பொக்கிஷம்!

 இன்றைக்கு லேஃப்டை, அதான் பரணைக் க்ளீன் பண்ணலாம்னு சித்தப்பா சொன்னார். சரின்னு எல்லோரும் ஒத்துக்கிட்டோம்!
பொக்கிஷம்!

அகில்குட்டியின் டைரி!
 இன்றைக்கு லேஃப்டை, அதான் பரணைக் க்ளீன் பண்ணலாம்னு சித்தப்பா சொன்னார். சரின்னு எல்லோரும் ஒத்துக்கிட்டோம்! நான். சித்தப்பா, ரகு, ஜானகி சித்தி எல்லோரும் தயாரானோம். பரணிலிருந்து ஒவ்வொரு பெட்டியாக சித்தப்பா எடுத்துக் கொடுத்தார். பத்து அட்டைப் பெட்டிகள் இருந்தன. ஒரு ட்ரங்க் பெட்டியும் இருந்தது. ட்ரங்க் பெட்டி பார்க்க விநோதமா இருந்தது!
 எல்லாப் பெட்டிகளையும் கீழே இறக்கினோம். பழைய பித்தளைச் சாமான்கள் பெட்டி, பிளாஸ்டிக் சாமான்கள் அடங்கிய பெட்டி, புத்தகங்கள் அடங்கிய பெட்டி, எவர்சில்வர் பாத்திரங்கள் அடங்கிய ஒரு பெட்டி, கொலுப்பொம்மைப் பெட்டிகள், ஒரு பெட்டியில் தேங்குழல் நாழி, வில்லைகள், ஒரு வாக்கிங் ஸ்டிக், தாத்தாவின், அப்பாவின் உடைந்த மூக்குக் கண்ணாடி, ஒரு ருத்திராக்ஷ மாலை, சபரிமலை ஐயப்பன் சரண கோஷ புத்தகம், மேலும் சில ஸ்லோக புத்தகங்கள், தென்னை நார்க்கயிறு ஒரு பண்டல், மரத்தால் செய்த யானை பொம்மை, மரப்பாச்சிகள், தாத்தாவின் பழைய கிழிந்த கம்பளி அடங்கிய ஒரு பெட்டி, இரண்டு உட்காரும் மணைகள், மூக்கு உடைந்த தேங்காய்த் திருவி, அப்புறம் ஒரு கொக்கியில் நிறைய செருகப்பட்ட கடிதங்களுடன் இருந்தது. சுமார் 200 கடிதங்கள் இருக்கும். தாத்தாவின், (அப்பாவின் அப்பா) அப்பா, (கொள்ளுத் தாத்தா) சித்தப்பா, தம்பி, மற்றும் சிநேகிதர்கள் எழுதிய கடிதங்கள். அந்தக் கொக்கியில் இருந்த கடிதங்கள் சுமார் 60 வருஷத்துக்கு முன்னாலே எழுதப்பட்டது. சித்தப்பா பரணை நன்றாக ஒட்டடை அடித்துத் துடைத்தார். நானும் ரகுவும் பெட்டியில் இருந்த சாமான்களை எடுத்து நன்றாகத் துடைத்தோம். பெட்டியையும் நன்றாகத் துடைத்தோம். அம்மாவும் சித்தியும் வேண்டாத சாமான்களை ஒரு மூட்டையாகக் கட்டி வாசலில் வைத்தார்கள். எனக்கு மரத்தால் செய்த யானை பொம்மை ரொம்பப் பிடிச்சுது. அதைப் பாலீஷ் போட்டு டி.வி. மேலே வைக்கலாம்னு தோன்றியது. அதை எடுத்து வைத்துக் கொண்டேன்! ரகு பழைய சிறுவர் கதைகள் புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டான்.
 அப்பா நிறைய சாமான்களை கடையில் போட்டு விடலாம் என்று எல்லாவற்றையும் எடுத்து ஒரு மூட்டையாகக் கட்டி வாசலில் வைத்து விட்டார். பழைய சாமான்கள் வாங்கும் கடைக்குப் போன் செய்தார். அவர் வழக்கமாக பழைய பேப்பர்களை எடுத்துப் போக வருபவர்தான்.
 கொக்கியோடு இருந்த அந்தக் கடிதங்களையும் நான் எடுத்துக்கொண்டு வேண்டாத சாமான்களோடு வைக்கப் போனேன். உடனே சித்தப்பா, என்னைக் கூப்பிட்டு, அதைத் தூக்கியெறிய வேண்டாம்.... இங்கே கொண்டு வா'' என்றார்.
 "இது எதுக்கு சித்தப்பா!..... '' என்றேன்.
 சித்தப்பா அதில் இருந்த கடிதங்களை எடுத்து அடுக்கி அவரது ரூமிற்கு எடுத்துச் சென்றார். பரண் மேலே வைக்க வேண்டிய பெட்டிகள் கணிசமாகக் குறைந்து விட்டன. நான்கு பெட்டிகள் மட்டுமே இருந்தன. எல்லாவைற்றையும் சுத்தம் செய்து பரண்மேலே ஏற்றி வைத்துவிட்டோம்! எல்லோரும் குளித்துச் சாப்பிட்டோம். பிறகு சித்தப்பா இருந்த ரூமிற்குச் சென்றோம். அப்பா, அம்மா, நான், ரகு, ஜானகி சித்தி எல்லோரையும் சித்தப்பாவின் அறைக்கு வரச் சொன்னார். எல்லோரும் போனோம்.
 அவர் ஒவ்வொரு கடிதமாக எடுத்தார். அதில் இருந்த தகவல்ளைப் படித்தார். எல்லோரும் உட்கார்ந்து கேட்டோம். எனக்கு தாத்தா வீடெல்லாம் கற்பனையிலே ஓடியது. அந்த வீட்டை நான் பார்த்ததில்லை. கிராமத்தில் இருந்த மாடு கன்று போட்ட விஷயத்தைக் கூட கடிதத்தில் அப்பாவுக்கு எழுதியிருந்தார். ஒவ்வொரு கடிதத்திலேயும் ஒரு சம்பவம், கதை இருந்தது! தாத்தாவுக்கு வேலை கிடைத்தது!, தாத்தாவின், அண்ணன், தங்கைகளுக்கு கல்யாணம் நிச்சயம் செய்ய ஏற்பாடு செய்தது. கொள்ளுத்தாத்தா மறைந்து போன செய்தியை, அப்பாவின் சித்தப்பா எழுதியிருந்த கடிதம். அப்பாவின் பிரமோஷன். தாத்தாவுக்கு வயதாகி வறுமையில் வாடியது. பிறகு அவருக்குத் தெரிந்த நண்பர் உதவி செய்தது.... ஏன்,.... தாத்தாவுக்கு அப்பா பிறந்த, மகிழ்ச்சியான செய்தியை உறவினர்களுக்குத் தெரிவித்தது..... இப்படி ஏராளமான தகவல்களும், இன்ப, துன்ப நிகழ்ச்சிகளும் ரொம்ப உணர்வு பூர்வமா கதைகதையா விளக்கி சித்தப்பா சொன்னார்.
 ரொம்ப சுவாரசியமாவும், ஒரு பெரிய கதை போலவும், ஆச்சரியமாக எனக்கும், ரகுவுக்கும் இருந்தது! அந்த கடிதங்ளைத் தூக்கிப் போட்டிருந்தால் இத்தனை விஷயங்களை நாங்க தெரிஞ்சுக்கிட்டிருக்க முடியுமா? எனக்கும், ரகுவுக்கு அது பொக்கிஷம் போலத்தான் இருந்தது! நாங்க சித்தப்பாவுக்கு தேங்ஸ் சொன்னோம்!
 - முற்றும் -
 அகில்குட்டி
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com