எறும்புகள்!

தெரியும்.... நீங்க ரெண்டு பேரும் கட்டிடப் பிரிவுக்கே வந்திருக்கக்கூடாது..... முட்டைகள் பாதுகாப்புப் பிரிவுக்குப் போயிருக்கணும்.... இன்னிக்கே நான் ராணிகிட்ட இதப் பத்திப் பேசுறேன்...
எறும்புகள்!

காட்சி : 1
 இடம் : ஃபார்மி காலனி / கட்டிடப் பிரிவு
 நேரம் : காலை 7.15
 எறும்புகள் : கிட்டி , விட்டி, தளபதி , தவின் .
 
 கிட்டி : சாயந்தரம் கண்டிப்பா மழை வரும்.
 விட்டி : எப்படி சொல்ற?
 கிட்டி : ம்ம்ம்.... தெரியல.. ஆனா, தோணுது!..
 விட்டி : அப்போ நிச்சயமா மழை வராது..
 தளபதி : வேலை நேரத்துல என்ன பண்ணிட்டிருக்கீங்க?
 விட்டி : (திடுக்கிட்டு ) அது.. நம்ம காலனியோட வளர்ச்சிக்கு இன்னும் என்னெல்லாம் தேவைன்னு பேசிட்டிருக்கோம்!.....
 (தளபதி முறைத்துப் பார்க்கிறது.)
 கிட்டி : (தயக்கமாக) தளபதி.... நாங்க சும்மாதான்.... பேசிட்டு....
 தளபதி : தெரியும்.... நீங்க ரெண்டு பேரும் கட்டிடப் பிரிவுக்கே வந்திருக்கக்கூடாது..... முட்டைகள் பாதுகாப்புப் பிரிவுக்குப் போயிருக்கணும்.... இன்னிக்கே நான் ராணிகிட்ட இதப் பத்திப் பேசுறேன்.....
 விட்டி : படைத்தளபதி.... இனிமே தேவையில்லாம பேசமாட்டோம்.... நாங்க இதே பிரிவுல இருந்துக்கறோம்..... தயவு செய்து மாத்திராதீங்க....
 கிட்டி : (முணுமுணுப்பாக) ஏன் வேண்டாங்கிற..... இங்க இவர் வேல மேல வேல சொல்லிட்டேயிருக்கார்..... அங்கயாவது போய் நிம்மதியா இருக்கலாம்....
 விட்டி : ( முணுமுணுப்பாக) இது எவ்வளவோ பரவாயில்ல...... அந்தப் பிரிவுக்குப் போனா சண்டையெல்லாம் போடணும்.....
 தளபதி : என்ன முணுமுணுப்பு?
 விட்டி : அது,...... தளபதி,...... ம்ம்ம்.. இனிமேல் இவன் மெளன விரதம் இருந்துக்கறானாம்..... பிரிவு மாத்த வேண்டாம்னு கெஞ்சறான்.....
 (தவின் வேகமாக ஓடி வருகிறது.)
 தவின் : தளபதி!.... ஒரு பெரிய ஆபத்து!..
 
 காட்சி : 2
 இடம் : ஃபார்மி காலனி / முட்டைகள் பிரிவு
 நேரம் : காலை 7.25
 எறும்புகள் : தளபதி , தவின், ராணி
 
 தளபதி : என்ன நடந்துது?
 தவின் : ..."மீள் காலனி' ஆளுங்க நம்ம வீரர்கள தாக்கி.. முட்டைகளை எல்லாம் அபகரிச்சிட்டுப் போய்ட்டாங்க..
 (தளபதி அதிர்ச்சி அடைகிறது. )
 தவின் : நிறைய பேர் வந்தாங்க..நம்ம ராணுவப் பிரிவால அவங்களுக்கு ஈடு கொடுக்க முடியல..
 தளபதி : இப்போ மகாராணி எங்க?
 (தவின் கிழக்கு திசையைக் காட்டுகிறது.)
 தளபதி : மகாராணி..
 (ராணி சிறிது நேரம் நிறுத்த முடியாமல் அழுகிறது.)
 ராணி : என்னால.. என்னால.. முடிஞ்ச வரைக்கும் போராடிப் பார்த்தேன்.. ஆனா.. ஆனா.. கடைசியில.. ( அழுகை)
 (தளபதி அமைதியாகப் பார்க்கிறது.)
 தளபதி : மகாராணி.. நாங்க இன்னும் நிறைய பேர் இருக்கோம்.. இப்பவே புறப்படுறோம்.. ஒரு முட்டைகூட பாக்கியில்லாம எல்லாத்தையும் திரும்பக் கொண்டுவருவோம் .. நம்புங்க.. கவலைப்படாதீங்க..
 (ராணி அமைதியாகப் பார்க்கிறது .)
 
 காட்சி : 3
 இடம் : ஆலமரம்
 நேரம் : காலை 8. 10
 எறும்புகள் : கிட்டி, விட்டி
 
 (எறும்புகள் மரத்தில் ஏறிக்கொண்டிருக்கின்றன. )
 
 கிட்டி : கேட்குறேன்னு தப்பா நினைச்சுக்காத.. நம்ம காலனி முட்டைங்கள இங்கயே நாசம் பண்ணியிருக்கலாமே.. அதவிட்டுட்டு ஏன் அவங்க அந்தக் காலனிக்கு எடுத்துட்டுப் போனாங்க?
 விட்டி : முட்டைங்கள அவங்க நாசம் எல்லாம் பண்ண மாட்டாங்க.. பத்திரமா பாத்து குட்டிங்கள பொறிய வெப்பாங்க.. இதெல்லாம் காலம் காலமா நடக்குறதுதான்..
 கிட்டி : எதுக்கு அப்டி பண்றாங்க?
 விட்டி : கேட்டா அதிர்ச்சியாயிடுவே.. வேண்டாம்.. விடு..
 கிட்டி : அதெல்லாம் ஆகமாட்டேன்.. எதுக்குனு சொல்லு..
 விட்டி : அடிமைங்களா வளர்க்குறதுக்கு !
 (கிட்டி உறைந்து போய் நிற்கிறது.)
 
 காட்சி : 4
 இடம் : ஆலமரம் / கிளை
 நேரம் : முற்பகல் 11. 50
 பாத்திரங்கள் : தவின், தளபதி, சிட்டு, விட்டி.
 
 தவின் : தளபதி.. நாம ஏன் இங்க நின்னுட்டிருக்கோம்..?
 தளபதி : இது தினமும் என் நண்பன் இங்க வர்ற நேரம்.. அவன் நமக்கு எதாவது உதவி செய்வான்.. இதோ வந்துட்டான்..
 (ஒரு சிட்டுக்குருவி மரத்தின் மீது வந்து அமர்கிறது.)
 சிட்டு : நண்பா.. என்ன இன்னிக்கு இவ்ளோ பேர் வந்திருக்கீங்க.. ? என்ன விஷயம்?
 (தளபதி நடந்தவற்றைச் சொல்கிறது.)
 சிட்டு : கொடுமை! இப்போ என்ன பண்ணணும்..
 தளபதி : மீள் காலனி ஒரு மனித வீட்டுத் தோட்டத்துலதானே இருக்கு.. அந்த வீட்டுல யார் இருக்கா..? அவங்ககிட்ட உதவி கேக்கலாமா..?
 சிட்டு : அங்க.. ஒரு அப்பாவும் பையனும் இருக்காங்க.. ஆனா அவங்களுக்கு எறும்புனா சுத்தமாவே பிடிக்காது!
 (படைத்தளபதியின் முகம் வாடுகிறது .)
 விட்டி : (மகிழ்ச்சியுடன்) அப்படினா நாம முட்டைங்கள சுலபமா கைப்பற்றிரலாம்..
 (அனைவரும் திரும்பிப் பார்க்கிறார்கள்.)
 
 காட்சி : 5
 இடம் : வீடு / சமையலறை
 நேரம் : மாலை 4.14
 எறும்புகள் : கிட்டி, விட்டி , தவின், தளபதி.
 
 கிட்டி : பயமாயிருக்கு!.... பயமாயிருக்கு.... எனக்கு ரொம்ப பயமாயிருக்கு!.....
 விட்டி : பயப்படாதே.. பயப்படாதே.. எல்லாம் திட்டப்பட்டி நடக்கும்...
 தவின் : தளபதி.. எல்லாரும் வரிசையில தயாரா இருக்காங்க..
 தளபதி : நல்லது.. நாம ஐம்பது பேரும் வேகமாவும் துடிப்பாவும் செயல்படணும்.. விரைவா இடம் விட்டு இடம் மாறணும்..
 தவின் : கண்டிப்பா, தளபதி.. அப்டியே செஞ்சிடலாம்..
 தளபதி : ஸ்ஸ்ஸ்ஸ்.. அந்தச் சின்ன மனிதன் வரான்.. எல்லாரும் ரொம்ப ரொம்ப கவனமா இருங்க.. நம்மால முடியும்!
 அனைவரும் : நம்மால முடியும் !
 (எறும்புகள் கலைகின்றன. )
 
 காட்சி : 6
 இடம் : வீடு / சமையலறை
 நேரம் : வெவ்வேறு நேரங்கள்
 பாத்திரங்கள் : சிறுவன், அப்பா, எறும்புகள்.
 
 மணி 4.15 : சிறுவன் சமையலறையில் நுழைகிறான். பேழைகளில் ஊரும் எறும்புகளைப் பார்க்கிறான்.
 மணி 4.20 : சிறுவனும் அப்பாவும் சமையலறைக்குள் வருகிறார்கள். அறை முழுவதும் எறும்புகள் ஊர்கின்றன.
 மணி 4.40 : தந்தையும் சிறுவனும் எறும்பு வரிசையைப் பின்தொடர்ந்து செல்கிறார்கள். அவர் கையில் எறும்பு மருந்து என்னும் பொட்டலம் இருக்கிறது.
 
 காட்சி : 7
 இடம் : வீடு / தோட்டம்
 நேரம் : மாலை 4.55
 எறும்புகள் : தவின், தளபதி , கிட்டி, விட்டி ,
 மீள் காலனி எறும்புகள்.
 
 தவின் : ம்ம்ம்.. நீ சொன்ன மாதிரியே எறும்புகளைப் பின்தொடர்ந்து குழியைத் தேடி வந்துட்டாங்க..
 விட்டி : வரிசையை நாம் "மீள் காலனி' க்குக் கொஞ்சம் முன்னாடியே துண்டிச்சிட்டோம்.. ஆனாலும் அவங்க நல்லா தேடி கண்டுபிடிச்சிட்டாங்க..
 கிட்டி : சரி, இப்போ நாம போலாமா?
 தளபதி : இருங்க.. மீள் காலனி எறும்புங்க குழி மேல அவங்க அந்தப் பொடியைத் தூவி கொஞ்ச நேரம்தான் ஆகுது.. மொத்தமா மயக்கம் ஆகட்டும் அப்புறம் போலாம்..
 (மேகங்கள் திரளத் தொடங்குகின்றன. )
 (குரல்) : எல்லாரும் இங்க இருக்காங்க பார்.. இவங்கள சும்மாவிடக் கூடாது.
 (ஃபார்மி காலனி எறும்புகள் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்க்கின்றன. )
 கிட்டி : அய்யோ !
 (மீள் காலனி எறும்புகள் படை சேருகின்றன. )
 
 
 காட்சி : 8
 இடம் : வீடு / தோட்டம்
 நேரம் : மாலை 5.00 மணி
 எறும்புகள் : ஃபார்மி மற்றும் மீள் காலனி எறும்புகள்
 
 கிட்டி : அய்யய்யோ!..... என்ன இவ்ளோ பேர் இருக்காங்க...... எங்கிருந்து வந்தாங்க....?
 தவின் : ராணுவ எறும்புகள்..... வேற ஏதோ வழியிலயிருந்து வந்திருப்பாங்க.... தளபதி.... இப்போ என்ன பண்றது..?
 (மழை பெய்யத் தொடங்குகிறது.)
 ஃபார்மி தளபதி : ஒரு யோசனை.. சீக்கிரம் தோட்டத்துப் பாத்திக்குள்ள போங்க..
 தவின் : என்ன சொல்றீங்க.. அது இன்னும் ஆபத்து..
 ஃபார்மி தளபதி : வேற வழி இல்ல..
 (ஃபார்மி காலனி எறும்புகள்
 வேகமாக ஓடுகின்றன.)
 மீள் தளபதி : அவங்கள துரத்திப் பிடிங்க.. யாரும் தப்பிக்கக் கூடாது..
 (மீள் எறும்புகள் துரத்துகின்றன.)
 ஃபார்மி தளபதி : சீக்கிரம்.. எல்லாரும் பாத்திக்கு நடுவுல நில்லுங்க ..
 (ஃபார்மி எறும்புகள் பாத்தியின்
 நடுவே கூடி நிற்கின்றன.)
 கிட்டி : மாட்டிக்கிட்டோம்..!!
 (மீள் காலனி எறும்புகள் திரள்கின்றன. )
 மீள் தளபதி : மனிதர்கள சேர்த்துக்கிட்டு எங்களோட மோதறீங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல நீங்க நல்லா அனுபவிக்கப் போறீங்க..
 ஃபார்மி தளபதி : நீங்க இப்பவே அனுபவிக்கப் போறீங்க.. அங்க பாரு.. (மீள் தளபதி திரும்புகிறது.)
 மீள் தளபதி : அய்யோ!
 (பாத்தியில் நீர் திரண்டு வருகிறது......
 ஃபார்மி எறும்புகள் மேட்டில் எறுகின்றன. )
 விட்டி : மாட்னாங்க..
 (மீள் எறும்புகள் தண்ணீரில்
 அடித்துச் செல்லப்படுகின்றன.)
 கிட்டி : நான் சொன்னன்ல.. சாயந்தரம் மழை வரும்னு....
 (விட்டி தலையசைக்கிறது.)
 ஃபார்மி தளபதி : அடுத்தவங்க பொருட்கள அபகரிக்கறவங்களுக்கு ஆபத்து எப்டி வேணாலும் வரும்.. வாங்க.. நம்ம முட்டைங்கள நம்ம காலனிக்கு எடுத்துட்டுப் போவோம்..
 (மழை நிற்கிறது........ஃபார்மி எறும்புகள் வரிசையாகச் செல்கின்றன.)
 (திரை)
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com