உத்தரகண்ட் மாநிலம்: தெரிந்து கொள்வோமா?... 

உத்தரகண்ட் மாநிலம் இந்தியாவின் வடபகுதியில் அமைந்துள்ள மாநிலம்! 2000 - ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து பிரித்து
உத்தரகண்ட் மாநிலம்: தெரிந்து கொள்வோமா?... 

கருவூலம்
உத்தரகண்ட் மாநிலம் இந்தியாவின் வடபகுதியில் அமைந்துள்ள மாநிலம்! 2000 - ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டது! 2000 - ஆவது ஆண்டு முதல் 2006 - ஆவது ஆண்டு வரை உத்தராஞ்சல் என இம்மாநிலம் அழைக்கப்பட்டது. பின்னர், உத்தரகண்ட் என அழைக்கப்படுகிறது. 
உத்தரகண்ட், பசுமையான மலைகள், பனி மூடிய சிகரங்கள், கம்பீரமான பனிப் பாறைகள், வனப்பு மிகுந்த பள்ளத்தாக்குகள், பசுமையான காடுகள், நீரோட்டம் மிகுந்த தூய்மையான ஆறுகள் என ஏராளமான இயற்கை அழகு கொண்டது. 
இம்மாநிலம் முழுமையாக இமயமலைப் பகுதியிலேயே அமைந்துள்ளது. டேராடூன் நகரம் இம்மாநிலத்தின் தலைநகரமாகும். நைனிடால், முசோரி, அல்மோரா, ராணிக்கெட், ரூர்கசி முதலியவை பிற முக்கிய நகரங்களாகும். 53,483 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட உத்தரகண்ட் மாநிலம் 13 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 
இம்மாநிலம் முழுவதும் பரவலாக கோயில்கள் மற்றும் ஆன்மிக மையங்கள் இருப்பதால் "தேவபூமி' என்று அழைக்கப்படுகிறது. இந்து மதத்தினரால் மிகப் புனிதமாகக் கருதப்படும் ரிஷிகேஷ், ஹரித்வார், கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி முதலிய புனிதமான யாத்திரைத் தலங்கள் இம்மாநிலத்திலேயே உள்ளன. 

டேராடூன்! 
(DEHRADUN)

உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூன். இமயமலைக்கும், சிவாலிக் மலைக்கும் இடையே உள்ள "டூன்' பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. நகரின் இருபுறமும் கங்கை நதி பெருக்கெடுத்து ஓடுவதையும், இமயமலைத் தொடரின் பேரழகையும் பார்ப்பது இனிய அனுபவம்!
டேராடூனில் பல புகழ்பெற்ற கல்வி நிலையங்களும், ஆராய்ச்சி நிலையங்களும் உள்ளன. 
. வன ஆராய்ச்சி நிலையம்
. ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி
. இந்திய ராணுவ அகாடமி
. இந்திய வன விலங்கு மையம்
. இந்திரா காந்தி தேசிய வன அகாடமி.....
.... போன்றவை அவற்றில் சில...
டேராடூனில் சுற்றுலாப் பயணிகள் ரசித்து மகிழ பல இடங்கள் உள்ளன.
டேராடூன் வன ஆராய்ச்சி நிலையம், மாதா பாலசுந்தரி ஆலயம், டேராடூன் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், ராப்பர்ஸ் குகை, லஷ்ஷிவாலா பிக்னிக் ஸ்பாட், டேராடூன் மிருகக் காட்சி சாலை, பிராந்திய அறிவியல் மையம், தபகேஷ்வர் குகைக் கோயில், தபோவனம், கலங்கா போர் நினைவுச் சின்னம், ஷிகார் அருவி, குச்சு பாணி, கிளாக் டவர் போன்ற இடங்கள் முக்கியமானவை. 
இவற்றைத் தவிர மலை ஏற்றம், பாரா கிளைடிங், போன்ற சாகச விளையாட்டுகளும் உண்டு. 

நைனிடால்! 
(NAINITAL)

பனி மூடிய மலைச்சிகரங்கள், பறவைகளின் இனிய ஓசைகள், சிலுசிலுவென்று ஓடும் நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள் என இயற்கையை நேசிப்பவர்களுக்கு ஏற்ற இடம்!
நைனிடால் நகரம் குமோன் மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. நைனிடாலை வடக்கில் நைனா மலையும், தெற்கில் தியோபதை மலையும் சூழ்ந்துள்ளன. நகரின் மத்தியில் இருக்கும் "நைனிடால்' ஏரியின் பெயராலேயே இந்த நகரம் அழைக்கப்படுகிறது. நைனிடால் ஏரி இரண்டு மைல் சுற்றளவு கொண்டது. இந்த ஏரி மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. ஏரியின் வடக்குக் கரையில் நைனா தேவி கோயில் உள்ளது. இது 64 சக்தி பீடங்களில் ஒன்றாகும். 
படகு சவாரி, டிரெக்கிங், ரோப்வே கேபிள் சவாரி போனறவையும் இங்குண்டு. 

முசோரி! 
(MUSSOORIE)

தனிமையும் இயற்கையும் இரண்டறக் கலந்த பூமி!.... "மலைகளின் ராணி' என்றும் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 2000 மீ உயரத்தில் இருக்கிறது. இங்குள்ள "லேண்டர்' என்ற சிறிய ஊர் சிறப்பு வாய்ந்தது. இந்த கிராமம் எந்த வகையிலும் மாசு அடையாமல் அமைதியாகவும், அழகாகவும் உள்ளது. முசோரியின் உயரமான இடமாகிய "லால் டிப்பா' லேண்டரில் உள்ளது. இங்கிருந்து கார்வால் மலை அழகையும், சூரிய உதய, மற்றும் அஸ்தமன அழகைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்!
இங்கு கெம்ப்டி ஏரி, மிஸ்ட் ஏரி, முசோரி ஏரி, பாட்டா அருவி, ஜாரிபாணி அருவி கம்பெனித் தோட்டம், ஹேப்பி பள்ளத்தாக்கு, முனிசிபல் தோட்டம், ஜ்வாலாஜி கோயில் போன்றவை பார்க்கத் தகுந்த இடங்களாகும். மிஸ்ட் ஏரியில் போட்டிங், குல்ரி பஜாரில் ரோலர் ஸ்கேட்டிங், முசோரி ஏரியைச் சுற்றிலும் பாரா க்ளைடிங், குன் மலைக்கு ரோப்வே கேபிள் கார் பயணம் போன்ற வசதிகளும் உண்டு. 

அல்மோரா 
(ALMORA)

இந்தியாவின் கோடை மலைவாழிடங்களில் ஒன்று அல்மோரா. 1568 - இல் மன்னர் கல்யாண் சந்த் என்பவரால் நிறுவப்பட்டது. இது குதிரை லாட வடிவிலான ஒரு மலைச்சரிவில் அமைந்துள்ளது. "சுயல்' மற்றும் "கேசி' நதிகளுக்கு இடையே அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1651 மீ. உயரத்தில் பசுமையான காடுகள் சூழ, பனி மூடிய மலைச்சிகரங்களோடு அழகுறக் காட்சியளிக்கிறது. 
கசார் தேவி கோயில், நந்தா தேவி கோயில், சித்தை கோயில், மற்றும் கதர்மல் சூரியக்கோயில் ஆகியவை இங்கு அமைந்துள்ள பிரபலமான கோயில்களாகும். இங்குள்ள சிம்தோலா, மற்றும் மர்தோலா ஆகிய இடங்கள் அவசியம் பார்க்க வேண்டிவை. 
இவை தவிர மான் பூங்கா, பொது அருங்காட்சியகம், பின்சார் வனவிலங்கு சரணாலயம் எனப் பார்ப்பதற்குப் பல இடங்கள் உள்ளன. இங்கும் மலையேறுதல், பைக் சவாரி, போன்ற வசதிகளும் உள்ளன. இங்கு பயணிக்க கோடைக்காலமே ஏற்றது. 

ராணிக்கெட்! 
(RANIKHET)

ராணிக்கெட் நைனிடாலிலிருந்து 63 கி.மீ. தொலைவில் உள்ளது. பழமையான கோயில்கள், சர்ச்சுகள், மலையேறும் பாதைகள் போன்றவை இங்குள்ளன. மேலும் சாவ்பாடியா பழத்தோட்டம், மாம்கமேஷ்வர் கோயில், தரிகெட், சியாலிகெட், பாலு அணைக்கட்டு ஆகியவை காணவேண்டிய இடங்களாகும். 

ஆலி நகரம்! 
(AULI CITY)

கடல் மட்டத்தில் இருந்து 9300 அடி உயரத்தில் இமயத்தின் மடியில் அமைந்திருக்கிறது ஆலி! இந்தியாவிலேயே பனி விளையாட்டுக்குச் சிறந்த இடம் இது. மார்ச் முதல் ஜூன் வரையிலான காலத்தில் இங்கு வெப்பநிலை 15 டிகிரியாகத்தான் இருக்கும்! 

லான்ஸ்டோன்! 
(LANSTONE)

அழகிய மலை நகரம் இது! எங்கும் இயற்கை அழகு! அருங்காட்சியகம், வியூ பாயின்ட்டுகள் எனப் பார்த்து மகிழ ஏற்ற இடம்! 

பின்சார்! 
(BINSAR)

பின்சார் வனவிலங்கு சரணாலயத்திற்கு நடுவில் அமைந்திருக்கும் குளிர்ச்சி பொருந்திய மலை இது! மாசு படாத இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து 7600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து நந்தாதேவி, நந்தகோட், கேதார்நாத், மற்றும் சாகம்பா ஆகிய சிகரங்களைப் பார்ப்பது அற்புதமான காட்சி! 
பின்சார் மலையில் காலி எஸ்டேட், கணநாதர் ஆலயம் போன்ற இடங்களைக் கண்டு களிக்கலாம். பருவமழைக் காலங்களைத் தவிர மற்ற காலங்களில் செல்வதற்கு ஏற்ற இடம் இது!

ரிஷிகேஷ்! 
(RISHIKESH)

டேராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ள ரிஷிகேஷ் இந்துக்களின் புனித நகரம். புகழ் பெற்ற யாத்திரைத் தலம். ராமாயணத்தில் இந்த ஊரைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமர் இங்கு ராவணனை வதம் செய்ததற்காக பரிகாரம் செய்ததாகவும், லட்சுமணர் இவ்விடத்தில் கங்கையைக் கடந்தார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குள்ள இரும்பினால் அமைந்த தொங்குபாலத்தை "லட்சுமண் ஜூலா' என அழைக்கின்றனர். அருகில் லட்சுமணர் கோயிலும், அதற்கு அப்பால் ராமர் மற்றும் பரதர் கோயிலும் உள்ளன. 
புனித நதியான கங்கை ரிஷிகேஷின் வழியாக இமாலயத்தின் ஒரு பகுதியான ஷிவாலிக் மலைத்தொடருக்குச் செல்கிறது.இங்குள்ள கங்கை நதிக் கரையில் பல கோயில்கள் உள்ளன. இங்கு நிறைய யோகா மையங்களும் உள்ளன.
இங்குள்ள "திரிவேணிகாட்' டில் அந்திப் பொழுதில் நிகழ்த்தப்படும் "கங்கா ஆர்த்தி' பிரபலமான புனித நிகழ்ச்சியாகும்! நீல்கந்த் மகாதேவ் கோயில், வசிஷ்டர் குகை, கீதா பவன் போன்ற இடங்கள் அவசியம் பார்க்க வேண்டியவை. மேலும் வெள்ளத் தண்ணீர் சாகசப் படகுப்பயணம் இங்கு செல்வோரைக் கவர்ந்திழுக்கும்! 

ஹரித்துவார்! 
(HARIDWAR)

இந்து மத கோட்பாடுகளின்படி முக்தி தரும் ஏழு புனித நகரங்களில் ஹரித்துவாரும் ஒன்று. மஹாபாரதத்தில் ஹரித்துவாரைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது! இங்கு நடந்த அகழ்வாய்வில் கி.மூ.1700 முதல் கி.மு. 1200 வரையிலான காலத்தைச் சேர்ந்த பொருட்கள் கிடைத்துள்ளன. 
கி.பி. 629 - ஆம் ஆண்டில் இங்கு விஜயம் செய்த சீனப் பயணி "ஹுவான் சுவாங்' ஹரித்துவார் பற்றி தன் பயணக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். 16 - ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "அய் - னி - அக்பரி' என்ற நூலில் ஹரித்துவார் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் மிகவும் பழமையான நகரங்களில் ஹரித்துவாரும் ஒன்று! மேலும், இந்நகரம் ஆயுர்வேத மருத்துவத்தின் நீண்ட கால வளமான மையமாக விளங்கி வருகிறது. 
பத்தாயிரம் அடி உயரத்தில் உருகிய பனியாகத் துவங்கும் கங்கை 250 கி.மீ. தூரம் மலைகளின் வழியே வந்து முதலில் தரையைத் தொடும் இடம் ஹரித்துவார்! பிரம்ம குண்டம் என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் தினந்தோறும் கங்கைக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்கு நடக்கும் கும்பமேளா என்னும் ஆன்மீகத் திருவிழாவில் பங்கேற்கப் பல நாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கையில் புனித நீராட வருகின்றனர்! இங்கு கங்கையின் நீர் மழைக்காலங்களைத் தவிர பிற காலங்களில் தூய்மையாக இருக்கிறது! 
தொடரும்....
தொகுப்பு கே.பார்வதி, திருநெல்வேலி டவுன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com