மரங்களின் வரங்கள்! - இலவ மரம்!

நான் தான் இலவ மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் செய்பாபெடண்ட்ரா என்பதாகும். நான் மால்வேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னை ஆங்கிலத்தில் சில்க் காட்டன் ட்ரி என்கிறார்கள்.
மரங்களின் வரங்கள்! - இலவ மரம்!


இலவம் பஞ்சில் துயில்!

இலவ மரம்!

என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?

நான் தான் இலவ மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் செய்பாபெடண்ட்ரா என்பதாகும். நான் மால்வேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னை ஆங்கிலத்தில் சில்க் காட்டன் ட்ரி என்கிறார்கள். என் தாயகம் ஆப்பிரிக்கா. நான் வறட்சியைத் தாங்கி வளருவேன். நவம்பர், டிசம்பரில் நான் பூக்க ஆரம்பிப்பேன்.

அடர் மஞ்சள் நிறத்திலிருக்கும் என் மலர்கள் காயாகி பழுக்காமல் நார் போன்று மாறி, பஞ்சாகி பின் வெடிக்கிறது. நுனி முதல் அடி வரை, விதை முதல் மரம் வரை என் அத்தனை பாகங்களும் உங்களுக்குப் பயன் தரும். "என் பஞ்சிற்குப் பூளை' என்ற பெயருமுண்டு. என் காய் வெடிக்கும் போது அதன் முதுகுப்புறத்தில் தோன்றும் கோடு அணிலின் புறத்தில் தோன்றும் கோடுகளை ஒத்திருக்குமென்பர். "பூளையம் பசுங்காய் புடை விரிந்தன்ன வரிப்புற அணில்' என்கிறது பெரும்பாணாற்றுப்படை (84-85)

என் காயிலிருந்து பஞ்சு எடுக்கப்படுகிறது. இந்தப் பஞ்சு உறுதியற்றது என்பதால் நூல் நூற்க பயன்படுவதில்லை. மெத்தை, தலையணை, உயிர்காக்கும் உறைகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. இது மட்டுமல்ல, பஞ்சிலிருந்து குளிர்ப் பிரதேசங்களில் பணி புரியும் இராணுவத்திற்கான பாதுகாப்பு ஆடை, மிகக் கடும் குளிரையும் தாங்கும் ரஜாய் மெத்தை, தண்ணீரில் மிதக்கும் உயிர்க்கவசம் எனப்படும் லைஃப் ஜாக்கெட், ஜெர்க்கின் என பல்வேறு பொருள்களைத் தயாரிக்கவும், மருத்துவத் துறையில் அறுவைச் சிகிச்சைக்கான தையல் நூல் தயாரிக்கவும் என் பஞ்சு பயன்படுது. "இலவம் பஞ்சில் துயில்' என்ற பழமொழிக்கு ஏற்ப இலவம் பஞ்சாலான தலையணை, மெத்தையைப் பயன்படுத்தினால் உங்களுக்குத் தூக்கம் நிச்சயம்.

என் விதையிலிருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு சோப்பு தயாரிக்க பயன்படுத்தறாங்க. பிறகு கிடைக்கும் புண்ணாக்கு, கால்நடைகளுக்கும், பறவைகளுக்கும் உணவாகிறது. உயவுப் பொருளாக, அதாவது லூப்ரிகேட்டிங் ஆயிலாகவும் பயன்படுத்தலாம். இலவம் எண்ணெய்யை ரீபைன்ட் செய்து உணவு எண்ணெய்யில் கலப்படம் செய்வதாக அரசல், புரசலாக எனக்கு செய்தி கிடைச்சுது. வருத்தமாயிருக்கு, அது தப்பு குழந்தைகளே.

என் காயின் மேலோடு எரிபொருளாக பயன்படுது. இதனுடைய மிருதுவான பகுதியிலிருந்து தீக்குச்சி தயாரிக்கலாம். என்னை நீங்கள் சாலையின் இரு புறங்களிலும் வளர்த்தீர்களென்றால் சாலைக்கு ஒரு கம்பீரம் கிடைக்கும்.

இலவ மரத்தின் இலையை அரைத்து பசும் பாலில் கலந்து குடித்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும். என் பூவை தண்ணீரில் போட்டுக் காய்ச்சிக் குடித்தால் மலச்சிக்கல், பித்த நோய் குணமாகும். இலவம் விதை, சீரகம், வால் மிளகு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து பொடி செய்து ஐந்து கிராம் அளவுக்கு தினமும் மூன்று வேளை சாப்பிட்டால் இரத்த வாந்தி உடனடியாக நிற்கும்.

இலவு காத்த கிளி, என்னை பழமாக்கி சாப்பிட ஏமாந்த கதை உண்மையாக இருக்கலாம். ஆனால், குழந்தைகளே, இலவு காத்த மனிதன் என்னை வளர்த்தால் ஏமாறாமல் இலகுவாக பணத்தை அள்ளிக் குவிக்கலாம். தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் இலவம் பஞ்சு சந்தை பெரிய அளவில் நடைபெறுகிறது. இலவம் பஞ்சு பேட்டைகள் போடியில் அதிகமாக உள்ளன. எனவே தான், இந்திய அளவில் இலவங்காய் விலை போடியில் தான் முடிவு செய்யப்படுகிறது என்பது எனக்குப் பெருமை. மரம் வளர்ப்போம். வளர்ந்த மரங்களைக் காப்போம். மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com