வள்ளியம்மா வரவில்லை

இன்று வேலைக்கு வள்ளியம்மா வரவில்லை. உடம்பு சரியில்லைன்னு போன்லே தகவல் சொன்னாங்க.... பாத்திரம் தேய்ப்பது, தோய்த்த துணியை மாடியில் கொண்டு உலர்த்துவது எல்லாம் வீட்டில் இருப்பவர்கள்தான்
வள்ளியம்மா வரவில்லை

அகில்குட்டியின் டைரி!
 இன்று வேலைக்கு வள்ளியம்மா வரவில்லை. உடம்பு சரியில்லைன்னு போன்லே தகவல் சொன்னாங்க.... பாத்திரம் தேய்ப்பது, தோய்த்த துணியை மாடியில் கொண்டு உலர்த்துவது எல்லாம் வீட்டில் இருப்பவர்கள்தான் செய்ய வேண்டும்! ஜானகி சித்தி துணிகளை மிஷினில் போட்டிருந்தாங்க.... ""நான் ஹாலைப் பெருக்கட்டுமாம்மா...'' ன்னு கேட்டேன். அம்மா சிரிச்சுக்கிட்டே, ""ஹாலை மட்டும் பெருக்கு போதும்!'' அப்படீன்னாங்க... பெருக்கினேன். எனக்கு வியர்த்துக் கொட்டியது! நான் சின்னப் பொண்ணுதானே!.... லேசா மூச்சு இரைத்தது! பாவம் வள்ளியம்மா எப்படித்தான் தினமும் இதையெல்லாம் செய்யறாங்களோ.... துணி டிரையர்லே சுத்தி ரெடியாயிடுச்சு....
 "அண்ணி, நான் வேணும்னா பாத்திரம் தேய்ச்சுத் தரட்டுமா?'' ன்னு கேட்டார் ராமு சித்தப்பா.
 "வேண்டாம்!... அதை நான் பார்த்துக்கறேன்.... நீங்க மாடியிலே துணியை உலர்த்துங்க அது போதும்'' அப்படீன்னாங்க அம்மா.
 நானும் சித்தப்பாவோட மாடிக்குப் போனேன்! யம்மாடியோவ்! சரியான வெயில்! மொட்டை மாடியில் காலை வைக்கவே முடியலே! கால் ரொம்ப சுட்டது!
 அகில்!.... செருப்பு போட்டுக்காம இங்க காலை வைக்க முடியாது.... நீ மாடிக்கே வராதே!... நான் பார்த்துக்கறேன்'' அப்படீன்னார் சித்தப்பா. நான் மாடி ரூமுக்குள்ளே போயிட்டேன். அங்கேயிருந்து சித்தப்பா துணிகளை உலர்த்தறதைப் பார்த்துக்கிட்டிருந்தேன். மாடியில் நந்தியாவட்டைச் செடியும், செம்பருத்தியும் நல்லா அடர்ந்து வளர்ந்திருந்தது! அந்தச் செடிகளுக்குக் கீழே நல்ல நிழல் இருந்தது! பின்னே?.... நானும், ரகுவும் தினமும் தண்ணி விடறோம் இல்லே....ரூம்லே பழைய சாமான்கள் இருந்தது! உலர்த்தி முடிச்சதும் சித்தப்பா ரூமுக்கு வந்தார். ஒரு சின்ன பிளாஸ்டிக் கிண்ணத்தை எடுத்தார்! அதிலே தண்ணி பிடிச்சார்! அதை நந்தியாவட்டை செடிக்குக் கீழே வைத்தார். "நீ கீழே போய் நேற்றைக்குக் காயப்போட்ட துணிகளை எடுத்துண்டு வா'' அப்படீன்னார்.
 எடுத்து வந்தேன். துணிகளை அழகாக மடித்தார். நான் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். கர்சீப், டவல், உள்ளாடைகள் எல்லாத்தையும் நான் மடிச்சேன். சித்தப்பா, ""குட் கேர்ள்!'' அப்படீன்னார். அப்போ "ஃபிர்'னு ஒரு சத்தம்! நான் எட்டிப் பார்த்தேன்! ஒரு குருவி வந்து நந்தியா வட்டை செடிக்குக் கீழே உட்கார்ந்தது! அதோடு ஐந்தாறு குருவிகள்!... எல்லாம் அந்த பிளாஸ்டிக் கிண்ணத்தில் வரிசையாக அமர்ந்து தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தன! எனக்கு அதைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருந்தது! ""ரொம்ப அழகா இருக்கு சித்தப்பா!'' ன்னேன் நான். சித்தப்பா சிரித்துக் கொண்டே,, "வள்ளி இன்னிக்கு வேலைக்கு வந்திருந்தா, உனக்கும், எனக்கும் இந்த காட்சி கிடைச்சிருக்காது!... எல்லா இடைஞ்சல்களிலேயும் நமக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும்!....''
 மறுநாள் வள்ளியம்மா வேலைக்கு வந்துட்டாங்க.... அவங்க துணி உலர்த்தப் போனாங்க.... நானும், ரகுவும் செருப்பைப் போட்டுக்கிட்டு அவங்க பின்னாலேயே போனோம்! பிளாஸ்டிக் பாத்திரத்திலே தண்ணி பிடிச்சு நந்தியாவட்டைச் செடிக்குக் கீழே வெச்சேன்!
 பறவைகள் வரவில்லை.... நாங்க காத்திருந்தோம்! சிறிது நேரத்தில் ஐந்தாறு குருவிகள் பிளாஸ்டிக் பாத்திர விளிம்பில் நின்று தண்ணி குடிச்சுக்கிட்டு இருந்தது! ரகு கை தட்டினான்! ""ஷ்ஷ்..... வேண்டாண்டா!.... பறந்துடப் போகுது!...'' ன்னேன் நான்!
 - அகில்குட்டி
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com