சுடச்சுட

  
  sm7

  மரங்களின் வரங்கள்!
   என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?
   நான் தான் புரசு மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் பியூட்டோ மோனோசெர்மா என்பதாகும். நான் பபேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு பலாசு, பொரசு, புரசை என்ற வேறு பெயர்களும் உண்டு. குறிஞ்சிப் பாட்டில் வருகின்ற 99 மலர்களில் எனது மலரான பலாச மலரும் ஒன்று. ஜார்கண்ட் மாநிலத்தின், மாநில மலர் என்னுடைய மலர் தான். கடவுளின் பொக்கிஷ்தார் எனவும் என்னை அழைப்பார்கள். எனது நிழலில் கிருஷ்ணன் ஓய்வு எடுத்ததாகவும், தட்சணாமூர்த்தி தவம் புரிந்ததாகவும் புராணங்கள் சொல்கின்றன.
   இந்தியப் புரணாங்களிலும், சம்பிரதாயங்களிலும் நான் முக்கியத்துவம் பெற்றிருக்கிறேன். என்னை பிரம்ம தரு (பிரம்மாவின் மரம்) என்றும் அழைப்பார்கள். சங்கக் காலத்தில் எல்லா மர, செடிகளின் இலைகளை தமிழில் பலாசம் என்று அழைப்பர். தமிழகத்தில் பலாச மரம், புரசை மரம் எனவும் குறிப்பிடுவர். ஒரு காலத்தில் சென்னையின் மத்தியப் பகுதி முழுவதையும் நான் தான் வியாபித்திருந்தேன். இன்றும் அப்பகுதி புரசைவாக்கம் என்று என் பெயராலாயே அன்புடன் அழைக்கப்படுகிறது.
   சந்திரபகவானின் சின்னம் என் மலர் தான். என்னுடைய மலர்கள் பிரகாசமான சிவப்பு, ஆரஞ்சு வண்ணத்திலும், அரிதாக மஞ்சள், வெள்ளை நிறத்திலும் காணப்படும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பலாச மலர்கள் பூத்துக் குலுங்கும் அழகே தனி. என் மரத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கும் போது காடு தீப்பற்றி எரிவது போல இருக்கும்! அது மட்டுமா?.... என் மலர்களைக் கொண்டு தான் காளியின் பலிபீடங்களை அலங்கரிப்பார்கள். என்னுடைய பூ செம்மஞ்சள் நிறத்திலும், என்னுடைய விதைகள் தட்டையாகவும் இருக்கும். என் தண்டுப் பகுதியை அரக்குப் பூச்சியான கெர்ரியா லக்கா தாக்கும். இந்தப் பூச்சி மரத்தின் தண்டுப் பகுதியில் வளர்ந்து அரக்கை உண்டாக்குகிறது. ஷெல்லாக் எனப்படும் இந்த அரக்கில் மணமுள்ள பிசின், நிறப் பொருள், மெழுகு, புரதங்கள், கனிம உப்புகள், மணப் பொருள்கள் போன்றவை காணப்படுகின்றன. இந்த அரக்கை ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களின் மேல் பூசப்படுவதால் அவைகளின் ஆயுட்காலம் அதிகரிக்கப்படுகிறது. இதற்காகவே மத்திய பிரதேச மாநிலங்களில் என்னை அதிகமாக வளர்க்கிறார்கள்.
   எனது புனிதத் தன்மை காரணமாக இந்திரப்பிரஸ்தாவிலும், த்வைத வனத்திலும் என்னை வளர்த்ததாக மகாபாரதம் சொல்கிறது. வேள்வித் தீயைச் சுற்றிப் போடப்படும் புனிதக் குச்சிகளைத் தரும் மிக முக்கியமான மரங்களில் நானும் ஒருவன். நான் அளிக்கும் பூ, விதை, பட்டை, பிசின் நோய்கள் தீர்க்கும் மருந்தாக பயன்படுகின்றன. என்னுடைய மலர் ஹோலி பண்டிகையின் போது தூவப்படும் நிறப்பொடிகள் செய்ய பயன்படுகின்றன. ஆர்கானிக் காட்டன் சேலை ரகங்கள் தயாரிக்க நான் பெரிதும் உதவுகிறேன். நான் ஒரு சர்வரோக நிவாரணியாக விளங்குகிறேன்.
   நான் உங்களின் கவனச் சிதறல், முதுகுவலி, எலும்பு முறிவுகள், செரிமான தொந்தரவுகள், கல்லீரல் செயல்பாடுகள், மண்ணீரல் கோளாறுகள் நீக்கும் ஆற்றல் பெற்றவனான இருக்கிறேன். என்னுடைய இலை மற்றும் மலர்களை வெந்நீரில் போட்டு சூடாக்கி அடிவயிற்றில் கட்டினால் நாள்பட்ட வயிற்றுவலி மற்றும் வீக்கம் பறந்தோடி விடும். சிறுநீரகப் பிரச்னைகளும் தீரும். என்னுடைய மலர்களைக் காய வைத்து தேநீர் தயாரித்து பருகினால் நீரிழிவு நோய் தீருவதுடன், சிறந்த மலமிளக்கியாகவும் விளங்கும். என்னுடைய விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் தோல் நோய்களையும், கண் நோயையும் போக்கும். வாத நோய் உள்ளவர்கள் இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் கை, கால்கள் வலுபெறும்.
   என்னுடைய இராசி கடகம். தமிழ் ஆண்டு பராபவ. நான் நாகப்பட்டிம் மாவட்டம், திருத்தலைச்சங்காடு அருள்மிகு சங்காரண்யேஸ்வரர், தஞ்சாவுர் மாவட்டம், திருக்கஞ்சனூர் அருள்மிகு அக்னீஸ்வரர் ஆகிய திருக்கோயில்கள்தலவிருட்சமாக இருக்கிறேன். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
   (வளருவேன்)
  -பா.இராதாகிருஷ்ணன்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai