Enable Javscript for better performance
சமையல் கலை- Dinamani

சுடச்சுட

  

   சமையல் கலை  

  By DIN  |   Published on : 14th September 2019 10:56 AM  |   அ+அ அ-   |    |  

  NADAKAM

   ரேவதி சரவணன்

  அரங்கம்
   காட்சி - 1
   இடம் - இல்லம், மாந்தர் - ரேவதி, அவள் தாய் காமாட்சி அப்பா கிருஷ்ணதாசன்
   ரேவதி : அம்மா, சமையல் கத்துக்க ஆசைப்படறேன்ம்மா!....
   காமாட்சி : அப்படியா சொல்றே!........ நீ மேலே படிக்கப் போறதில்லையா?
   ரேவதி: உனக்கு உதவியா இருக்கேன்மா!.... எனக்கு சமையல் கலையிலே இன்ட்ரஸ்டா இருக்கும்மா!....
   காமாட்சி: அப்படியா, சரி.....அப்பாவுக்குச் சென்னையிலே வேலை!.... எப்போ பாரு சென்னையிலேயே இருக்கார்..... தேவகோட்டையில் நாம தனியாக் குடித்தனம் பண்ணிக்கிட்டிருக்கோம்!....
   ரேவதி : அம்மா ..... அப்பா, நான் மேலே படிக்கணும்னு நெனைப்பரோ என்னவோ.... ஃபோன் பண்ணா நான் சொன்னதைச் சொல்லும்மா.
   (அப்போது டெலிஃபோன் மணி அடிக்க)
   
   அம்மா : உங்க அப்பா தான் பேசறார்..... ம்...... சொல்லுங்க.... என்னது?..... மூத்தவளைப் பார்த்துட்டுப் போனவங்களுக்கு பெண் பிடிச்சுப் போச்சா!...... தையில் கல்யாணம் வச்சுக்கலாம்ன்னு சொன்னாங்களா!...... ரொம்ப சந்தோஷங்க!..... ரேவதி மேலே படிக்க இஷ்டப்படலை!..... சமையல்லேதான் அவளுக்கு இன்டர்ஸ்ட்டுங்கிறா..... அப்படியா?... சரி, சொல்லிடறேன்..... (போனை வைக்கிறார் அம்மா)
   ரேவதி : அப்பா என்னம்மா சொன்னாங்க!....
   அம்மா : அதுவா,..... ரொம்ப சரி, ரேவதி இஷ்டப்படியே அவளை சமையலை நல்லாக் கத்துக்கச் சொல்லுன்னார். சமையலும் ஒரு முக்கியமான கலைதானேன்னார்!.... உன் பெரிய அக்கா மீனாவுக்கு கல்யாணம் கூடி வந்திட்டு..... அப்புறம் உன் சின்ன அக்கா வடிவுக்கும் உள்ளூர் மாப்பிள்ளை தயாரா இருக்கு.... அடுத்த வருஷம் உனக்கும் கல்யாணம் தான்னு சொல்லிட்டாரு!.... இப்போ இரண்டு கல்யாணம் முன்னே வந்து நிக்குது...... நீ உன் இஷ்டப்படி சமையலைக் கத்துக்க....
   ரேவதி : சமையலை இன்னிக்கே எனக்குக் கத்துக் கொடுக்க ஆரம்பிச்சுடு! ....
   (இரண்டுவருடங்கள் காலம் வேகமாக ஓடிவிட்டது.ரேவதி சமையல் கலையில் எக்ஸ்பர்ட் ஆகிவிடுகிறாள் இப்போது ரேவதி திருமணமாகி சென்னைக்கு வந்து விட்டாள். அவள் கணவன் சரவணன் சொந்தமாக மளிகைக் கடை வைத்து நடத்துகிறார்.)
   
   காட்சி - 2
   இடம் - சென்னையில் சரவணன் இல்லம், மாந்தர் - சரவணன், ரேவதி, மாமியார் அழகம்மை.
   சரவணன் : எங்க அம்மா சமையலில் அத்தனை கெட்டிக்காரங்க ரேவதி. மிளகாயைக் கிள்ளிப் போட்டு ஒரு ரசத்தை அஞ்சு நிமிஷத்தில் வச்சிடுவாங்க.. அப்படி மணக்கும்!
   ரேவதி : ஆமாங்க.. மாமி நல்லா சமைக்கறாங்க. என்னையும் கொஞ்சம் சமையல் செய்ய விட்டா நல்லாயிருக்கும்! சமையல் கட்டிலே எனக்கு ஒரு சான்ஸ் தர மாட்டேங்கறாங்க!.....
   (இதைக் காதில் வாங்கியபடி வருகிறார் அழகம்மை)
   அழகம்மை : இப்பத்தானே புதுப்பெண்ணா வந்திருக்கே!.... கொஞ்ச நாள் ஆகட்டுமேன்னு பார்த்தேன்!.... ஒரு விஷயம் தெரியுமா ரேவதி, நான் இந்த வீட்டுக்கு வந்தபோது சுடு தண்ணிகூட வைக்கத் தெரியாம தான் வந்தேன்!... என் மாமியார் எப்படி சமைக்கிறாங்கன்னு பார்த்தே கத்துக் கிட்டேன். சரவணன் கூட நல்லா சமைப்பான் தெரியுமா?.... சரி, உனக்கு எதுக்கு வீண் சிரமம்னு பார்த்தேன்!..... சரி, இன்னிக்கு நீயே சமையல் செய்!
   ரேவதி : அப்படியா?.... அவரும் நல்லா சமைப்பரா?
   சரவணன் : பின்னே? எங்கம்மா ட்ரெயினிங்!.... ஒண்ணுமில்லே ரேவதி. நான் கல்லூரியில் வேதியியல் படிச்சவன். அங்கே நாங்க செய் முறைப் பயிற்சியில் நிறைய வேதிப் பொருட்களை உருவாக்க வேண்டும். அதை ரெகார்டு நோட்டில் எழுதவேண்டும். எப்படின்னா இப்போ ஒரு ரசாயனம் செய்யணும் என்றால் என்னென்ன மூலப் பொருட்கள் வேணும்ன்னு குறிக்கணும்.... பிக்ரிக் அமிலம்ன்னு ஒண்ணு செய்வோம். அது டிரை நைட்ரோ ஃபீனால் ஆகும். அதாவது பீனாலில் நைட்ரிக் அமிலத்தைச் சொட்டு சொட்டாக விட வேண்டும். அவ்வளவுதான். மஞ்சள் நிற திடப் பொருளா கிடக்கும். அது வேறே ஒண்ணுமில்லே பர்னால் ஆயிண்ட்மெண்ட் இருக்கே,..... அது தான்!
   ரேவதி : சமையலுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? இதையெல்லாம் சொல்லிக் குழப்பாதீங்க!.... உங்களுக்கு என்ன பிடிக்கும்? அதைச் சொல்லுங்க!....
   சரவணன் : சொல்றேன். ரெகார்டு நோட்டில் தேவையான பொருட்கள், செய்முறை இப்படி எழுதுவோம். அது மாதிரி நானும் எப்படி சமையல் செய்யணும்னு அம்மா கிட்டே கேட்டுஎழுதி வெச்சுப்பேன்! அப்புறம் அதைப்பார்த்துச் சமையல் செய்துடுவேன்!.... சில நாளைக்கு அம்மாவுக்கு முடியலேன்னா நான்தான் செய்வேன்!.... நான் சுமாராத்தான் செய்வேன்.... அம்மா பக்குவம் எனக்கு வருமா?.....
   ரேவதி : ரொம்ப அடக்கம்தான்!....
   அழகம்மை : அதே தான்..... இப்போ சாம்பார் வைக்கணும்ன்னா என்னவெல்லாம் வேணும் சொல்லு.
   ரேவதி : மாமி, எனக்கென்ன ஒண்ணும் தெரியாதா!...... துவரம் பருப்பு, காய், தக்காளி, புளி, தாளிக்க கடுகு உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை மல்லி தழை அப்புறம் எண்ணெய், உப்பு, மிளகாய்த் தூள், மல்லித் தூள்!.......இதெல்லாம் தவிர பெருங்காயம், மல்லி விதை, கடலைபருப்பு கொஞ்சம் காய்ந்த மிளகாய், மிளகும் வேணும் பொடி பண்ணி போட!.... சரியா?....
   அழகம்மை : நீ சொல்லும்போதே ரொம்ப கரெக்டா சொல்றியே!.... நிச்சயம் சரியாத்தான் செய்வே! இன்னிக்கு உன் சமையல்தான்!
   ரேவதி : மாமி, நீங்க காய்கறி நறுக்கித் தர்றீங்களா?
   அழகம்மை : ஓ.கே!
   (அன்று முதன் முதலில் ரேவதி வைக்கும் சாம்பார் வீடே மணக்கும் விதமாக அமைந்து விடுகிறது.)
   
   அழகம்மை : நல்ல கைமணம் இருக்கே. பலே!..... உங்கம்மா உன்னை நல்லாத்தான் ட்ரெயின் பண்ணியிருக்காங்க....
   ரேவதி : மாமி, உங்களுக்கு தெரிஞ்ச சமையல் பக்குவம் பூரா நான் இனி கத்துக்கறேன்.
   (ஒரு வருடம் பறந்தோடிவிடுகிறது இப்போது ரேவதி சமையலில் படுகெட்டிக்காரியாகிவிட்டாள். சமையல் புத்தகங்களில் உள்ள வட நாட்டு சமையல் இனிப்பு கார பதார்த்தங்களையும் செய்யக் கற்றுக் கொண்டு விட்டாள்.)

  காட்சி - 3
   இடம் - சரவணன் இல்லம், மாந்தர் - ரேவதி
   சரவணன், அவர் நண்பர் மாதவன், மாதவன்
   மனைவி அர்ச்சனா
   மாதவன் : ரேவதி மேடம்.. நானும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க.
   ரேவதி : அப்படி ஒரு சினிமா வந்திருக்கா ?
   சரவணன் : முழுசாக் கேளு ரேவதி. மாதவன் என் கிளாஸ்மேட். அவன் மனைவி இவங்க... தான் அர்ச்சனா.. ஒரு டி வி சேனலில் வேலை பார்க்கிறாங்க. ஒரு நாள் மாதவன் நம் வீட்டுக்கு சாப்பிட வந்தப்போ நீ வச்ச சப்பாத்தி குருமா ரொம்ப சுவையா இருக்குன்னு அவன் மனைவியிடம் சொல்லி இருக்கான். ஒரு நாள் எனக்கு மதியத்துக்கு நீ கட்டித்தந்த புளியோதரையை இவன் கடைக்கு வந்து பிடுங்கிக் கிட்டு வீட்டுக்கு போய் அவன் மனைவி கிட்டே தந்திருக்கான். ரொம்ப நல்லா இருக்குன்னு இப்போ இருவரும் வீட்டுக்கு வந்திட்டாங்க
   ரேவதி : (அர்ச்சனாவிடம்) இன்னொரு நாள் ஒரு தூக்கு நிறைய புளிசாதம் செஞ்சு அனுப்பறேன்.... அன்னிக்கு கொஞ்சம் தான் குடுத்திருந்தேன்.
   அர்ச்சனா : அதில்லே மேடம்.. நீங்க எங்க தொலைக் காட்சியில் புதுசா ஆரம்பிக்கப் போற "சமையல் பக்குவம்" நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டு குருமாவும், புளியோதரையும் எப்படி செய்யறதுன்னு செஞ்சு காட்டணும். வெள்ளிக்கிழமை கார் அனுப்பறோம். வந்திடுங்க.
   ரேவதி : என்னது நானா ? டிவியில் சமையல் செஞ்சு காட்டணுமா?....அச்சச்சோ! முடியாதுப்பா!..... பயமா இருக்கு.. வெக்கமாவும் இருக்கு.
   மாமியார் அழகம்மை : நீ என்ன டான்ஸா ஆடப் போறே. போய் பக்குவத்தை மட்டும் சொல்லு.. செஞ்சு காட்டு!.... பலருக்கும் உதவும் இல்லையா ?
   சரவணன் : அர்ச்சனா நல்லா வழி காட்டுவாங்க போயிட்டு வா.
   (ரேவதி கண்ணில் குழப்பம் தெரிய தலையாட்டுகிறாள்.)
   
   காட்சி - 4
   இடம் - கலக்கல் டிவி படப்பிடிப்பு நிலையம்
   (தொகுப்பாளினி அர்ச்சனா பேசுகிறார்.)
   
   அர்ச்சனா : நேயர்களுக்கு வணக்கம். இன்னிக்கு நம்ம சமையல் பக்குவம் நிகழ்ச்சியில் புளியோதரை எப்படி செய்வதுன்னு செஞ்சு காட்ட வந்திருக்காங்க ரேவதி சரவணன். "வணக்கம் ரேவதி சரவணன் வாங்க''.....
   (நிகழ்ச்சியில் ரேவதி புளியோதரை செய்முறை விளக்கம் தந்து செய்து காட்டுகிறாள்)
   
   அர்ச்சனா : (சிறிது வாயில் போட்டு)... ருசியா இருக்கு! பலே!... பிரமாதம்! என்ன நேயர்களே, நீங்களும் இந்த முறையில் செஞ்சு பார்த்து எப்படி இருக்க்குன்னு உங்க கருத்தைச் சொல்லறீங்களா?....இந்த நிகழ்ச்சி வாராவாரம் தொடரும்.
   (பல வித சிற்றுண்டிகள், பட்சணங்கள், இனிப்பு கார வகைகளைச் செய்து அசத்துகிறாள் ரேவதி. நேயர்களின் ஆதரவுடன் இல்லத்தரசிகளின் அதிக எதிர் பார்ப்புள்ள நிகழ்ச்சியாகிவிட்டது கலக்கல் டிவியின் சமையல் பக்குவம் நிகழ்ச்சி)
   
   காட்சி - 5
   இடம் - சரவணன் இல்லம், மாந்தர் - ரேவ்தி,
   சரவணன், அழகம்மை
   
   சரவணன் : அம்மா..ரேவதியோட "சமையல் பக்குவம்" புத்தகம் அச்சில் வந்திடுச்சு இதோ பாருங்க பதிப்பாளர் பத்து பிரதிகள் அனுப்பி இருக்கார்.
   அழகம்மா : பலே! அட்டைப் படத்தில் என் மருமகள் பட்டுப் புடவை கட்டி வாணலி கரண்டி சகிதமா இருக்கே. சமையல் பக்குவம் தலைப்பு!....கீழே டிவி புகழ் ரேவதிசரவணன் பெயர் பெரிசா இருக்கே!
   சரவணன் : அம்மா, இந்த பதிப்பகத்தார் தொடர்ந்து ரேவதியின் சமையல் குறிப்புகளை வெளியிடப் போறாங்க. இது வெளிநாடுகளுக்கும் ஆயிரக் கணக்கில் போகுது. இப்போ என் கடைக்கே வாடிக்கையாளர்கள் வர்றவங்க எல்லாம் சார் ரேவதி சரவணன் மேடத்தோட கணவர்ன்னு அடையாளப் படுத்த ஆரம்பிச்சிட்டாங்க.
   அழகம்மை : டிவி நிகழச்சிகளில் பிரபலம் ஆகி இப்போ ஜவுளிக்கடை திறப்பு விழா, சூப்பர் மார்க்கெட் திறப்பு விழாவுக்கு எல்லாம் திறந்து வைக்க கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க..ஏதோ யூ ட்யூப் சேனல் ஆரம்பிச்சிருக்கிறதா ரேவதி சொன்னாளே என்னப்பா அது?
   சரவணன் : இணையம் மற்றும் வலைத்தள நேயர்களுக்க்கு சமையல் குறிப்பு செய்முறை சொல்றதும்மா. "கைமணம்' ன்னு பேர் வச்சிருக்கோம். நானே என் கையால் ரேவதி சமையல் செய்வதை ஒளிப்படம் எடுத்து பதிவேற்றம் பண்றேன். லட்சக்கணக்கில் பார்ப்பதால் அந்த நிகழ்ச்சியின் ஆரம்பம் மற்றும் நடுவில் விளம்பரங்கள் ஓளிபரப்பாவுது.
   அழகம்மை : அதனால் நமக்கு என்ன லாபம் ?
   சரவணன் : யூ ட்யூபில் இருந்து இப்போ மாசாமாசம் பதினைந்தாயிரம் ரூபாய்க்கு குறையாம காசோலை அனுப்பறாங்க. சரி ரேவதி தயாரா இரு. முகத்துக்கு லேசா ஒப்பனை செஞ்சுக்கோ.
   அழகம்மை : என்னா படம் எடுக்கப் போறீங்க இன்னிக்கு.
   ரேவதி : (வெட்கத்துடன்) நீங்க சொல்லித் தந்த மாதிரி.. கூழ் வடகம், வெங்காய வற்றல் எப்படிப் போடறதுன்னு தான். கலக்கல் டிவியில் ஓரு வருஷம் என்னை புக் பண்ணி இருக்காங்க.
   சரவணன் : சும்மா இல்லேம்மா.. ஒரு நிகழ்ச்சிக்கு ஒரு நாளைக்கு முப்பதாயிரம் தருவாங்க. இந்த வாரம் பிரபல நடிகர் சுஜீத்குமார் தன் மனைவியோட கலந்துக்கறார் அந்த நிகழ்ச்சியின் விருந்தினராக.
   அழகம்மை : என் மருமகளுக்கு சரஸ்வதி கடாட்சத்தோட லட்சுமி கடாட்சமும் கிடைச்சிட்டுது.
   ரேவதி : (பெருமிதமாக) எல்லாப் புகழும் என்னோட அம்மாவுக்கும் மற்றும் உங்களுக்குத் தான் மாமி!....
   திரை
   என்.எஸ்.வி.குருமூர்த்தி
   
   

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  flipboard facebook twitter whatsapp