மரமண்ணரிப்பின் மீட்பு கோங்கு மரம்

என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா? நான் தான் கோங்கு மரம் பேசறேன். எனது தாவரவியல் பெயர் ஹாப்பியா பர்விஃபுளோரா பெட் என்பதாகும். நான் டிப்டெராகார்பசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்
 மரமண்ணரிப்பின் மீட்பு கோங்கு மரம்

மரங்களின் வரங்கள்!
 என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா? நான் தான் கோங்கு மரம் பேசறேன். எனது தாவரவியல் பெயர் ஹாப்பியா பர்விஃபுளோரா பெட் என்பதாகும். நான் டிப்டெராகார்பசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு முள்ளிலவு என்ற பெயரும் உண்டு. என் இலைகள் கை போல் பிரிந்த நிலையிலிருக்கும். நான் நெடிதோங்கி வளருவேன்.
 என் மலர்கள் செந்நிறமாக இருக்கும். வெண்ணிற பஞ்சில் பொதிந்த வழவழப்பான உருண்ட விதைகளை நான் கொண்டிருப்பேன். நான் மிகவும் வலுவானவன், நீடித்து உழைப்பேன். என் சகோதரன் தேக்குப் போல் என்னையும் கரையான் தாக்காது. வெப்பத்தையும், மழையையும் தாங்குவேன். இப்போதெல்லாம் செலவைக் குறைக்க ஜன்னல்கள், கதவுகள் செய்ய என்னைத் தான் பயன்படுத்தறாங்க, மகிழ்ச்சி.
 என் உடம்பெங்கும் கூம்பு வடிவ முட்கள் வளர்ந்திருக்கும். தமிழகத்துக் காடுகளிலும், ஆற்றோரங்களிலும் நான் வளருவேன். என் இலை, பூ, விதை, பட்டை, பிசின், பஞ்சு, வேர் ஆகியவை மருத்துவ பயன் மிக்கவை. என் வேர்கள் மிகவும் உறுதி வாய்ந்தது. அது மண்ணரிப்பைத் தடுக்க உதவுது.
 என் இலையையும், வேரையும் வெந்நீரிலிட்டு காய்ச்சி அருந்தி வந்தீர்களேயானால் உங்கள் அக உறுப்பு அழற்சியைத் தணிப்பதுடன், உடலும் பலம் பெறும். என்னுடைய பூவை துவையலாக செய்து சாப்பிட்டால் சிறுநீர் பெருகுவதுடன், மலச்சிக்கலையும் நீக்கும். என்னுடைய விதையும், பிசினும், இரத்தவிருத்திக்கு நல்ல மருந்து.
 என் மரக் கட்டைகள் படகுகள் செய்யவும், பாலங்கள் கட்டவும், ரயில் பாதைக் கட்டைகள் செய்யயும் பயன்படுகின்றன. நான் கடைசல் வேலைகளுக்கும் ஏற்றாற்போல் இருப்பதால் பரிசுப் பொருள்கள், சிற்பங்கள், அலங்காரப் பொருள்கள் செய்யவும் பயன்படறேன்.
 ஆமாம் குழந்தைகளே, எங்கிட்ட சொல்லவேயில்லை. மணிப்பூர் மாநிலம், காக்சிங் என்ற பகுதியை சேர்ந்த வாலன்டினா எனும் சிறுமி தன் வீட்டு வாசலை ஒட்டிய பகுதியில் சில மரக்கன்றுகளை வளர்த்து வந்தாளாமே, நேரம் கிடைக்கும் போதெல்லாம், அந்த மரத்துடன் பேசுவது, விளையாடுவது என்று இருந்தாளாமே, ஒரு நாள் சாலை விரிவாக்கத்திற்காக அந்த மரங்கள் வெட்டப்பட்டுக் கிடந்தததைக் கண்டு அந்தச் சிறுமி யார் சொல்லியும் கேட்காமல், மரம் இருந்த இடத்தை சுற்றி சுற்றி வந்து இந்த மரங்கள் என் தம்பி என்று சொல்லி தேம்பி, தேம்பி அழுதாளாமே. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட மணிப்பூர் மாநில முதலமைச்சர், அச்சிறுமியை மணிப்பூர் மாநிலத்தின் பசுமை திட்ட தூதராக நியமித்துள்ளாராமே. இது தான் உணர்வு, பாசம் என்பது. பார்த்தீங்களா குழந்தைகளே, எங்களின் பெருமையை. எங்களை நீங்கள் அழித்தாலும், உங்களுக்கு நாங்கள் தீங்கு செய்ய மாட்டோம். மாறாக, எங்களை காக்குகிறவர்களுக்கு விருதையையும், பெருமையையும் தேடித் தருவோம். மணிப்பூர் சிறுமி வாலன்டினா போல நீங்களும் எங்க மீது பாசம் கொண்டிருக்க வேண்டும். செய்வீங்களா? ஆறும், காடும் இயற்கை மனிதனுக்குத் தந்த வளங்கள். இவற்றை அழிப்பது மனித இனத்தின் தற்கொலை முயற்சியாகும். நீர்நிலைகளையும், காடுகளையும் நீங்கள் பாதுகாத்தால் உங்கள் வாழ்வு வளம் பெறும்.
 நான் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர், திருமங்கலக்குடி அருள்மிகு பிராணநாதேசுவரர், திருவாரூர் மாவட்டம், நன்னிலம், அருள்மிகு மதுவனேஸ்வரர், திருத்துறைபூண்டி வட்டம், திருக்கைச்சினம் (கச்சனம்), கைச்சினேஸ்வரர் கைச்சினநாதர் ஆகிய திருக்கோவில்களில் தலவிருட்சமா இருக்கிறேன். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
 (வளருவேன்)
 பா.இராதாகிருஷ்ணன்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com