வெற்றிக்குப் படிகள்!

சந்தன  நல்லூர் கிராமத்தில் சங்கரன், முத்து நண்பர்கள்!ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தவர்கள் 
வெற்றிக்குப் படிகள்!


சந்தன  நல்லூர் கிராமத்தில் 
சங்கரன், முத்து நண்பர்கள்!
ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தவர்கள் 
ஒன்பதாம் வகுப்பு வரையிலுமே

ஒன்றாய்ப் படித்து வந்தார்கள்!
ஒருநாள் முத்து வெறுப்புடனே 
என்ன படித்தும் அரசுப் பணி
எதுவும் கிடைக்க உறுதியில்லை!

எனவே படிப்பை விடுகின்றேன்
என்றான் சங்கரன் வேண்டியுமே
முத்து தன்நிலை மாற்றவில்லை....
சங்கரன் தொடர்ந்தே படித்து வந்தான்!

காலம் கடந்தது கிராமத்திலே 
கடினமாக முத்துவுமே 
நாளும் உழைத்தும்  குடும்பத்தை 
நடத்திடப் போதிய வரவில்லை!

நாற்பது வயதே ஆனாலும் 
நடையில் தளர்ந்து போனானாம்!
வாட்டும் வறுமையில் தன் குடும்பம்
வாடிட மனமும் வெந்தானாம்!

ஒருநாள் வட்ட ஆட்சியரை
ஒருசிலர் பார்க்கச் சென்றனராம்
இருப்பிடப் பட்டா வேண்டுமென 
இவனும் கூடச் சென்றானாம்!

வட்ட ஆட்சியர் "சங்கரனும்!'
வந்த நண்பன் முத்துவினை 
கிட்ட அழைத்து அவன் நிலையை 
கேட்டவர் வருந்திச் சொன்னாராம்!

உண்மை நிலையை நீ சொன்னாய்
உணர்ந்தேன் நானும் ஆனாலும் 
என்னிடம் இருந்த நம்பிக்கையை 
இழந்திட வில்லை! நான் படித்தேன்!

அரசுப் பணிக்குத் தேர்வெழுதி
அடைந்தேன் வெற்றி! இன்றிந்தப் 
பெரிய பதவியை அடைவதற்குப் 
பெரிதும் காரணம் என் முயற்சி!

கடந்ததை விட்டிடு நீ விரும்பும் 
கடையை வைத்துத் தருகின்றேன்!
படித்திட வைத்திடு பிள்ளைகளை
படிக்கவும் உதவி செய்கின்றேன்!

உன்னால் பெற்றிட முடியாத 
உயர்வைப் பிள்ளைகள் பெறுவார்கள்!
நன்றே தழைத்திடும் உன் குடும்பம்!
நடந்திடு முயற்சியில் தளராதே!

நண்பன் சங்கரன் சொன்னதுபோல் 
நம்பிக்கை, முயற்சி கொண்டவனும் 
இன்று பலரின் உயர்வுக்கு 
எடுத்துக் காட்டாய் உயர்ந்தானே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com