தீபாவளி!
By DIN | Published On : 29th October 2019 01:09 PM | Last Updated : 29th October 2019 01:09 PM | அ+அ அ- |

புத்தாடை மின்னிட பூவாணம் கொளுத்தியே
பொழுதெல்லாம் கொண்டாடும் தீபாவளி!
மத்தாப்புச் சிரிப்புடன் பலகார இனிப்புகள்
பாடியே மகிழ்ந்திடும் தீபாவளி!
பொக்கைவாய் ஆட்டியே தாத்தாவும் பாட்டியும்
பூந்தியைத் தின்பதைப் பாருங்க!
சட்டுன்னு மாமாவும் கெட்டி உருண்டையைக்
கடித்தது எப்படி? கேளுங்க!
அதிரசம், முறுக்குடன், பஜ்ஜியும், சுளியனும்
அம்மா வைக்கிறாள் இலையினிலே!
இது போதும் என்றேதான் அப்பா சொல்வது
அம்மாவின் காதிலே கேட்கலே!
அண்ணனால் தின்ன முடியலே! தங்கையும்
மீதம் வெச்சுட்டா இலையிலே!
என்னோட இலையிலே இருந்தது வயிற்றுக்குள்
எப்படிப் போச்சுன்னு தெரயலே!
வருசத்தில் ஒரு நாளாய் தித்திக்கும் திருநாளாய்
வந்திடும் இந்தத் தீபாவளி!
தெருவெங்கும் சரவெடி! சிறுவர் கொண்டாட்டம்!
போற்றுவோம் இன்பத் தீபாவளி!
புலேந்திரன்