அகில்குட்டியின் டைரி!: பாட்டி!  

சித்தப்பா, என்னையும், ரகுவையும் பீச்சுக்குக் கூட்டிக்கிட்டுப் போறதா சொன்னார். பீச் வீட்டிலிருந்து 4 கி.மீ தூரம் இருந்தது. எங்க பஸ் ஸ்டாப்பிலேயிருந்து 4 ஸ்டாப்பிங் இருக்கும்!.
அகில்குட்டியின் டைரி!: பாட்டி!  

சித்தப்பா, என்னையும், ரகுவையும் பீச்சுக்குக் கூட்டிக்கிட்டுப் போறதா சொன்னார். பீச் வீட்டிலிருந்து 4 கி.மீ தூரம் இருந்தது. எங்க பஸ் ஸ்டாப்பிலேயிருந்து 4 ஸ்டாப்பிங் இருக்கும்!. நாங்க பஸ் ஸ்டாண்டுக்கு சென்றோம். பீச்சுக்கு "12 பி'  பஸ் வரும்.  வந்துவிட்டது! 

மூணு பேரும் ஏறினோம்! ஹை!.... பஸ் காலியா இருந்தது! நானும் ரகுவும் ரெண்டு சீட்டிலே உட்கார்ந்தோம்! ரகு ஜன்னலோர சீட்டுக்கு அடம் பிடித்தான். நான் அவனுக்கு விட்டுக் கொடுத்துட்டேன். காலை ஆட்டிக் கொண்டே ஜாலியா வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தான். ஜவுளிக்கடை, பாத்திரக் கடை, ஒரு புது செல்ஃபோன் கடை, காய்கறி, பழ மார்க்கெட் எல்லாம் வந்தது. கண்டக்டர் பஸ் நிறுத்தத்தில் நிற்பதற்காக விசில் ஊதினார்.  ""மார்க்கெட் ஸ்டாப்பிங்..... மார்க்கெட் ஸ்டாப்பிங்!...'' அப்படீன்னு குரல் கொடுத்தார். இதுதான் எங்க ஸ்டாப்பிங்லேயிருந்து முதல் ஸ்டாப்பிங்!.... பீச்சுக்கு இன்னும் மூணு ஸ்டாப்பிங் இருக்கு! சில பேர் இறங்கினாங்க.... திபு, திபுவென சுமார் முப்பது பேர் ஏறிட்டாங்க... சிலர் காய்கறிக் கூடைகள், பழக்கூடைகளோடு ஏறிட்டாங்க.... பஸ் ரொம்ப நெரிசலாப் போச்சு!.... சித்தப்பா பக்கத்தில் ஒரு சீட் காலியா இருந்தது! அதில் ஒரு வயதானவர் உட்கார்ந்து விட்டார். வேறு சீட் காலி இல்லை. எல்லோரும் நின்னுக்கிட்டிருந்தாங்க.... கண்டக்டர் விசில் கொடுத்தார் பஸ் கிளம்பிவிட்டது. கண்டக்டர் உட்கார்ந்த நிலையில் அனைவருக்கும் டிக்கெட் கொடுத்துக்கிட்டு இருந்தார். ஒரு வயதான பாட்டி, கண்ணாடி போட்டுக்கிட்டிருந்தாங்க.... கையில் ஒரு சின்னப்பை, அப்புறம் ஒரு எண்ணைட் டின் மாதிரி வெச்சிருந்தாங்க, டிக்கெட் வாங்கிக்கிட்டு நாங்க உட்கார்ந்திருக்கிற சீட் கிட்டே வந்தாங்க.... ரகு வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டான். 

எனக்கு அந்தப் பாட்டியைப் பார்த்தா பாவமா இருந்தது. ""பாட்டி, இங்கே உட்காருங்க...'' அப்படீன்னு சொல்லிட்டு எழுந்து நின்னேன். பாட்டி சிரித்துக் கொண்டே என் சீட்டில் உட்கார்ந்தார். பக்கத்தில் எண்ணைட்டின்னை வெச்சாங்க...

ரகு பாட்டியைப் பார்த்தான்..... என்னையும் பார்த்தான்.... 

""உன் தம்பியா?...'' என்று ரகுவைக்காட்டி என்கிட்டே கேட்டார். 

நான், ""ஆமாம்'' அப்படீன்னேன். பஸ் மேலும் ஒரு ஸ்டாப்பிங்கில் நின்றது. பின் கிளம்பியது.  

""மணிக்கூண்டு ஸ்டாப்பிங்கெல்லாம் இறங்குங்க...'' என்றார் கண்டக்டர். பீச்சுக்கு இன்னும் ஒரு ஸ்டாப்பிங்தான் இருக்கு.  நிறையப் பேர் இறங்கிட்டாங்க...பாட்டியும் தன் எண்ணைட்டின்னோடு, பையோடு இறங்கிப் போயிட்டாங்க.   மறுபடியும் பஸ் காலியாகி விட்டது! நான் மறுபடியும் ரகுவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தேன். நான் உட்காரப் போன இடத்தில் ஒரு சிறிய பிரவுன் கவர் இருந்தது. அதில் ஒரு ஆஸ்பத்திரி சீட்டு இருந்தது! அதில், ஆஸ்பத்திரி பேரு, நோயாளியின் பெயர் என்ற இடத்தில்  சாரதாம்பாள், வயது 78 என்றும், வைத்தியம் செய்துகிட்ட தேதி, மருந்துக்கான பிரிஸ்கிரிப்ஷன், கொஞ்சம் மாத்திரைகள் எல்லாம் இருந்தது. 

""என்னடா ரகு இது?'' ன்னேன்.

""அநேகமா இப்போ வந்துட்டுப்போன பாட்டியோடதாதான் இருக்கும்!... எப்படித் திருப்பித் தர்றது?''

சித்தப்பாகிட்டே சொன்னோம். ""சரி இறங்கிட்டு யோசிக்கலாம்!'' னு சொல்லிட்டு அந்த பிரவுன் கவரை வாங்கித் தன் பாண்ட் பாக்கெட்டில் வெச்சுக்கிட்டார்.

பீச்சுக்குப் போனோம். நானும், ரகுவும் சித்தப்பாவின் கையைப் பிடிச்சுக்கிட்டு ஜாலியா காலை நனைச்சோம்! ரொம்ப சந்தோஷமாத்தான் இருந்தது. சித்தப்பா காற்றில் சுத்தும் விசிறி வாங்கித் தந்தார். அதை மணலில் செருகினோம். அது கலர் ஆரங்களோட சுத்தறதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. சிலர் காற்றாடி விட்டுக்கிட்டிருந்தாங்க. சில குழந்தைகள் ஊஞ்சல் ஆடிக்கிட்டிருந்தாங்க. சிலர் பந்து விளையாடிக்கிட்டு இருந்தாங்க...  சித்தப்பா, நான், ரகு எல்லோரும் மணலில் உட்கார்ந்தோம். 

""ஐயா சுண்டல்!...'' அப்படீன்னு ஒரு குரல் கேட்டது. நானும்,  ரகுவும் திரும்பிப் பார்த்தோம்! அதே பாட்டிதான்! 

""உங்க பேரு சாரதாம்பாளா?'' அப்படீன்னு கேட்டார் சித்தப்பா! 

""ஆமாங்க தம்பி, உங்களுக்கு எப்படித் தெரியும்?'' அப்படீன்னு கேட்டாங்க பாட்டி. சித்தப்பா எல்லாத்தையும் விவரமாச் சொல்லி கவரை ஒப்படைத்தார்.  

""ரொம்ப நன்றி தம்பி!.... என்னோட மாத்திரைகள்தான்.... நானே தவறவிட்டதை கவனிக்கலே.... எப்பவும் முதல் ஸ்டாப்பிங்லேயே இறங்கிடுவேன்..... அங்கேயிருந்து இந்த சுண்டலை வித்துக்கிட்டே வருவேன்!.... பஸ்ஸிலே என் பக்கத்திலே உட்கார்ந்து வந்த பிள்ளைகள்தானே இவங்க.... ரொம்ப நல்ல பிள்ளைங்க!'' அப்படீன்னாங்க பாட்டி. 

எல்லோருக்கும் ஒரு பொட்டலம் சுண்டல் தந்தாங்க..... சித்தப்பா அதை வாங்கிக்கச் சொன்னார். சித்தப்பா அதற்குக் காசு கொடுத்தார். 

""பரவாயில்லே தம்பி, காசு வேணாம்....'' அப்படீன்னாங்க பாட்டி. 

""காசு வாங்கிக்கலேன்னா சுண்டலைத் திருப்பித் தந்துடுவோம்!... "" என்றார் சித்தப்பா சிரித்துக்கொண்டே. பாட்டி காசு வாங்கிக்கொண்டு மெல்ல நடந்து போனாங்க.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com