வியாதிகளுக்கு அருமருந்து! கிளுவை மரம்!

நான் தான் கிளுவை மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் காம்மிபோரா கவுடாட்டா என்பதாகும்.
வியாதிகளுக்கு அருமருந்து! கிளுவை மரம்!

மரங்களின் வரங்கள்! 
 என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?
 நான் தான் கிளுவை மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் காம்மிபோரா கவுடாட்டா என்பதாகும். நான் பர்சேராசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், அசாம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுவேன். தமிழ்நாட்டில் தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் நீங்கள் என்னை பார்க்கலாம். பொதுவாக வீட்டு வாசல் வேலிகளிலும், வயல்வெளிகளிலும் என்னைக் காணலாம்.
 பஞ்சவில்வங்கள் எனப்படும் வில்வம், மாவிலங்கை, நொச்சி, விளா மற்றும் கிளுவை ஆகியவைகளில் நான் முக்கியமானவன். எனக்கு கோகுல் என்ற வேறு பெயருமுண்டு. மனிதர்களைத் தாக்கும் நோய்களை ஓட ஓட விரட்டி அழிக்கும் மருந்து எங்கிட்டே இருக்கு. உங்களின் சிறுநீரகத்தைப் பாதுகாக்கவும், கல்லீரலின் வீக்கத்தை குணமாக்கவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும், சிறுநீரகக் கற்களை கரைக்கவும், மூட்டு தேய்மானத்தை குணமாக்கவும், மார்புச் சளிக்கும், வெண்குஷ்டத்துக்கும், பக்கவாதம், மலச்சிக்கல் மற்றும் மூலம் போன்ற நோய்களுக்கும் எங்கிட்ட மருந்து இருக்கு.
 அடுக்கான இலைகளுடனும், நீண்ட தண்டுகளுடனும் கிராமப்புறங்களில் வயல்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களைக் காக்கும் அரணாக நான் இருக்கேன். சுவைக்க சிறிது புளிப்புடன், துவர்க்கும் குணமுடைய என் இலைகள், வேர், தண்டு பட்டை, பிசின் போன்றவை வியாதிகளைத் தீர்க்கும் குணமுடையவை.
 என் இலைகளை நீரில் நன்கு கொதிக்க வைத்து, அந்த நீரைப் பருகி வந்தால் உங்கள் உடல் பாதிப்புகள் அனைத்தும் விலகும். என் இலையை அரைத்து தடவி வந்தால், வெண்குஷ்டம் எனும் சரும வியாதி இருந்த இடம் தெரியாது. சிலருக்கு உடல்சூட்டினால், கடுமையான வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டு, சிறுநீர் கழிக்க முடியாத அளவுக்கு வேதனை ஏற்படும். இப்பிரச்னையை நீக்க என் இலைகளை நன்கு அரைத்து, கடைந்த மோரில் கலந்து பருகி வர வயிற்றுக்கடுப்புகள் குணமாகும்.
 என் மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசினை ஆதாரமாக வைத்து பல மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த மருந்து சிறுநீரகக் கோளாறுகளுக்கும், நரம்புத் தளர்ச்சி நோய்களுக்கும் அருமருந்தாக பயன்படுகிறது. என்னிடமிருந்து கிடைக்கும் ஒலியோ ரெசின் எனும் பிசின் தான் சிறுநீரகக் கோளாறுகளையும் மற்றும் நரம்புத் தளர்ச்சியையும் போக்குகிறது மற்றும் தோல் நோய்கள் மற்றும் வயிறு கோளாறுகளுக்கு அரு மருந்தாகிறது. என் பிசினை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கொப்பளித்தால் தொண்டைப்புண் ஆறிவிடும்.
 கால்நடைகளுக்கு என் இலை நல்ல தீவனமாகும். என் மரத்தின் பட்டை, நரம்புகளையும், தசையையும் பாதுகாக்கும். புஷ்ப விதிகளின்படி என் மரப்பூ கோட்டுப் பூ வகையைச் சார்ந்தது. கல்லீரல் வீக்கத்தால், கல்லீரல் செயலிழக்கும் கடுமையான நிலையை சரி செய்ய வேண்டுமா, என் பிசினை தூளாக்கி வெந்நீரில் கலந்து தினமும் காலையில் பருகி வந்தால் வீக்கம் குறைந்து நல்ல பலன் கிடைக்கும்.
 நான் நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர், (திருகடைமுடி) அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோயிலில் தலவிருட்சமாக இருக்கேன். மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
 (வளருவேன்)
 -பா.இராதாகிருஷ்ணன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com