Enable Javscript for better performance
மரங்களின் வரங்கள்!: ஆஹா அற்புதம்! அக்ரூட் மரம்!- Dinamani

சுடச்சுட

  

  மரங்களின் வரங்கள்!: ஆஹா அற்புதம்! அக்ரூட் மரம்!

  By - பா.இராதாகிருஷ்ணன்  |   Published on : 12th October 2019 07:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sm17

  என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா, நான் தான் அக்ரூட் மரம் பேசுகிறேன்.  எனது அறிவியல் பெயர் ஜல்கன்ஸ் என்பதாகும்.  நான் வால்நட் குடும்பத்தைச் சேர்ந்தவன்.  நான் சிக்கிம், நேபாளம், இமாலயப் பகுதிகளில் அதிகம் காணப்படறேன்.  அக்காலத்தில் ரோமர்களும், கிரேக்கர்களும், பிரெஞ்சு மக்களும் என் விதையை அதிக அளவில் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதன் முழுமையான பகுதியை அக்ரூட் என்றும், உடைந்த பகுதியை வால்நட் என்றும் அழைப்பார்கள். என் பருப்பு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன், உங்கள் மூளை உள்ளிட்ட உள்ளுருப்புகளுக்கு அதிக நன்மை செய்கிறது.  எங்கிட்ட புரதம், கால்சியம், மெக்னீசியம், ஜிங்க், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஈ போன்றவை அதிகமாயிருக்கு. அதாவது குழந்தைகளே, உங்கள் மூளை வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் இதிலிருக்கு. 

  என் மரத்தின் பட்டை, இலை, கனி போன்றவை அதிக மருத்துவப் பயன் கொண்டவை. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் அதிக அளவில் என்னிடமுள்ளது.  என் வால்நட் விதைகள் ருசியானது, அதிக சத்து நிறைந்தது. இதில் விட்டமின்கள், அமினோ அமிலங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. வால்நட் பருப்பில் மனிதனின் மன அழுத்தத்தை போக்கும் குணம் இருப்பதாக ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

  என் இலை மற்றும் பட்டை வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது.  இவை தோல் நோய்கள், எக்ஸிமா, காசநோய் ஆகியவற்றுக்கும் மருந்தாகிறது. என் கனிகள் உடலுக்கு நல்ல வலுவைத் தருவதோடு, வாதநோய்களுக்கும் தீர்வாகும்.  என் காய்களின் மேல் உள்ள கிருமிகளை அழிக்க  வல்லது.  குழந்தைகளே, வால்நட் பருப்பின் உள்கட்டமைப்பைக் கண்டால் உங்கள் மூளையைப் போலிருக்கும்.  அது உங்களின் நினைவுத் திறனை அதிகப்படுத்த உதவும். ஒமேகா-3 இதில் அதிகமுள்ளது. வால்நட்டிலுள்ள புரதசத்து அல்சீமர் எனும் மறதி நோயை முற்றிலும் கட்டுப்படுத்தும். குழந்தைகளே, முதியவர்களே வருத்தாதீங்க, இன்றைய முதியோர்கள், நேற்றைய குழந்தைகள், இன்றைய குழந்தைகள் நாளைய முதியவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால, உங்களுக்கு வயதானாலும் மூளை சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா வால்நட் பருப்பை சாப்பிடுங்க.  இது முதுமையால் ஏற்படும் மறதி, நினைவாற்றல் இழப்பு, மனத்தளர்ச்சி எனப்படும் டெமன்சியா நோயை தவிர்க்கவும் உதவும். உங்க தாத்தா, பாட்டிகளுக்கும் கொடுங்க. எல்லோரோடும் பகிர்ந்து சாப்பிடுங்க. அதனால் தான்,  நம்ம திருவள்ளுவரும், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை என்கிறார். 

  இப்ப எல்லாம் நீங்க உடல் பருமனாகவும், கொழுப்பு அதிகம் கொண்டவர்களாகவும் இருக்கறீங்களாமே. உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு ஏற்படும். உங்களுக்கு அதிகம் கொழுப்பு இருக்கா, கவலைப்படாதீங்க. பென்சில்வேனியாவிலுள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் என்னை தொடர்ந்து ஆராய்ச்சி செய்தாங்க.  உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் திறன் எனக்கு நிகரா யாருமில்லைன்னு கண்டுபிடிச்சிருங்காங்க.  உங்கள் உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ருட் பருப்பு  முதலிடத்திலுள்ளது என அந்த ஆராச்சியாளர்கள் தெரிவித்திருப்பது எனக்கு சந்தோஷம்.  நான் முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளை பின்னுக்குத் தள்ளிட்டு  முதலிடத்தில் நான் தான் இப்போ இருக்கேன்.  ஏன்னா, எங்கிட்ட தான் பாலிபெனால் எனும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் இருக்கே. என் பருப்பு உங்கள் ரத்தத்திலுள்ள கொழுப்பின் அளவைக் குறைத்து உங்களை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைக்கும். என் தமிழாண்டு விபவ. இயற்கையின் கொடை மரங்கள். மரங்களை அழிப்பது மடமை. மரங்களைக் காப்பது உங்கள் கடமை. மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

  (வளருவேன்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai