மரங்களின் வரங்கள்!: அதிசய மரம் - அழிஞ்சல் மரம்!

என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?
மரங்களின் வரங்கள்!: அதிசய மரம் - அழிஞ்சல் மரம்!

என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?

நான் தான் அழிஞ்சல் மரம் பேசறேன். எனது அறிவியல் பெயர் அலாஜ்ஜியம் சால்விபோலியம் என்பதாகும். நான் அலன்ஜியாசியே (காரினேசியே) குடும்பத்தைச் சேர்ந்தவன். நீண்ட இலைகளையுடை முள்ளுள்ள மரம் நான். நானும் எல்லா இடங்களிலும் வளரக்கூடிய இயல்பினன். என் பழங்கள் செம்மஞ்சள் நிறமுடையதாக இருக்கும். என்னை நீங்கள் புதர் காடுகளிலும், வேலிகளிலும் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். என்னிலும் பல இனங்கள் உண்டு குழந்தைகளே. என் இனங்கள் சிவப்பு, கருப்பு, வெள்ளை முதலிய பூக்களுடன் கூடிய மரங்களாகவும் இருக்கும். எனக்கு அங்கோலம், எலங்கி, அனஞ்சி என்ற வேறு பெயர்களுமுண்டு. என்னுடைய வேர்ப் பட்டை, இலை மற்றும் விதை முதலியன மருத்துவ குணமுடையவை.

குழந்தைகளே, உங்கள் உடலில் ஏற்படும் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று தோஷங்களையும் நீக்கும் மருந்து எங்கிட்ட இருக்கு. என் மரத்தின் வேரானது தோல் புற்று நோயை நீக்குவதற்கு மருந்தாக பயன்படுது. என் பட்டையை இடித்துத் தூளாக்கி நீரில் கொதிக்க வைத்துக் குடிநீராக்கி அருந்தி வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற விஷ நீர்கள் வெளியேறுவதுடன், உடல் சூட்டைத் தணித்து, உங்கள் உடலானது நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அதனையும் குணமாகும் தன்மையுடையது. அதோடு, வயிற்றுப் புழுக்களை வெளியேற்றி, குடல் புண்ணை ஆற்றி, மலச்சிக்கலையும் போக்கும். சிறுநீரைப் பெருக்கி, வியர்வையைத் தூண்டி சருமத்தையும் பாதுகாக்கும்.

என் வேர்ப்பட்டையைக் காய வைத்துப் பொடியாக்கி தேங்காய் எண்ணெய்யில் குழைத்து மேகப்புண், சீழ் வடிகின்ற புண், சொறி, சிறங்கு மீது தடவி வர நாள்பட்ட புண்கள் விரைவில் ஆறும். என் விதையிலிருந்து எடுக்கப்படும் தைலைம் குஷ்ட நோய்க்கு அருமருந்து. அதோடு மட்டுமா, என் பட்டை மற்றும் வேரிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் மூட்டுவலி, கீழ்வாதம் போன்றவற்றிருக்கு நல்ல நிவாரணம் கொடுக்கும்.

பாத வெடிப்பு, பாத எரிச்சலுக்கும் இந்தத் தைலத்தை தடவி வந்தால் நல்ல பலன் உறுதி. மேலும், முகப்பரு, முகத்தில் சுருக்கம், முகக்கருமையைப் போக்கும். என் சிறிய குச்சிகளைக் கொண்டும் பல் துலக்கலாம். என் வேர்ப்பட்டையை உலர்த்திப் பொடி செய்து 100 மில்லி கிராம் வீதம் காலை, மாலை ஒரு வாரம் சாப்பிட்டால், கொடிய விஷங்கள் (பாம்பு, எலி, வெறிநாய்), தொழுநோய், கிராந்தி, புண், வயிற்றுப் போக்கு ஆகியவை குணமாகும்.

கிராணி, குன்மம், கபநோய்கள் உள்ளவர்கள் என் இலையை அரைத்து ஒரு கிராம் அளவுடன் காலை, மாலை உண்டால் நோய் இருந்த இடம் தெரியாது. சிவப்பு அழிஞ்சில் வேர்ப் பட்டைத் தூள், தேன் மற்றும் கிராம்பு, சாதிக்காய், சாதிப்பத்திரி குழைத்துச் சாப்பிட்டால் தொழுநோய் விரைவில் குணமாகும்.

என் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உடம்பில் தடவி வந்தால் தோல் நோய் குணமாகும். நான் இசைக்கருவிகள் தயாரிக்கவும், மரச்சாமான்கள் தயாரிக்கவும், கட்டிட பணிகளுக்கும் பயன்படுவேன்.

என்னை நீங்கள் செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள்கோவில், ஸ்ரீபாடலாத்ரி ந்ருஸிம்ஹ பெருமாள் திருக்கோவிலில் வலம் வரும் இடத்தில் கண்டு மனம் மகிழலாம். என்னை ஒரு அதிசய மரமாக கருதறாங்க. என்னைப் பற்றி ஆதிசங்கரர் சிவானந்த லஹரி ஸ்துதியில் பாடியுள்ளார். ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியின் உரையிலும் என்னைப் பற்றிய குறிப்பு இருக்கு. நான் சிவகங்கை மாவட்டம், வைரவன்பட்டி அருகிலுள்ள அருள்மிகு வளரொளிநாதன் (வைரவன்) மற்றும் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரிக்கு அருகிலுள்ள சின்னக்காவணம் கிராமம், அருள்மிகு நூற்றெட்டீஸ்வரர் (அஷ்டோத்திர ஈஸ்வரன்) திருக்கோயில்களில் ஸ்தல விருட்சமா இருக்கிறேன். மரம் மனித குலத்திற்கு இயற்கை கொடுத்த வரம். மரங்கள் பறவைகளின் வீடு. என் தமிழ் ஆண்டு யுவ. நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com