எது முக்கியம்?: அகில்குட்டியின் டைரி!

இன்று புதன் கிழமை! பிரபல நடிகர்  "அஜய்' எங்கள் பகுதிக்கு வருகிறார். இன்று அவருடைய புதிய படத்தில் காட்சிகளை  எங்கள் பகுதியில் இருக்கும் பூங்காவில் படப்பிடிப்பு செய்கிறார்கள்! பூங்கா அடுத்த தெருவில் இருந்தது!
எது முக்கியம்?: அகில்குட்டியின் டைரி!

இன்று புதன் கிழமை! பிரபல நடிகர்  "அஜய்' எங்கள் பகுதிக்கு வருகிறார். இன்று அவருடைய புதிய படத்தில் காட்சிகளை  எங்கள் பகுதியில் இருக்கும் பூங்காவில் படப்பிடிப்பு செய்கிறார்கள்! பூங்கா அடுத்த தெருவில் இருந்தது!  எப்படியோ விஷயம் தெரிந்து அனைவரும் அங்கு கூடியிருந்தார்கள்! மிகமிகப் பிரபலமான நட்சத்திரம் அவர்! அவருடைய படங்கள் எல்லாம் அநேகமாக 100 நாட்களுக்கு மேல் ஓடியிருந்தது. நான் பிறக்கறதுக்கு முன்னாலேயே அவர் நடிக்கிறாராம்! இன்னும் இளமையாகத்தான் இருக்கிறார்! எனக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும்! நான் இது வரைக்கும் சினிமா ஷூட்டிங் பார்த்ததில்லை!..... நானும், ரகுவும் படப்பிடிப்பைப் பார்ப்பதற்காக பூங்காவிற்குச் சென்றோம்... எங்களுடன் சித்தப்பாவும் வந்திருந்தார். இயக்குநர், காமராமேன், மற்றும் பலர் வந்து விட்டனர்! பூங்காவே கலகலப்பாகிவிட்டது!  "அஜய்' பகல் 1 மணிக்கு வருவதாக இருந்தது! சற்று தாமதமாகி விட்டது!

நாங்கள் காத்திருந்தோம்! சித்தப்பாவுக்கு ஒரு ஃபோன் கால் வந்தது! பேசினார்! வீட்டிற்கு மிக முக்கிய மனிதர் யாரோ வருவதாகவும், உடனே புறப்பட்டு வீட்டுக்கு வரும்படியும் அப்பா போன் செய்திருந்தார். சித்தப்பா என்னிடம், ""நான் உடனே வீட்டுக்குப் போகிறேன்.... நீங்க வேணும்னா ஷூட்டிங் பார்த்துட்டு வாங்க....'' அப்படீன்னார். ஆனால் எனக்கு வீட்டிற்கு வரவிருக்கும் மனிதர் யார் என்று தெரிந்து கொள்கிற ஆர்வம் ஏற்பட்டது! 

""நானும் உங்க கூட வீட்டுக்கே வர்றேன் சித்தப்பா!...'' ன்னேன். ""நானும் உங்க கூட வர்றேன்...'' அப்படீன்னான் ரகு. 

""ஷூட்டிங் பார்க்கலையா?...'' என்று கேட்டார் சித்தப்பா.  ""வேணாம் நாங்களும் உங்க கூட வர்றோம்!....''

எல்லோரும் வீட்டிற்குச் சென்றோம்.  வீட்டிற்கு யாரோ வந்திருந்தார்கள். ஹாலில் வெள்ளை தாடியுடன் ஒரு பெரியவர் உட்கார்ந்து கொண்டிருந்தார். நெற்றியில் சந்தனத்தில் பிறை மாதிரி இட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் அப்பா பேசிக்கொண்டிருந்தார். 

என்னையும், ரகுவையும் அறிமுகப்படுத்தினார்.  ""உன் குழந்தைகளா சங்கர்?'' என்று கேட்டார். ""ஆமாம்'' என்றார் அப்பா.  

""குழந்தைகளா வாங்க....'' என்று கூப்பிட்டார். பார்க்கவே ரொம்ப சாந்தமா இருந்தார். என்னிடம் ரெண்டு டிக்ஷனரியைக் கொடுத்தார். இங்கிலீஷ்லேயிருந்து தமிழுக்கு ஒண்ணு,...தமிழ்லேயிருந்து இங்கிலீஷுக்கு ஒண்ணு.... நான் அவற்றை வாங்கிக்கிட்டேன்! தம்பிக்கு படங்கள் போட்ட கதைப் புத்தகங்களும் கலர் பென்ஸில் பாக்ஸூம் தந்தார். 

""நமஸ்காரம் செஞ்சுக்கறோம்!'' அப்படீன்னார் அப்பா! அப்பா, நான், ரகு, சித்தப்பா எல்லோரும் அவரை நமஸ்காரம் செய்தோம்!  எங்க எல்லோரையும் வாழ்த்தினார்! எங்களுடன் டிபன் சாப்பிட்டார். சித்தப்பா அவரை பக்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். 

அப்பாவின்  குடும்பம் ரொம்ப நாளைக்கு முன்னாடி ரொம்ப ஏழ்மை நிலையில் இருந்ததாம். அப்போ மேல் படிப்புக்கான பணவசதி இல்லையாம்!  இந்தப் பெரியவர்தான் அப்பா, சித்தப்பா படித்த பள்ளியிலே ஆசிரியராக இருந்தாராம்! இயல்பாகவே மத்தவங்களுக்கு உதவி செய்யற குணம் இருக்கறவராம் அந்தப் பெரியவர்! சித்தப்பாவையும், அப்பாவையும் அவர்தான் படிக்க வெச்சாராம்! பெரியவருக்குத் திருவையாற்றுக்குப் பக்கத்திலே கிராமம். பெரியவர் விடை பெற்றுக்கொண்டார். 

""உங்களுக்கு ஷூட்டிங் பார்க்கலேன்னு வருத்தமாயிடுச்சா!'' அப்படீன்னு கேட்டார் சித்தப்பா. 

நான் சித்தப்பாவிடம், ""கொஞ்சம் கூட இல்லே....அது ரொம்ப முக்கியமா சித்தப்பா!...நல்லகாலம்.... நானும், ரகுவும்  ஷூட்டிங்கைப் பார்க்க அங்கே நிக்கலே.... இல்லேன்னா இப்படி ஒரு பெரியவரை பார்த்து நமஸ்காரம் செய்யற வாய்ப்பு கிடைச்சிருக்காது!'' அப்படீன்னேன்!'' 

""ஆமாம்!...இதுதான் முக்கியம்... அவரைப் பார்த்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது'' அப்படீன்னான் ரகு.

அகில் குட்டி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com