... இதோட அம்மா இறந்துடுச்சாம்...பாவம் அம்மா இறந்ததுனால...இரண்டு நாளா பசியில கத்திக்கிட்டே இருந்தது. அதனாலதான் நான்  ஒரு குட்டியைக் கொண்டு வந்தேன். இதை நாம பால் ஊத்தி அன்பா வளர்க்கலாம்மா... எனக்கும் விளையாட ஒரு பிரண்ட் கிடைச்ச மாதிரி இருக்கும்,  உங்களுக்கு எலித் தொல்லையும் இனி இருக்காது...எப்படி என் ஐடியா?'' என்று சிரித்தாள் யாழினி.

""எப்படி வந்தது இந்த ஐடியா உனக்கு?''

""கிறிஸ்டி பர்த்டேக்கு போனோமில்லையா... அங்கே ஒரு பூனைக்குட்டி பொம்மை இருந்தது. அதுக்கு சாவி கொடுத்து நாங்கள் விளையாடியபோது, அது "மியாவ் மியாவ்' என்று கத்தியதும், வீட்டுக்குள் இருந்த ஒரு எலி, தலைதெறிக்க பயந்து வெளியே ஓடியே போயிடுச்சி... அதைப் பார்த்துதான் எனக்கும் இந்த ஐடியா வந்தது. நமக்கு பொம்பையெல்லாம் வேண்டாம்மா... நாம உயிருள்ள பூனைக்குட்டியே வளர்ப்போம்மா... நீங்க அதுக்கு அம்மாவா இருங்க... நான் பிரண்ட்டா இருக்கேன்...'' என்று கூறி மெதுவாக அந்தப் பூனையை பையிலிருந்து வெளியே எடுத்து, தன் மடியில் உட்கார வைத்தாள் யாழினி.

யாழினி பாப்பா பிற உயிர்களிடத்தில் கொண்ட அன்பையும்,  சமயோஜித புத்தியையும் கண்டு மகிழ்ச்சி அடைந்த அம்மா,  யாழினி பாப்பாவின் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தமும் கொடுத்தாள்! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com