மகிழ்ச்சி கொண்டு வானில் பறந்தனர்!
By DIN | Published On : 02nd March 2019 10:25 AM | Last Updated : 02nd March 2019 10:25 AM | அ+அ அ- |

பாராட்டுப் பாமாலை! 36
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது
தேவ ராயன் பாளையத்தில்
தேனைப் போன்ற செய்தியாம்!
ஆவல் மிக்க ரவிகுமாரின்
அரிய செயலை அறிந்தோம்
உள்ளம் உணர்ந்த உவகை எல்லாம்
உலகில் பிறரும் உணர்ந்திடக்
கள்ளம் இன்றிக் கடமை ஆற்றும்
காந்தி அண்ணல் வழியிலே
வானில் பறக்கும் ஊர்தி ஏற்றி
வாழ்வில் மகிழ்ச்சி காட்டினார்!
தானும் பெற்றுத் தழுவிக் கொண்ட
தலைசிறந்த இன்பமே!
செல்வம் இருந்தும் உதவி செய்யத்
திரைகள் இடுவோர் நடுவிலே
இல்லை என்றே இருக்கும் ஏழை
இவரால் வானில் பறந்தனர்!
நூற்றுப் பத்து மூத்த மக்கள்
குழந்தை போலப் பறந்தனர்
கூட்டிச் சென்றார் விமானத்தில்
கோவை தொடங்கி சென்னையே!
கூர்ந்து வானில் பார்த்த ஊர்தி தன்னிலே
தானும் பறந்து போக முடியுமோ என்ற
கனவு உண்மை ஆகி விட்டதே! - மனம்
மகிழ்ச்சி கொண்டு வானில் பறந்தனர்!
அழைத்துப் போன ரவிக்குமார்
அன்பு கொண்ட நெஞ்சினர்!
உழைத்த பணத்தை ஊரார் மகிழ
உதவி செய்வோர் உயர்ந்தவர்!
ஆலந்தூர் கோ.மோகனரங்கன்
இப்பகுதிக்கு அனுப்பப்படும் கவிதைகளை புகைப்படச் சான்று,
அல்லது செய்திச் சான்றுகளோடு அனுப்புக...