உயர்ந்தவள்!
By - அ.க.ராஜாராமன் | Published On : 02nd November 2019 07:19 PM | Last Updated : 02nd November 2019 07:19 PM | அ+அ அ- |

பத்து மாடி அலுவலகத்தில் பணி புரிவோருக்கென்று இருந்தது ஒரு மின்தூக்கி !
எட்டு பேரை ஒரே சமயத்தில் சுமந்து செல்லும் கீழிருந்து மேல் நோக்கி !
இயந்திரமே ஆனாலும் இயன்ற அளவுதானே பளுசுமக்கும்!
ஓர் நாள் எட்டு பேர் ஏறிவிட ஓடி வந்து கடைசியாய் உட்புகுந்தான் இளைஞனொருவன்!....
பளு கூடிநின்றதனால் "Over load' சமிக்ஞையோடு நகராமல் நின்றது மின்தூக்கி !
கூடுதலாய் பாரம் சேர்ந்ததனால் சோர்ந்து நின்றது அந்த இயங்கு பொறி !
எல்லோருக்கும் அவசரமாம்!
வெளியேற யாருக்கும் மனதில்லை!
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர், மின்தூக்கியோ அசையவில்லை...
கடைசியில் பெண்ணொருத்தி கூட்டத்திலிருந்து வெளியேறினாள்.....
அனைவரும் அவளை வியப்புடன் பார்த்தனர்!
அவள் கால் ஊனமுற்று இருந்தாள்!
இப்போது மேல் நோக்கி செல்ல தயாரானது இயந்திரமும் ....
ஊன்றுகோலோடு வெளியேறிய திறன்மங்கை இதயத்தில் புன்னகையோடு
உள்ளிலிருந்தோரைப் பார்த்து நின்றாள்...
இச்சம்பவம் சொல்லும் செய்தி!
உண்மையில் அவளே உயரச் சென்றாள்!
நெஞ்சத்தில் கருணையில்லா யாவருமே நிலத்தின் மேல் பாரம்தான்...
தன் தவறு தானறிந்தும் தன்மையிலிருந்து இறங்காத யாவருமே ஊனம் தான்...
வடிவத்தில் ஒன்று போல் இருப்பதனால் எல்லோரும் மனிதரில்லை...
தான் மட்டும் வாழ எண்ணி பிறரை நேசிக்க மறந்தால் நாம் இருந்தும் பயனில்லை...
கண்களில் அன்பு வேண்டும் கருணையின் கண்கள் மட்டுமே மனிதர்க்கு பார்வையாகும்...