கருவூலம்: சூரியன்! - உலகின் பிறப்பிடம்!

உலகத்தின் பிறப்பிடம் சூரியன்!  சூரியனிடமிருந்து உலகம் தோன்றிய கோட்பாடுகள் பலவாக உள்ளன. நாம் காணும் சூரியன் ஒரு விண்மீனே! 
கருவூலம்: சூரியன்! - உலகின் பிறப்பிடம்!

உலகத்தின் பிறப்பிடம் சூரியன்!  சூரியனிடமிருந்து உலகம் தோன்றிய கோட்பாடுகள் பலவாக உள்ளன. நாம் காணும் சூரியன் ஒரு விண்மீனே! 

சூரியன் வேறு எதையும் சுற்றாமல் தானே வேகமாகச் சுழன்றுகொண்டு தன்னுடைய சூரிய மண்டலத்துடன் நொடிக்கு 12.5 மைல் வேகத்தில் ""லைரா'' என்ற விண்மீன் மண்டத்தை நோக்கி விரைகிறது. சூரியன் சுழலும்போது 80,000 மைல் உயரத்திற்கு அதன் தீச் சுவாலைகள் எழுகின்றன. இவ்வாறு எழுகின்ற தீச்சுவாலைகள் சிதறி, வீசி எறியப்பட்டு புவியும் கோள்களும் உண்டாயின என்பது ஒரு கோட்பாடு. நம் சூரியன் மீது வால் நட்சத்திரமோ, அல்லது வேறு சூரியனோ மோதியதால் சிதறல்கள் ஏற்பட்டன என்றும், அதில் சிதறிய துண்டுகளே கோள்களாக உருவெடுத்ததாக இன்னொரு கோட்பாடு கூறுகிறது. 

ஆனால் அண்மைக்கால கோட்பாடு, சூரியனைச் சுற்று வந்த ""நெபுலா'' என்ற வாயு மண்டலம் தூசி முதலியவற்றால் உருண்டு திரண்டு பூமியும், கிரங்களும் உருவாகியிருக்கக் கூடும் என்று கூறுகிறது. பூமியின் வயது சுமார் 460 கோடி ஆண்டுகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பூமியின் மீது காணப்படும் பழம்பாறைகளின் மீது நடத்திய தொன்மையான ஆராய்ச்சி இதனை நிரூபிக்கிறது.

சூரியனிடம் இருந்து வெளித்தள்ளப்பட்ட கிரகங்களும் சூடான வாயுக்களாகவே நீண்ட நெடுங்காலம் இருந்துள்ளன. இன்றும் கூட நம் உலகத்தின் மையப்பகுதி வெப்பம் மிகுந்த இறுகிய பாறைக்குழம்புகளாகவே உள்ளது! நாளடைவில் சூரியனில் இருந்து 14, 94,07,000  கி.மீ. விலகிச் சென்றதால், குளிர்ச்சியடைந்த வாயுக்கள் திரவமாக மாறின. மழைப் பொழிவால் பூமியின் மேற்பகுதி வெப்பம் தணிந்து, கூம்பு வடிவ மலைகள் உண்டாயின. மழையாலும் காற்றாலும் மலைகள் அரிக்கப்பட்டு மண் தோன்றியது. இவ்வாறு படிப்படியாக உலகத்தின் தோற்றம் மலை, நிலம், மண், கடல் என்று மாறியது. உலகில் உயிரினத் தோற்றத்திற்கு உகந்த தட்பமும், வெப்பமும் நிலவியது.

உலகின் முதல் உயிரினங்கள் நீரிலேயே பிறந்தன. முதலில் நீர்த்தாவரங்கள் தோன்றி அதன்பின் நகரும் ஓரணு உயிர், ஈரணு உயிர், அதன்பின் பல அணு உயிர்கள் தோன்றின. அடுத்து நிலத்திலும், நீரிலும் வாழக்கூடிய பல்லி, மீன், தவளை போன்ற நில, நீர் உயிரனங்கள் தோன்றின. அதன் பிறகு உயிரனங்களின் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டது. அதன்படி முதுகு எலும்பு உள்ள உயிரினங்கள், பாலூட்டிகள் தோன்றின. இந்த உயிரினங்களும் படிப்படியாக பரிணாம வளர்ச்சியடைந்து குரங்கினத்தில் இருந்து மனித இனம் தோன்றியது. மனிதன்தான் பரிணாம வளர்ச்சியின் கடைசி நிலை என்று எளிதில் கூறிவிட முடியாது. மேலும் பரிணாம வளர்ச்சி அடைந்து சூப்பர் மனித இனம் தோன்றும் வாய்ப்பும் இருக்கிறது!

சூரியனைப் பற்றி மேலும் சில தகவல்கள்!

சூரியனின் விட்டம் - 14,00, 000 கி.மீ. ஆகும்! இது பூமியின் விட்டத்தைவிட 109 மடங்கு ஆகும்!
எடை  - இருநூறு, கோடி, கோடி,  கோடி கி. கிராம். இது பூமியின் எடையைவிட 3, 33,000 மடங்கு ஆகும். 
வயது - 4.5 கோடி ஆண்டுகள்!  மொத்த ஆயுட்காலம் 1000 கோடி ஆண்டுகளாம்!
அடர்த்தி - நீருடன் ஒப்பிடுகையில் 14, உள் மையத்தில் 160, (நீரின் அடர்த்தி எண் - 1)
கதிரவனிடமிருந்து பூமியின் தூரம் - 14,96,00,000 கி.மி. ஆகும். இது சுற்றுப்பாதையின் வேறுபாட்டால் சுமார் 15 லட்சம் கி.மீ. வரை வேறுபடும்.
முக்கியத் தனிமங்கள்- ஹைட்ரஜன், ஹீலியம், ஆக்ஸிஜன், கார்பன், நியோன்

கதிரியக்கத்தில் விண் வெளிக்குப்பை!

உலகில் மட்டும்தான் குப்பை கூளம் இருக்கிறது என்று சிலர் நினைக்கின்றனர்! ஆகாயம் மிகத் தூய்மையாக இருக்கிறது என்றே நம்மில் பலர் நினைக்கிறோம்! ஆனால் அது உண்மையல்ல!  இப்போது வானவெளியிலும் குப்பைகள் அதிகமாகி விட்டன!  விண்வெளிப்பயணிகள் போட்டுவிட்ட திருகாணி, அவர்களது கையுறை, விண் ஊர்தியில்ருந்து கொட்டப்பட்ட கழிவுப் பொருட்கள் ஆகியவற்றோடு துணைக்கோள்களை விண்ணில் சுழன்று வரச் செய்யும் நூற்றுக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வெடிக்கும்போது சிதறுகின்ற பல்லாயிரக் கணக்கான உலோகத் துணுக்குகளும், தூசிகளும் குப்பையாக விண்வெளியில் பரந்து கிடக்கின்றன! 

விமானத்தில் பறந்து விண்ணைச் சுற்றி வந்தால் 7,500 க்கும் மேற்பட்ட பொருட்களைக் காண இயலும். இந்நிலையில் விண்வெளி ஆய்வு நிறுவனத்தினர் அறிவித்தபடி இந்த விண்வெளிக்குப்பைகள் அனைத்தம் கதிரியக்க மயமாகி வருகிறது என்பது ஒரு அபாயகரமான உண்மையாகும்!

1989 ஆண்டு விண்வெளி ஆய்வு நிறுவன விஞ்ஞானிகள் விண்வெளியில் 400 மைல் உயரத்திற்கு அப்பால் ஒரு வகைக் கழிவுப் பொருள் மேகத்திரள் போலக் குவிந்து கிடப்பதைக் கண்டு திகைப்படைந்தார்! சோவியத் விண்கலம் ஒன்றிலிருந்து கசிந்த சோடியம் - பொட்டாசியம் கலந்த இலட்சக்கணக்கான வெப்பத்தை ஆற்றும் துகள்கள்தான் (COOLANT) அம்மேகத்திரள் என்பதை ஆய்வு நிறுவன விஞ்ஞானி டொனால்டு கெஸ்லர் அறிவித்தார். துப்பறியும் துணைக்கோள்களை இயக்குவதற்கென்றே சோவியத் நாட்டினர் முப்பதுக்கும் மேற்பட்ட விண்கலங்களை விண்ணில் 150 மைல்களுக்கு அப்பாலும் உயரச் செல்லுமாறு ஏவினார்கள்! இப்படி அனுப்பட்ட, ""காஸ்மாஸ் 1900'' என்ற விண்கலம் தான் சுற்றி வரும் பாதையில் அறுநூறாவது மைலில் தடையேற்பட்டுக் கசியத் தொடங்கியது! இந்தக் கசிவினால் ஒன்று திரளும் துகள்கள் மிகுந்த உயரத்திற்குச் சென்று விடுகின்றன. கசிவுக்கு உட்படுகின்ற விண்கலங்கள் வெடிப்பதில்லை. ஆயினும் ஏனைய விண்கலங்களைப் போல வலுவிழந்து புமியில் விழுவதற்கு முன்னர் அழை தமது கதிரியக்கத் துகள்களை வெளியேற்றி விடுகின்றன. மணிக்கு இரண்டாயிரம் மைல் வேகத்தில் விண்ணில் சுழன்று வரும் கலங்களிலிருந்து வெளிப்படும் கழிவு சில சமயங்களில் துணைக் கோள்களின் போக்கையே தடுத்துவிடும்! 

எனவே அகில உலக விண் கழிவு நீக்கும் இணைப்பகம் (INTERNATIONAL SPACE DEBRIS CO-ORDINATING AGENCY) இது பற்றிச் சிந்தித்து, கழிவுகளைஎப்படிக் கையாளுவது என்பதோடு, முடிந்தால் அதனை மீண்டும் பயன் படுத்த இயலுமா என்பது பற்றி ஆய்ந்தது. மிகுதியான இத்தகைய விண்வெளிக் குப்பைகளைக் கழிப்பதில் ரஷ்யாவே (3800 துண்டுகள்) முதலிடத்தில் உள்ளது. அதையடுத்து அமெரிக்காவும் (3450 துண்டுகள்) குப்பைகளைக் கழிப்பதில் இரண்டவதாக உள்ளது. 

கண்காணிக்கும் நோக்கத்துடன் விண்ணில் ஏவப்படும் 29 வகையான துணைக்கோள்களுள் சில அணு சக்தியால் இயங்குவன! இவை மணிக்கு 150 மைல் முதல் 600 மைல் வேகத்தில் விண்ணைச் சுற்றி வருமாறு செயல்படுத்தப்பட்டுள்ளன. சில கலங்கள் 600 மைல் வேகத்தை அடைய முடியாமல் இடையிலேயே தமது வெப்பம் ஆற்றும் துகள்களை வெளியேற்றி விடுகின்றன. 

விண்வெளியிலும் மனிதன் குப்பை அகற்ற வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com