நினைவுச் சுடர்!: திறந்த ஜன்னலுக்கு வெளியே ஒரு சிறுவன்!

நினைவுச் சுடர்!: திறந்த ஜன்னலுக்கு வெளியே ஒரு சிறுவன்!

இத்தாலியில் உள்ள ஒரு பள்ளி வகுப்பறையில் பாடம் நடந்து கொண்டிருந்தது. வகுப்பறையின் ஜன்னலுக்கு வெளியே இருந்த   சிறு பாறையின் மீது  சிறுவன் ஒருவன் அமர்ந்து  கொண்டிருந்தான்.

இத்தாலியில் உள்ள ஒரு பள்ளி வகுப்பறையில் பாடம் நடந்து கொண்டிருந்தது. வகுப்பறையின் ஜன்னலுக்கு வெளியே இருந்த   சிறு பாறையின் மீது  சிறுவன் ஒருவன் அமர்ந்து  கொண்டிருந்தான். கிழிந்த உடையுடன் இருந்த அந்தச் சிறுவன் ஆசிரியர் நடத்தும் பாடத்தை வெளியில் அமர்ந்தவாறு கேட்டுக் கொண்டிருந்தான். பள்ளி வளாகத்திற்குள் அம்மாதிரியான தோற்றத்தில் நுழைய அனுமதி இல்லை. சிறுவனுக்கு அதைப் பற்றித் தெரியவில்லை. அவன் ஆழ்ந்து பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தான்!

பாடம் நடத்துக் கொண்டிருந்த ஆசிரியர் அவனை கவனித்து விட்டார். உடனே ஜன்னல் அருகே சென்று, ""ஏய்!.... இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டார்.

""சார்,.... நீங்க நடத்தும் பாடத்தை நான் இங்கேயிருந்தே கவனிச்சுக்கிட்டு இருக்கேன்!....''

""நிஜமாகவா?.... நம்பவே முடியவில்லையே!..... தினமும் இப்படி இங்கே வருகிறாயா?...ட''

""ஆமாம் சார்!.... தினமும் இப்படி வந்து இங்கே உட்கார்ந்து நீங்க நடத்தும் பாடங்களைக் கேட்பேன்!....''  

ஆசிரியருக்கு இதை நம்ப முடியவில்லை.... அவர் அந்த சிறுவனிடம்,  ""அப்படியானால் நான் பாடத்திலிருந்து உன்னிடம் சில கேள்விகள் கேட்கட்டுமா? நீ பதில் சொல்வாயா?''

""கேளுங்க சார்,...முயற்சி செய்கிறேன்!'' 

ஆசிரியர் அவனை விநோதமாகப் பார்த்தபடி பாடத்திலிருந்து சில கேள்விகள் கேட்டார். 

 சிறுவன் அனைத்துக் கேள்விகளுக்கும் மிகச் சரியாக விடையளித்துவிட்டான்!
ஆசிரியருக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது! 

""நீ பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்கலாமே!...'' 

""எனக்கு அதற்கான வசதிகள் இல்லையே சார்.... நான் ரொம்ப ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து விட்டேன்!'' 

ஆசிரியருக்கு அந்தச் சிறுவன் மேல் இரக்கமாகப் போய்விட்டது. 

""சரி, நீ படிப்பதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்!.... '' என்று கூறியபடி அந்தச் சிறுவன் படிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார் ஆசிரியர். 


நாட்கள் கடந்தன. அந்தச் சிறுவன்...... பின்னாளில் அதே பள்ளியில் ஆசிரியராகிவிட்டார்!.... அது மட்டுமல்ல.... பற்பல அறிவியல் நூல்களை எழுதினார்! இத்தாலியின் புகழ் பெற்ற தத்துவ ஞானியாக எல்லோராலும் போற்றப்பட்டார். அவரது பெயர், "லுடோவிகோ ஆன்டெனியோ முரடோரி!' 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com