அரங்கம்:  ஞாபகம்!

(அம்மாவிடம்) என்னம்மா இது?... அப்பா ஏன் இவ்வளவு வேகமா குளிக்கப் போறாரு?
அரங்கம்:  ஞாபகம்!

காட்சி - 1
இடம் - மீனாவின் வீடு,   
மாந்தர் - மீனா (ஆறாம் வகுபபு)
 யோகா (மீனாவின் அம்மா),  ஈஸ்வர் (அப்பா) 

(காலை வேளை. மீனா குளித்து விட்டு வருகிறாள்...)
மீனா : (அம்மாவிடம்) என்னம்மா இது?... அப்பா ஏன் இவ்வளவு வேகமா குளிக்கப் போறாரு?
அம்மா (யோகா)  : அவருக்கு இன்னிக்கு ஆபீஸூக்கு சீக்கிரமா போகணுமாம்.... இன்னிக்கு அவரோட  ஆபீஸூக்கு வெளியூரிலேர்ந்து உயரதிகாரி வர்றாராம்.... அதான்!
மீனா: இன்னிக்கு எனக்கு ஒரே ஒரு கணக்குலே சந்தேகம் இருக்கும்மா.... அவரு சொல்லித் தருவாரா? 
அம்மா: அவரு குளிச்சுட்டு வந்த உடனே நீயே கேட்டுக்கோ!.....

(அப்பா குளித்துவிட்டு வருகிறார்..... அவருடைய செல்போன் ஒலிக்கிறது....அப்பா செல்ஃபோனை எடுக்கிறார்... மீனா அப்பாவிடம் கணக்கு பற்றிய சந்தேகத்தைக் கேட்கக் காத்திருக்கிறாள்......)

அப்பா (ஈஸ்வர்) : ச்சே!..... பாதியில் சார்ஜர் தீர்ந்துடுச்சு!.... ம்ம்.... 
மீனா: அப்பா, எனக்கு ஒரே ஒரு கணக்குலே டவுட் இருக்குப்பா!.... கொஞ்சம் சொல்லித் தர்றீங்களா.... மீதி எல்லா ஹோம் ஒர்க்கையும் முடிச்சுட்டேன்....
அப்பா: அடப் பாவமே.... இன்னிக்கு எனக்கு ரொம்ப வேலை இருக்கே மீனா.... ஆறு ஃபைலை வீட்டுக்கு எடுத்து வந்திருக்கேன்.... முப்பது நிமிஷத்திலே பார்க்கணும்.... சாரிம்மா.....
மீனா: சரிப்பா,.... சாயங்காலம் முடியுமாப்பா?
அப்பா : ஓ.கே..... எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணு... 
மீனா: என்னப்பா....
அப்பா : இந்த செல்ஃபோனை சார்ஜர்லே போடறியா?....
மீனா : சரிப்பா!....
அம்மா : டிபன் ரெடி....வாங்க!....

(மீனா போனை சார்ஜரில் போடுகிறாள். மீனாவும், அப்பாவும் சாப்பிடுகிறார்கள்..... அப்பா சில ஆபீஸ் ஃபைல்களைப் பார்க்கிறார்... சில பேருக்கு கம்ப்யூட்டரில் மெயில் அனுப்புகிறார்.... அம்மா மதிய உணவைக் கட்டித் தருகிறாள்... மதிய உணவு டப்பா, தண்ணீர் பாட்டில்...  பர்ஸ்,  ஆபீஸ் கைப்பை சில எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ஸ்கூட்டரில்  அப்பா புறப்பட்டுச் சென்று விடுகிறார்....மீனா சாப்பிட்டுக் கைகழுவிக்கொண்டு ஹாலுக்குச் செல்கிறாள்.... ஹாலில் அப்பாவின் செல்போன் சார்ஜரில் இருக்கிறது!....) 
 
மீனா : அம்மா!.... அப்பா செல்போன் சார்ஜரில் இருக்கும்மா!..... அப்பா மறந்து வெச்சுட்டுப் போயிட்டாரும்மா!....
அம்மா : இப்போ என்ன செய்யறது?..... அவருக்கு ஒரு கால் வேறே வந்து கட்டாயிடுச்சு!.... ஏதாவது முக்கிய 
அழைப்பு வந்தா என்ன செய்யறது?.... அவரைத் தொடர்பு கொள்ளக் கூட முடியாதே!....
நான் வேணும்னா அப்பாவோட சிநேகிதர் நாராயணன் அங்கிளுக்குப் ஃபோன் செஞ்சு பார்க்கறேன்.... அப்பா போன்லே அவர் நம்பர் இருக்கு!.....அப்பா அவர் வீட்டைத் தாண்டித்தான் ஆபீஸூக்குப் போயாகணும்!....
அம்மா: அதனாலே என்ன பிரயோஜனம்?.... உனக்கும் ஸ்கூலுக்கு லேட்டாயிடுச்சுன்னா?...  
மீனா: எங்கிட்டேதான் சைக்கிள் இருக்கே!.... நாராயணன் அங்கிள் கிட்டே, அப்பாவை அவர் வீட்டுகிட்டே நிறுத்தச் சொல்லிடறேன்.... நான் சைக்கிள்லே போய் அப்பாவோட செல்ஃபோனைக் குடுத்துடறேன்....இருபது நிமிஷத்திலே திரும்பி வந்துடுவேன்..... ஸ்கூலுக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கே!.... 
அம்மா : சரி பண்ணிப்பாரு!.... 

(மீனா நாராயணன் அங்கிளுக்குப் ஃபோன் செய்கிறாள்.... நாராயணன் அங்கிள் அப்பாவைப் பார்த்தால் தடுத்து நிறுத்தி வைப்பதாக உறுதியளிக்கிறார்....மீனா, செல் போனுடன்  சைக்கிளை எடுத்துக் கொண்டு விரைகிறாள்)

காட்சி - 2
 இடம் - நாராயணன் வீடு
மாந்தர் - அப்பா, நாராயணன் , மீனா.

(நாராயணன், தன் வீட்டின் வெளியில் நின்று  கொண்டு மீனாவைப் பார்த்து நிறுத்துகிறார். )

மீனா : அங்கிள்!.... அப்பா வந்தாரா?..... 
நாராயணன் : வந்தாரும்மா.... நான் அவரை மடக்கி உள்ளே  உட்காரச் சொல்லியிருக்கேன்....உள்ளே வா!

(மீனா செல்ஃபோனை அப்பாவிடம் தருகிறாள்.... அதில் இரண்டு மெசேஜ் வந்திருக்கிறது!.... அதைப் பார்க்கிறார் மீனாவின் அப்பா ஈஸ்வர்)

நாராயணன் : நீ ரொம்ப சமத்துப் பொண்ணும்மா!.... டக்குன்னு யோசிச்சு இப்படி செல்ஃபோனைக் கொண்டு வந்து கொடுத்திட்டியே!.... வெரிகுட்!....
ஈஸ்வர் : எனக்கு ரெண்டு மெúஸஜ் வந்திருக்கு!
நாராயணன் : என்ன அது தெரிஞ்சுக்கலாமா?..... 
ஈஸ்வர் : ஒரு மெúஸஜ்!.... இன்னிக்கு வரதா இருந்த என்னோட உயரதிகாரி நாளைக்குத்தான் வர்றாராம்....இன்னைக்கு வரமுடியலையாம்!.... 
மீனா : இன்னொரு மெúஸஜ்?......
ஈஸ்வர் : எனக்கு பிரமோஷன்!.... இன்னைக்கு பதினோரு மணிக்குள்ள நான் மற்றொரு கிளையிலே ஜாயின் பண்ணனுமாம்!..... மீனாவுக்கு ரொம்ப தேங்ஸ் சொல்லணும்!.... இல்லேன்னா எனக்கு என்ன மெúஸஜ் வந்ததுன்னே தெரியாது!.... இப்ப எனக்கு டென்ஷன் ரொம்ப குறைஞ்சுடுச்சு!.... 
நாராயணன்: வெரிகுட்!.... சபாஷ்!.... நாளைக்கு ஸ்வீட்டோட வா ஈஸ்வர்!.....
ஈஸ்வர் : நிச்சயமா!.... அதுக்கென்ன!.....

(ஈஸ்வர் உயரதிகாரிக்குப் போன் செய்கிறார்....மெúஸஜைப் பார்த்து விட்டதாகவும்....காலையில் செல் போன் சார்ஜ் தீர்ந்து விட்டதால் தொடர்ந்து பேச முடியாமல் போனதற்காக வருத்தப்படுவதாகவும் சொல்கிறார்.... மேலும் பிரமோஷன் ஆர்டர் வந்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்.... இன்றே ஜாயின் பண்ணுவதாகவும் சொல்கிறார்....-- பிறகு நாராயணன் அங்கிளிடம் விடை பெற்றுக் கொண்டு ஸ்கூட்டரில் மீனாவை ஏறச் சொல்கிறார்.....)

மீனா : அப்பா எதுக்குப்பா நான் ஸ்கூட்டரிலே ஏறணும்!.... நான்தான் சைக்கிள் கொண்டு வந்திருக்கேனே...
ஈஸ்வர் : சரிம்மா..., அது நாராயணன் அங்கிள் வீட்டிலேதானே இருக்கு.... நீ வா,.... போகலாம் எனக்கு இன்னும் ரெண்டு மணிநேரம் இருக்கு.... உனக்கு அந்தக் கணக்கைச் சொல்லித் தரேன்.... 

காட்சி - 3
இடம் - மீனாவின் வீடு
 மாந்தர் - மீனா, அம்மா, அப்பா.

(மீனாவும் அப்பாவும் ஸ்கூட்டரில் வீடு வந்து சேர்கிறார்கள்!...)

மீனா : அம்மா ஒரு ஸ்வீட் நியூஸ்!.... 
யோகா(அம்மா) : என்ன நியூஸ்!.... என்னங்க திரும்பி வந்துட்டீங்க?.... 
மீனா : அப்பாவுக்கு பிரமோஷன்!.... 
(அப்பா எல்லாவற்றையும் விவரமாகச் சொல்கிறார். - மீனா கணக்குப் புத்தகத்தையும் நோட்புக்கையும் கொண்டு வருகிறாள்.... அப்பா சொல்லித்தருகிறார்!)
மீனா : தேங்ஸ்ப்பா!.... நல்லா புரிஞ்சிடுச்சு!.... 
சமையற்கட்டிலிருந்து நெய் மற்றும் ஏலக்காயோடு கேசரி செய்யும் வாசனை வருகிறது. )
அம்மா : இந்தாங்க ஸ்வீட்! கங்கிராஜுலேஷன்ஸ்!
மீனா : சூப்பரா இருக்கும்மா! அப்பா,  கொஞ்சம் நாராயணன் அங்கிளுக்கும் ஒரு டப்பாவிலே போட்டு எடுத்துக்கிட்டுப் போங்க... அவர் கேட்டாரில்லே!.... அவரு சந்தோஷப்படுவாரு!
அப்பா :  வெரிகுட்! ஞாபகம் வெச்சிக்கிட்டு இருக்கியே!.... நீயும் வா!... உன்னைப் பள்ளிக்கூடத்திலே விட்டுட்டு நான் ஆபீஸ் கிளம்புறேன்....... நாளைக்கு சைக்கிளை எடுத்துக்கலாம்...
மீனா : இப்போ ஒண்ணையும் மறக்கலேயே... 
அப்பா : (சிரித்துக்கொண்டே) இல்லேடா தங்கம்!.... 

(இருவரும் ஸ்கூட்டரில் ஏறிச் செல்கிறார்கள்.... அம்மா டாடா காண்பிக்கிறாள்)

(திரை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com