அகில்குட்டியின் டைரி!: தோல்வி தரும் பாடம்!

பள்ளிக்கூட வருடாந்திர விழா!... அதில் நிறையப் போட்டிகள் வைப்பாங்க. நான் ஒரு பேச்சுப் போட்டியிலும், 500 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியிலும் கலந்து கொண்டேன்..
அகில்குட்டியின் டைரி!: தோல்வி தரும் பாடம்!

பள்ளிக்கூட வருடாந்திர விழா!... அதில் நிறையப் போட்டிகள் வைப்பாங்க. நான் ஒரு பேச்சுப் போட்டியிலும், 500 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியிலும் கலந்து கொண்டேன்.. பேச்சுப் போட்டி தலைப்பு "தோல்வி தரும் பாடம்!' ...நன்றாக ஓடிப் பயிற்சி செய்தேன்..... இரண்டு வருஷமா நான் முதலாவது  பரிசைத் தட்டிக்கொண்டு வந்தேன்! 

இன்று அந்த ஓட்டப்பந்தயப் போட்டி! ஓட்டப் பந்தயம் ஆரம்பமானது.... சென்ற வருடம் இரண்டாவதாக வந்த "சி' செக்ஷன் சரஸ்வதி இப்பவும் என் பின்னாடிதான் ஓடி வந்துக்கிட்டிருந்தா.... இன்னும் பத்துப் பதினஞ்சு அடிகள்தான் பாக்கி! நான் முதலாவதாகத்தான்  இருந்தேன்!......என்ன  ஆச்சோ தெரியலே....கால் ஒரு பக்கமா பிசகி தொபுக்கடீர்னு கீழே விழுந்துட்டேன்!..... வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்த சில பேர் பரிதாபப்பட்டாங்க.... சில பேர் சிரிச்சுட்டாங்க..... எனக்கு வருத்தமாகவும், கோபமாகவும் இருந்தது! அழுகை கூட வந்தது! என்னை முந்திக்கிட்டு எல்லோரும் ஓடிட்டாங்க.... என்னாலே எழுந்திருக்கக்கூட முடியலே!.... லட்சுமி டீச்சர்தான் ஓடு பாதையிலே வந்து என்னைத் தூக்கி விட்டாங்க....  முழங்காலில் நல்ல சிராய்ப்பு! ஸ்கூல்லே இருந்த முதலுதவிப் பெட்டியிலேயிருந்து கொஞ்சம் பர்னால் போட்டாங்க.... உடனே வீட்டுக்குப் போகச் சொன்னாங்க.... ஆனா நான் போகலே.... சரஸ்வதி முதலாவதா வந்திருக்கா.... அப்புறமா லதான்னு "பி' செக்ஷன்லே ஒரு பொண்ணு இரண்டாவதா வந்திருக்கா.... என்னோட வகுப்புத் தோழி ஜெயா மூணாவது!

சரஸ்வதி எங்கிட்டே வந்து, ""ரொம்ப வலிக்குதா?...'' ன்னு கேட்டாள். 

""ஆமா கொஞ்சம் வலிககுது!....'' ன்னு பதில் சொன்னேன். ஒரு வழியா வீட்டுக்குப் போனேன்.... எனக்கு ஓட்டப்பந்தயத்திலே எந்தப் பரிசும் கிடைக்காது! நாளைக்கு "தோல்வி தரும் பாடம்' ங்கிற தலைப்பலே நான் பேசணும்! ஹும்.... நான் எங்கே ஒழுங்கா பேசப்போறேன்!... அதிலும் எனக்குத் தோல்விதான் கிடைக்கும்னு தோணுது.

வீட்டுக்குப் போனேன். டாக்டர் கிட்டே அழைச்சுக்கிட்டுப் போய் சிகிச்சை செய்தாங்க...வீட்டில் எல்லோரும் என்னைப் பார்த்து ரொம்ப கவலைப்பட்டாங்க... மறுநாள் பேச்சுப் போட்டி!.... எனக்கு ஆர்வமே இல்லே!... ஆனா ஜானகி சித்திதான் என்னை ஊக்கப்படுத்தி என்னைப் பேச்சுப் போட்டிக்குத் தயார் செய்தாங்க....

மறுநாள், பள்ளிக்கூட  அரங்கத்தில் கூட்டத்தைப் பார்த்து,  ஜானகி சித்தி சொன்னபடி, ஆயிரக்கணக்கான முறை ஆராச்சியில் தோல்வி பெற்றுப் பின் வெற்றி கண்ட  எடிசன் மற்றும் எத்தனை முறை அறுந்தாலும் தளராமல் சிலந்தி வலையைப் பின்னிய சிலந்தியிடம் பாடம் கற்ற ஸ்காட்லாந்தின் ராபர்ட் தி ப்ரூஸ் எல்லா உதாரணங்களையும் காட்டி,  ....முயற்சி செய்யறதே பரிசு பெறுவது மாதிரிதான்!....அடுத்த வருஷமும் நான் ஓட்டப்பந்தயத்திலே கலந்துகிட்டு முதல் பரிசை வெல்ல முயற்சி பண்ணுவேன்' னு சொன்னப்ப கூட்டத்திலே பலத்த கைதட்டல் கேட்டது! பேச்சுப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைச்சுது!.... எல்லோரும் கை தட்டிப் பாராட்டினாங்க....மேடையிலிருந்து கீழே வந்தபோது நான் சரஸ்வதி, லதா, ஜெயா எல்லோரோடும் கை குலுக்கி என்னோட வாழ்த்துக்களைத் தெரிவிச்சேன்!....எனக்கும் ரொம்பப் பேர் வாழ்த்துத் தெரிவிச்சாங்க....வீட்டில் எல்லோருக்கும் சந்தோஷம்!.... நேற்றைக்கு இருந்த வருத்தம் எல்லாம் கரைஞ்சு போச்சு!... பேச்சுப் போட்டியிலே கூட நான் பரிசு வாங்காம போயிருந்தா நான் வருத்தப்பட்டிருக்க மாட்டேன்!

தோல்வியைத் தாங்கிக்கிற சக்தி இப்போ எனக்கு வந்திடுச்சு!இப்போவெல்லாம் நான் பரிசைப் பற்றிக் கவலைப்படறதில்லை... ஆனா அதுக்காக தோல்விக்கு பயந்துக்கிட்டு எதிலும் கலந்துக்காமயும் இருக்க மாட்டேன்!

ஜானகி சித்திதான் வெற்றிக்கும், தோல்வியைத் தாங்குற சக்திக்கும் காரணம்! பின்னே! முயற்சிதான் வெற்றிக்கு மந்திரம்னு சொல்லிக் கொடுத்தது அவங்கதானே!

அடுத்த வாரம் மாநில அளவில் ஒரு ஓவியப் போட்டி! அதற்கு நான் என் பெயரைக் கொடுத்தேன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com