அரங்கம்:  ஒற்றுமையே உயர்வு!

விடுமுறைக்குத் தாத்தா பாட்டி வசிக்கும் கிராமத்திற்கு தன் அம்மா-அப்பாவோடு வந்திருக்கிறான் விஷ்ணு. தான் ஒரு பணக்காரவிட்டுப் பையன் என்ற கர்வம் அவனிடம் அதிகம் இருந்தது.
அரங்கம்:  ஒற்றுமையே உயர்வு!


காட்சி -1 
கதாபாத்திரங்கள்:  விஷ்ணு, பெரியசாமி,  
மாரிமுத்து, முருகேசன், திப்பு மற்றும் சில சிறுவர்கள்.

(விடுமுறைக்குத் தாத்தா பாட்டி வசிக்கும் கிராமத்திற்கு தன் அம்மா-அப்பாவோடு வந்திருக்கிறான் விஷ்ணு. தான் ஒரு பணக்காரவிட்டுப் பையன் என்ற கர்வம் அவனிடம் அதிகம் இருந்தது. எதற்கெடுத்தாலும் தன் ஸ்டேடஸ் பற்றிப் பேசுவான். கிராமத்தில் இருக்கும் விஷ்ணுவின் நண்பன் பெரியசாமி, ஊரிலிருந்து வந்த அன்று மாலையே  தன் நண்பர்களுக்கு விஷ்ணுவை அறிமுகப்படுத்தவும் விளையாடவும் அழைத்துச் சென்றான்)

பெரியசாமி: இவன்தான்டா என் ஃபிரண்ட் விஷ்ணு. சென்னையில் இங்கிலீஷ் மீடியத்தில் படிக்கிறான். ஹாலிடேக்கு பாட்டி வீட்டுக்கு வந்திருக்கான். ஒருவாரம் இங்தேதான் இருப்பான். அதனாலதான் நம்மோடு  விளையாட அவனையும் கூட்டிவந்தேன். 

மாரிமுத்து: ஓ.... வெல்கம் விஷ்ணு. என்ன க்ளாஸ் படிக்கிறே?
விஷ்ணு: ஐ ஆம் சிக்ஸ்த் ஸ்டேன்டர்டு. யூ..?
மாரிமுத்து : நான் செவன்த் படிக்கிறேன். 
விஷ்ணு:  ஓகே. டுடே என்ன கேம் ஆடப்போறோம்?
பெரியசாமி: ஃபுட் பால் விளையாடலாம்
விஷ்ணு: ஓகே, ஸ்டார்ட் நெள....
(இரு டீமாகப் பிரிந்து விளையாட்டு ஆரம்பமானது. பந்தை ஆளாளுக்கு காலால் உதைத்து விளையாடினர். விளையாட்டு முடியும்போது யார் அதிகம் கோல் போட்டது என்பதில் சண்டை வரத்தொடங்கியதற்குக் காரணம் விஷ்ணுதான்)

விஷ்ணு: எங்க டீம்ல இருக்கிறவங்கதான் வின் பண்ணோம். நான்தான் நிறைய கோல் போட்டேன். ஆனால், நீங்கதான் வின் பண்ணதா சொல்றீங்க.... நோ... திஸ் ஈஸ் ராங் கேம்... என் ஸ்டேடஸ் என்னன்னு தெரியுமா உங்களுக்கு?  மை ஃபாதர் ஈஸ் எ  பிசினஸ் மேன். வீட்டில ஃபோர் கார் இருக்கு...எவ்ளோ பேர் எங்க ஃபாதர்  பேக்டரியில வொர்க் பண்றாங்க தெரியுமா?  யு ஆர் வில்லேஜ் பீப்பிள்.... உங்களுக்கு என்ன தெரியும்?  உங்ககூட எல்லாம் விளையாட வந்தது மை மிஸ்டேக்.  
மாரிமுத்து:  டேய்  பெரியசாமி, அவன் ஏன்டா இதுக்கெல்லாம் ஸ்டேடஸ் பத்தி பேசறான்? அவன் பணக்கார திமிரை அவன் ஊருல காட்டச் சொல்லு, இங்க வேண்டாம். இங்க எல்லோரும் ஒன்னுதான். தோல்வியை ஒத்துக்க அவனால முடியலை... அதான் கோபப்பட்றான். 
முருகேசன்: ஆமான்டா பெரியசாமி, ஊருலேந்து வந்த ஒரு நாளிலேயே நம்மோட ஒத்துமையா விளையாட இவனுக்குத் தெரியலையே... எப்படிடா ஒருவாரம் நம்மோட ஒத்துப்போவான். வேணாம்டா, நாளைக்கு இவனைக் கூட்டிகிட்டு வராதே... மூடே அவுட்  ஆயிடுச்சு... அவனே வின் பண்ணினதா இருக்கட்டும்...  வாங்கடா நாம கிளம்புவோம்.... 
விஷ்ணு: யூ ஆர் டாக்கிங் டூ மச்!  பீ கேர்ஃபுல்!... ஓகே...?

திப்பு: டேய், போடா நீயும் உன் இங்கிலீசும்!... பெரிய இவனா நீ...  விளையாடும் இடத்துல எல்லாரும் ஒன்னுதான். ஒத்துமையா விளையாடத் தெரியாத உன்னை சேர்த்துகிட்டது நாங்க செஞ்ச தப்பு.  
மாரிமுத்து: சரி,  சரி விடுங்கடா... ப்ளீஸ்  விஷ்ணு... யு கோ ஹோம் நெள.... சண்டை வேண்டாம், எல்லாரும் கிளம்பலாம்....
 
பெரியசாமி: ஓகே... ஓகே... பீ கூல் விஷ்ணு... பிரச்னை வேண்டாம். அவங்க ரொம்ப நல்ல பசங்க... பழகினா உனக்கே புரிஞ்சிப்பே.... வா வீட்டுக்குப் போகலாம்...
(பெரியசாமி விஷ்ணுவை ஒருவழியாக சமாதானம் செய்து வீட்டுக்குக் கூட்டி வந்தான். அப்போதும் விஷ்ணு முணுமுணுத்தபடியே இருந்தான். காரணம் கேட்ட பாட்டியிடமும் அம்மாவிடமும் மைதானத்தில்  நடந்ததை பெரியசாமி கூறினான்)

காட்சி -2
மாந்தர்கள்: பாட்டி, 
விஷ்ணுவின் அம்மா, விஷ்ணு.

(மறுநாள் பெரியசாமி அவனை விளையாடக் கூட்டிக்கொண்டு போகவில்லை. விஷ்ணுவும் வரவில்லை என்று சொல்லிவிட்டான். நாள் முழுவதும் அம்மாவின் செல் ஃபோனில் கேம் விளையாடி விளையாடி போர் அடித்தது விஷ்ணுவுக்கு. கமகமவென்று வாசனை வந்ததும் சமையல் அறைக்குச் சென்றான். பாட்டி அம்மியில் புதினா சட்னி அரைத்துக் கொண்டிருந்தாள்)

பாட்டி : என்ன கண்ணா... ஒரு மாதிரி இருக்கே... பெரியசாமிகூட விளையாடப் போலையா? 
விஷ்ணு: இல்ல பாட்டி.... அவங்க ரொம்ப பேட் பாய்ஸ் பாட்டி... ராங்கா கேம் ஆட்றாங்க... என் ஸ்டேடஸ் என்னன்னு தெரியாம என்னை சீட்டிங் பண்ணப் பார்க்கறாங்க... அதான் போகலை!
பாட்டி: விளையாட்டுன்னா அப்படி இப்படித்தான் இருக்கும்.  இதுக்கெல்லாம் கோபிச்சுக்கக் கூடாது கண்ணா!  முன்ன பின்ன தெரியாதவங்களோட ஒத்துமையா விளையாடத் தெரிஞ்சிக்கணும். இருக்கப் போறது ஒருவாரம். விடுமுறையை ஜாலியா அனுபவிக்கணும்... 
விஷ்ணு: போங்க பாட்டி அவங்கதான் பேட் பாய்ஸா இருக்காங்கன்னு சொல்றேனே... எனக்கும் அவங்களுக்கும் ஒத்து வராது பாட்டி. எனக்குப் பசிக்கிது... சாப்பிடக் கொடுங்க..
(பாட்டி தோசை தயார் செய்துட்டு, கூடவே புதினா சட்னியை வைத்துக் கொடுத்தாள்)

விஷ்ணு: சட்னி சூப்பரா இருக்கு பாட்டி... நம்ம வீட்டுத் தோட்டத்துல  இருந்ததா?
பாட்டி: ஆமாம் கண்ணா! ஆனால், இது டவுன்ல உள்ள உங்க வீட்டு மாடித் தோட்டத்தில் வளர்ந்ததுதான். போன மாதம் உங்க அம்மா கொண்டுவந்து கொடுத்தா... நிறைய வளர்ந்திருக்குன்னு.  இலைகளை எடுத்துப் பயன்படுத்திட்டு அந்தக் காம்புகளைத் தூக்கிஎறியாம  இங்கே  இருக்கும் என் தோட்டத்து செடிகளோட செடியா அதையும் நட்டு வச்சேன். நல்லா வளர்துடுச்சி... அதுதான் இந்த சட்னி.
விஷ்ணு: வாவ்வ்... எங்க வீட்டு கார்டன்ல இருந்ததா? இங்கே கொண்டு வந்து வச்சாலும் அது வளருதா? 
பாட்டி:  ஏன் வளராது? எங்கே கொண்டுபோய் வச்சாலும் வளரும். செடிக்குத் தெரியுமா இது டவுன், இது கிராமம்னு... எங்கே கொண்டு போய் வச்சாலும் அது அங்கிருக்கும் செடிகளோடு ஒத்துமையா இருந்து வளரும்... 
(விஷ்ணு சாப்பிட்டு முடித்துவிட்டு, பாட்டி சொன்னதை அசை போட்டபடியே படுக்கை அறைக்குச் சென்றான். அம்மாவிடம் இதுபற்றிக் கேட்கத் தொடங்கினான்)

விஷ்ணு:  (பாட்டியிடம் பேசியதைக் கூறி) அம்மா, பாட்டி  ஏன் அப்படி சொன்னாங்க? 
அம்மா: ஆமாம்,  செடி கொடிகள் எல்லாம் நான் பெரியவன் நீ பெரியவன் என்று ஸ்டேடஸ் பார்க்காது...நான் பெரிய பணக்காரன் வீட்டுல வளர்ந்தேன் .... உங்க  கிராமத்து மண்ணுல  வளர மாட்டேன்னு சொல்லாது. எங்கே கொண்டுபோய் வைத்து வளர்த்தாலும் வளரும்.  நீ ஸ்கூல்ல படிச்சிருப்பியே, புறாக்களும் வேடனும்ற கதையில் "யூனிட்டி ஈஸ் ஸ்ரெங்த்'துன்னு... அப்படித்தான். ஒற்றுமையா இருந்தா எல்லோருடனும் நாம் நட்போடு இருக்க முடியும். அதைத்தான் பாட்டி சொல்லியிருக்காங்க... விளையாடுற இடத்துல போய் நீ ஸ்டேடஸ் எல்லாம் பேசக்கூடாது. அது ஒரு பேட் ஹாபிட் விஷ்ணு... வெற்றியோ தோல்வியோ எது வந்தாலும் அக்சப்ட் பண்ணிக்கத் தெரியணும்... கிராமத்துல இருக்கிறவங்களோட நீ பழகிப் பார்த்தால்தான் உனக்கு யூனிட்டி பற்றிப் புரியும்! ஆனால், உனக்குத்தான் அவங்களோடு பழகவே தெரிலையே.... 
(சொல்லிவிட்டு விஷ்ணுவின் அம்மா படுக்கப் போய்விட்டாள். விஷ்ணு " சாரிம்மா' என்று
கூடச் சொல்லாமல் படுத்துக் கொண்டான்)

காட்சி - 3
மாந்தர்கள்:  விஷ்ணு, முருகேஷ், 
மாரிமுத்து,  திப்பு, பெரியசாமி.

(மறுநாள் பெரியசாமி வயலுக்குப் போயிருக்கிறான் என்று கேள்விப்பட்டு விஷ்ணு அவனைத் தேடிச் சென்றான். அப்போது,  காளை மாடு ஒன்று பின்னால் ஓடிவந்ததைக் கண்டு பயந்து வேகமாக  ஓடியபோது கால் தடுக்கி வாய்க்கால் பாலத்தின் மேலிருந்து "தொப்'பென்று  தண்ணீரில் விழுந்துவிட்டான். அப்போது வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த முருகேஷ், மாரிமுத்து,  திப்பு மூவரும் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த விஷ்ணுவைக் காப்பாற்றிக் கரையில் கொண்டு வந்து சேர்த்தனர். அவன் குடித்திருந்த தண்ணீரையும் வயிற்றை அழுத்தி வெளியே எடுத்தனர்)

விஷ்ணு: (மயக்கம் தெளிந்ததும் மூவரையும் பார்த்து வெட்கத்துடன்)  நான் பேசியதை மனதில் வச்சுக்காம என்னைக் காப்பாத்திட்டீங்க... நீங்க மட்டும் இல்லன்னா... ஓ... காட்... எனக்கு ஸ்விம்மிங்கூட தெரியாது... நினைக்கவே பயமா இருக்கு...  ஐ ஆம் சாரி...

முருகேஷ்: இட்ஸ் ஓகே  விஷ்ணு. நீன்னு இல்லை... யாரா இருந்தாலும் நாங்க அவங்களைக் காப்பாத்தியிருப்போம். ஹெல்ப் பண்ணனும்னு நினைக்கிறவங்க ஸ்டேடஸ் எல்லாம் பார்க்க மாட்டாங்க.... (சொல்லிவிட்டுச் சிரித்தான்)

மாரிமுத்து: ஆர் யூ ஓகே விஷ்ணு...?
 
விஷ்ணு:  நீங்க மூவரும்தான் வந்து காப்பாத்திட்டீங்களே...  ரொம்ப தேங்ஸ்... என்னை உங்க ஃபிரண்ட் குரூப்ல சேர்த்துப்பீங்களா? 
திப்பு: ஓய் நாட் விஷ்ணு?  வாட்ஸ்அப்ல கூட நாம எல்லோரும் ஃபிரண்ட்ஸா இருக்கலாம்.
(மூவரும் விஷ்ணுவின் கையைக் குலுக்கி, அவனை அணைத்துக் கொண்டனர். இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டே வந்த பெரியசாமி நிம்மதி பெருமூச்சு விட்டான்)

(திரை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com