யானைக்கு உதவிய எறும்புகள்

அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதி. குறுகிய ஒரு பாதை வழியாக யானை ஒன்று நடந்து போய்க் கொண்டிருந்தது.
யானைக்கு உதவிய எறும்புகள்


அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதி. குறுகிய ஒரு பாதை வழியாக யானை ஒன்று நடந்து போய்க் கொண்டிருந்தது.

அப்போது, ""யானையாரே!  பாத்து... பாத்து...! எங்களை மிதித்துவிடாமல் ஒதுங்கிப் போங்கள்'' என்று குரல் கேட்டு திடுக்கிட்டு நின்றது யானை.

காலருகே ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாகப் பயணித்துக் கொண்டிருந்த எறும்புக் கூட்டம் யானையின் கண்ணில் பட்டது. அந்த வரிசையில் முதலில் போய்க்கொண்டிருந்த பெரிய எறும்புதான் யானையை எச்சரித்தது. 

""யாரது... எறும்பா...? நீயா என்னைப் பார்த்து ஒதுங்கிப் போகச் சொல்கிறாய்? நான் எவ்வளவு பெரியவன்? என்னைப் பார்த்து இப்படிச் சொல்ல என்ன துணிச்சல் உனக்கு? ம்ம்ம்... நீங்கள்தான் நான் போகும் வழியில் குறுக்கே போய்க்கொண்டிருகிறீர்கள்,  முதலில்  நீங்கள் ஒதுங்கிப் போங்கள்...'' என்றது கர்வம் கொண்ட அந்த யானை.

""அது இல்லை யானையாரே...! எங்களை மிதிக்காமல் ஒதுங்கி வழிவிட்டு எங்களுக்கு உதவி செய்தாயானால், சமயம் வாய்க்கும் போது நாங்களும் உனக்கு உதவுவோம்...''

இதைகேட்டு "கொள்'ளென்று சிரித்த யானை, ""நீங்களா எனக்கு உதவுவீர்கள்? வேடிக்கையாக இருக்கிறது... உங்களையே உங்களால் காப்பாற்ற முடியாதே... இதில் என்னை எப்படிக் காப்பாற்றுவீர்கள்? சின்னஞ்சிறிய உயிரினமே... பிதற்றாமல் வழிவிட்டு விலகிப் போ...'' என்றது யானை.

""அப்படிக் கூறாதீர் யானையாரே...நாங்கள் நினைத்தால் உனக்கு உதவ முடியும். அந்த நம்பிக்கை எங்கள் இனத்திற்கு இருக்கிறது'' என்றது எறும்பு.

""அப்படி நீங்கள் செய்யும் உதவி எனக்குத் தேவையில்லை'' என்று யானை கர்வத்துடன் கூறியதுடன் நிற்காமல், வேண்டுமென்றே சில எறும்புகளின் தலையில் தன் காலை வைத்து அழுத்திவிட்டு முன்னே சென்றது.

யானை காலடி பட்டு சில எறும்புகள் அழிந்ததைக் கண்ட பெரிய எறும்பு மிகவும் வருந்தியபடி, "யானை செல்லும்வரை ஒதுங்கி நிற்போம்' என்று மற்ற எறும்புகளிடம் கூறியது.

யானை சிறிது தூரம் சென்ற பிறகு, எறும்புகள் அனைத்தும் அந்தப் பாதையைக் கடந்தன. அப்போது "டமால்' என்று பெரும் சப்தம் கேட்டது. எறும்புகள் எல்லாம் சப்தம் கேட்ட திசையை நோக்கித் திரும்பி நடக்கத் தொடங்கின. அங்கே ஒரு சிறிய பள்ளத்தில் சறுக்கி விழுந்து கிடைந்தது ஒரு யானை. சற்று முன் சென்ற யானைதான் அது என்பதை அந்தப் பெரிய எறும்பு புரிந்து கொண்டது. 

குழியிலிருந்து வெளியே வரமுடியாமல் யானை குரல் கொடுத்தது, தவித்தது. யாரும் வரவில்லை. அப்போது காட்டில் இருள்சூழத் தொடங்கியது.

திடீரென்று கண்ணைக் கவரும் வெளிச்சம் குழியில் விழுந்ததும் யானை திடுக்கிட்டுக் கண் விழித்து மேலே பார்த்துக் குரல் கொடுத்தது. அங்கே சிங்கம், புலி, கரடி, குரங்கு, காட்டு எருமை, எலி முதலியவை நின்று கொண்டிருந்தன. குழியைச் சுற்றி மின்மினிப் பூச்சிகள் தங்கள் உடம்பிலிருந்து வெளிவரும் வெளிச்சத்தை அந்தக் குழியில் செலுத்தி, டார்ச் லைட் போல ஒளியைக் கொடுத்துக் கொண்டிருந்தன. சிங்கம், புலி, கரடி, காட்டு எருமை எல்லாம் உடனே அக்கம் பக்கத்தில் இருந்த மரங்களை ஒடித்து வந்து குழியில் நட்டு, குழிக்கும் மேட்டுக்குமாகப் பாலம் அமைத்தன. எலி மண்ணைக் குடைந்து குடைந்து யானை எழுந்துவரும்படியாகக் குழியை அகலப்படுத்தியது. குரங்கு, மரத்துக்கு மரம் தாவிச்சென்று அதில் தொங்கிக்கொண்டிருந்த உறுதியான காட்டுக் கொடிகளை எல்லாம் இழுத்துவந்து பெரிய கயிறுபோல ஒன்றாக்கி, குழிக்குள் போட்டு யானையைத் தும்பிக்கையால் பிடித்துக் கொள்ளச் சொன்னது. மற்ற மிருகங்கள் அனைத்தும் கயிறின் மறுபுறத்தைப் பற்றிக்கொண்டு  தங்களது பலத்தை எல்லாம் பயன்படுத்தி யானை மெல்ல மெல்ல மேலே ஏறிவர உதவின. 

இரண்டு மணிநேர முயற்சிக்குப் பிறகு வெளியே வந்த யானை, தன்னைக் காப்பாற்றிய மிருகங்களைப் பார்த்து, ""உங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி. நீங்கள் மட்டும் இல்லையென்றால் என் நிலைமை என்னவாகியிருக்கும்?'' என்றது.

""உன்னைக் காப்பாற்றியது நாங்கள் அல்ல; இவர்கள்தான். நீ நன்றி கூறவேண்டியது இவர்களுக்குத்தான்'' என்று கரடி கீழ் நோக்கிக் கையைக் காட்டியது. 

""என்ன இவர்களுக்கா... சீ...? இவர்களால் எனக்கு என்ன உதவி செய்துவிட முடியும்?'' என்றது கர்வம் அடங்காத அந்த யானை. 

""ஆம், இவர்கள்தான் உன்னைக் காப்பாற்றினார்கள். அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த என்னை இந்த எறும்புகள் அனைத்தும் ஒருசேரக் கடித்தபோது, விழித்துக்கொண்டு கோபப்பட்டேன். தொடர்ந்து கடிக்கவே... என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்தேன்.  உடனே  இவர்கள் வரிசையாகச் சென்று நீ இருக்கும் இந்தக் குழியை எனக்கு அடையாளம் காட்டி, நீ ஆபத்தில் இருப்பதை  உணர்த்தின. உடனே நம் காட்டு நண்பர்களை எல்லாம் கூட்டிக்கொண்டு இங்கு வந்து சேர்ந்தோம். சிறிய உயிரினமாக இருந்தாலும், எவ்வளவு பெரிய அறிவு இவற்றுக்குப் பார்த்தாயா? ஆனால், எவ்வளவு பெரிய உயிரினமாக இருந்தாலும் அந்த எறும்புகளை நீ கேவலமாகப் பார்க்கிறாயே அதுதான் மிகுந்த வேதனை அளிக்கிறது. இவை மட்டும் இல்லையென்றால் நாங்கள் எங்கே இந்த இரவில் வந்து உன்னைக் காப்பாற்றப் போகிறோம்...? நீ நன்றி கூறவேண்டியது இந்த எறும்புகளுக்குத்தான்'' என்றது புலி.

உடனே  காட்டு ராஜாவான சிங்கம் கர்ஜித்துக்கொண்டே, ""உருவத்தை வைத்து பெரியவர், சிறியவர் என்று எடை போடக்கூடாது, அலட்சியப்படுத்தக் கூடாது. ஆபத்துக்கு யார் உதவுகிறார்களோ அவரே உலகில் மிகப் பெரியவர். காட்டில் வாழும் நமக்கு எப்போது ஆபத்து வரும், யார் எப்போது உதவுவார்கள் என்பது தெரியாது. அதனால், காட்டில் உள்ள நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும், யாரையும் தாழ்வாக எண்ணக்கூடாது'' என்றது.

""என்னை மன்னித்துவிடுங்கள் எறும்பு நண்பர்களே... சிறிய உயிரினம்தானே என்று உங்கள் அருமை பெருமை தெரியாமல் கண்டபடி பேசிவிட்டேன். எவ்வளவு பெரிய உதவியை எனக்கு நீங்கள் செய்திருக்கிறீர்கள்.'' என்று மன்னிப்பு கேட்டது யானை.

""யானையாரே.... சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதை இப்போதாவது புரிந்து கொண்டீர்களே... அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது...'' என்றது பெரிய எறும்பு.

யானையைக் குழியிலிருந்து மீட்க இரண்டு மணி நேரம் போராடிய களைப்பு நீங்க,  எல்லா மிருகங்களும் அந்த யானையின் முதுகில் ஏறி உட்கார்ந்துகொண்டு காட்டில் உலா சென்றன...!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com