பயனற்றவை தரும் பயன்!

அடுத்த ஒலிம்பிக் போட்டிகள், ஜப்பானின் டோக்கியோ நகரில் 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்க உள்ளன.
பயனற்றவை தரும் பயன்!

அடுத்த ஒலிம்பிக் போட்டிகள், ஜப்பானின் டோக்கியோ நகரில் 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்க உள்ளன.
 இந்த ஒலிம்பிக் போட்டி இதுவரை நடந்த எல்லாப் போட்டிகளையும் விட, பல புதிய கண்டுபிடிப்புகளின் உதவியுடன் நடக்கப் போகும் புத்திசாலித்தனமான, அதி நவீனமயமானதாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.
 முடிந்தால் இப்போதே டிக்கெட் முன்பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை தொலைக்காட்சியின் மூலம் பார்ப்பதைவிட நேரில் பார்த்தால் மிகவும் அற்புதமாக இருக்கும் என்கிறார்கள்.
 ஜப்பானியர்கள் புதுவிதக் கண்டுபிடிப்புகளுக்குப் பெயர் பெற்றவர்கள். அதே போல உழைப்புக்கும் சுறுசுறுப்புக்கும் அவர்களிடமிருந்து நாம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த ஒலிம்பிக்ஸிலும் ஜப்பானியர்கள் புதிதாக ஒன்றை அறிமுகப்படுத்தவிருக்கிறார்கள்.
 வெற்றிப் பதக்கங்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலத்தால் உருவாக்கப்படும் அல்லவா? இந்தப் போட்டிக்கான பதக்கங்களை எலக்ட்ரானிக் கழிவுப் பொருட்களிலிருந்து கிடைக்கும் விலையுயர்ந்த உலோகங்களைக் கொண்டு தயாரிக்கவிருக்கிறார்கள்.
 நாம் வீண் என்று தூக்கி எறியும் கைபேசி, சார்ஜர்கள், ஹெட்செட்கள், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் ஆகியவைதான் எலக்ட்ரானிக் கழிவுப் பொருட்கள். இவற்றை குப்பையென ஒதுக்கிவிடாமல் அவற்றில் கலந்திருக்கும் உலோகங்களைத் தனியாகப் பிரித்து எடுத்து அதிலிருந்து பதக்கங்களைத் தயாரிக்கிறார்கள் ஜப்பானியர்கள். (அப்படி தயாரிக்கப்பட்ட பதக்கங்களைப் படத்தில் காணலாம்)
 ஜப்பானியர்கள் ஆண்டு ஒன்றுக்கு ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் டன் வீட்டு உபயோகப் பொருட்களான எலக்ட்ரானிக் சமாசாரங்களைத் தூக்கிக் குப்பையில் வீசுகிறார்களாம். இவற்றில் ஒரு லட்சம் டன் கழிவுப் பொருட்களைத்தான் மறுசுழற்சி செய்ய முடிகிறதாம்.
 பல்கலைக்கழக மாணவர்கள் சிலர்தான் இந்த எலக்ட்ரானிக் கழிவுகளில் இருந்து தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் நிக்கல் ஆகிய உலோகங்களைப் பிரித்து எடுக்கலாம் என்று யோசனை கூறியிருக்கி றார்கள். அவர்களது யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.
 இதற்காக நாடெங்கும் ஏராளமான பெட்டிகள் வைக்கப்பட்டன. இந்தப் பெட்டிகளில் மக்கள் தங்களுக்குத் தேவையில்லாத செல்போன்கள் போன்ற எலக்ட்ரானிக் சமாசாரங்களைப் போடலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். 2017-ஆம் ஆண்டே இந்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.
 போட்டிகளின் போது வழங்கப்படும் மொத்த பதக்கங்களின் எண்ணிக்கையான 5,000-ஐயும் தயாரிப்பதற்கு 8 டன் உலோகங்கள் தேவைப்படுகிறது. இதற்காக அரசு கவலைப்பட வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. 2017-ஆம் ஆண்டு முடிவதற்குள், ஜப்பானியர்கள் 75 டன்னுக்கும் அதிகமாக எலக்ட்ரானிக் கழிவுகளை வாரி வழங்கி, கொடைவள்ளல்களாகத் திகழ்ந்திருக்கின்றனர்.
 இந்த ஒலிம்பிக் போட்டி மிகவும் சிறப்புவாய்ந்ததாக அமையப் போவதுடன், கழிவுகளை எப்படிப் பயனுள்ளதாக்க முடியும் என்கிற விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தப் போகிறது.
 நீங்களும் இப்படி ஏதாவது புதிதாகச் சிந்தியுங்களேன். நமது நாட்டுக்கும் பெருமையைத் தேடிக் கொடுங்கள்.
 (இங்கே உங்கள் காதோடு ஒரு ரகசியம்: 2016-ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் 30 சதவீத பதக்கங்கள் இப்படிக் கழிவுப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டவைதான்)
 தொகுப்பு : அபிஷேக், திருச்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com