Enable Javscript for better performance
மரங்களின் வரங்கள்!: தொழில் புரட்சி செய்த மரம் - ரப்பர்  மரம்- Dinamani

சுடச்சுட

  

  மரங்களின் வரங்கள்!: தொழில் புரட்சி செய்த மரம் - ரப்பர்  மரம்

  By பா.இராதாகிருஷ்ணன்  |   Published on : 11th May 2019 12:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sm12

   

  என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா?

  நான் தான்  ரப்பர் மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் பைகஸ் எலாஸ்டிகா என்பதாகும். நான் சுமார் 18 முதல் 30 மீட்டர்கள் உயரம் வரை வளருவேன். முதன் முதலில் என் உபயோகத்தை அறிந்தவர்கள் தென் அமெரிக்கர்கள். தென் அமெரிக்க கிராம மக்கள் என்னை கூச்சி என்று அழைத்தார்கள்.  கூச்சி என்றால் கண்ணீர் வடிக்கும் மரம் என்று பொருள்.   நான் வேறு நாடுகளுக்கு செல்வதை அவர்கள் விரும்பவில்லை.  

  1870-இல் ஹென்றி விக்ஹாம் என்பவர் மிகுந்த கஷ்டங்களுக்கிடையே பிரேஸில் நாட்டிலிருந்த ரப்பர் மரத்தின் விதைகளை ஒருவருக்கும் தெரியாமல் கொண்டு போய் இங்கிலாந்தில் பயிரிட்டார்.  அங்கு சுமார் 2000 ரப்பர் கன்றுகள் முளைத்தன.  அங்கிருந்து ரப்பர் மரக்கன்றுகள் மிக ரகசியமாக 1905-இல் இலங்கைக்கும் அங்கிருந்து மலேசியாவுக்கு கொண்டு செல்லப்பட்டன.

  பிரிட்டிஷார் 1873-ஆம் ஆண்டிலேயே என்னை இந்தியாவில் கொல்கத்தாவிலுள்ள தாவரவியல் பூங்காவில் நட்டு அறிமுகப்படுத்தினாலும், 1902-ஆம் ஆண்டில் தான் கேரளாவிலுள்ள தட்டேகாடு என்னுமிடத்தில் தான்  வணிகரீதியாக நான் பயிரிடப்பட்டேன். 

  என்னிடமிருந்து வெளி வரும் பாலுக்கு லாடெக்ஸ் என்று பெயர்.  சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே தென் அமெரிக்க செவ்விந்தியர்கள் ரப்பர் பாலிலிருந்து செருப்புகளும், கிண்ணங்களும், குவளைகளும் செய்தார்கள். 1770-ஆம் ஆண்டில் தான் ஜோஸப் பிரிஸ்ட்லி எனும் வேதியியல் அறிஞர், நான் பென்சிலின் கோடுகளை அழிக்க உதவுவதால்  ரப்பர் என்று என்னை முதன்முதலில் பெயரிட்டு அழைத்தார். 

  நான் தரும் பாலை பயன்படுத்தி மழைக்கோட்டு தயாரிக்கலாம் என்பதை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த  சார்லஸ் மாசிண்டோஷ் என்பவர்    1823-இல் கண்டுபிடித்தார்.   அதன் பிறகு தான் எனது உபயோகம் பல்கி பெருகியது. உருகிய நிலையில் ரப்பருடன் கந்தகத்தைச் சேர்த்தால் உறுதியாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்பதை 1839-இல் குட் இயர் எனும் அமெரிக்கர் கண்டுபிடித்தார்.  அதன் பிறகு 1896-இல்  தான் வாகனங்களுக்கான காற்றடைக்கப்பட்ட ரப்பர் டியூபுகள் கண்டுபிடிக்கப்பட்டன.  உலக ரப்பர் உற்பத்தியில் தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா, இந்தியா முதல் நான்கு இடங்களை வகிக்கின்றன.  

  ஆனால், ரப்பர் உற்பத்தியில் கடைசியாக இருப்பது, என்னை உலகத்துக்கு அறிமுகப்படுத்திய லத்தீன் அமெரிக்கா தான் என்று சொல்வதில் எனக்கு வருத்தமா இருக்கு. தமிழ்நாட்டில் 19,233 ஹெக்டேர் நிலத்தில் என்னை வளர்க்கிறார்கள்.  இதிலிருந்து 24020 டன் ரப்பர் கிடைக்கிறது.  

  குழந்தைகளை, பல நாடுகளில் தொழில் புரட்சி அடைய நான் காரணமாக இருந்திருக்கிறேன் என்பது எனக்கு பெருமைத் தரும் விஷயமல்லவா, என்ன சொல்றீங்க ? மரங்கள் இயற்கையின் கொடை.  இயற்கை அன்னையின் மடியில் மலர்ந்த முதல் குழந்தை தாவரம் தானே.  தொழில் வளர்ச்சியினால், பல மின் சாதனப் பொருள்களைப் பயன்படுத்துவதாலும் மாசு நிறைந்த சூழலினைத் தூய்மையாக்குவது மரங்களே. நன்றி குழந்தைகளே ! மீண்டும் சந்திப்போம்..

  (வளருவேன்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai