பெரிய மரத்துக் கிளிகள்

பெரிய மரத்துக் கிளிகள்

ஓ.. நான் பேசுவனான்னு தெரியாமதான் கேட்டியா.. அப்போ, நான்தான் அதிர்ச்சி ஆகணும்..

அரங்கம்
 காட்சி : 1
 இடம் : கோதையின் வீடு / மொட்டை மாடி
 நேரம் : மாலை 5.50
 மாந்தர் : கோதை , கிளி
 
 (கோதை மொட்டை மாடியில் நிற்கிறாள். கிளி நீர்த்தேக்கியின் மேல் வந்து அமர்கிறது.)
 
 கோதை : ஹேய், கிளி.. ரொம்ப க்யூட்டா இருக்கிற..வீட்டுக்குப் போறியா ? உங்க வீடு எங்க இருக்கு ?
 கிளி : இதோ.. மேற்கே மலை தெரியுதே.. அங்கதான்.. பெரிய மரத்துல..
 (கோதை அதிர்ச்சி அடைகிறாள்.)
 
 கோதை : நீ.. நீ.. எப்டி.. நீ.. நீ பேசுவியா?
 கிளி : ஓ.. நான் பேசுவனான்னு தெரியாமதான் கேட்டியா.. அப்போ, நான்தான் அதிர்ச்சி ஆகணும்..
 (கோதை இருகைகளையும் வாய் மீது வைத்துச் சிரிக்கிறாள்.)
 
 கிளி : உம் பேர் என்ன?
 கோதை : கோதை !
 கிளி : சரி, கோதை.. எனக்கு நேரமாயிடுச்சு.. கிளம்பறேன்.. நீ எப்பவாது மேற்கு மலைக்கு வந்தா பெரிய மரத்துக்கு வா.. என் அப்பா, அம்மா, தம்பி எல்லாரையும் பார்க்கலாம்.. என்ன..
 (கோதை சிரித்துக்கொண்டே தலையசைக்கிறாள்....கிளி பறந்து செல்கிறது.)
 
 காட்சி : 2
 இடம் : கோதையின் வீடு
 நேரம் : இரவு 7 மணி
 மாந்தர் : கோதை, அம்மா
 
 (கோதை அம்மாவின் முகத்தை நன்றாகப் பார்க்கிறாள்.)
 
 கோதை : என்னங்கம்மா ?
 அம்மா : ம்ம்ம்.. கிளி பேசும், சரி.. ஆனா, நீ சொல்ற மாதிரி எல்லாம் பேசுச்சுனா... அதுவும் உங்க ஸ்கூல்லதான் படிக்குதா..?
 கோதை : ஓட்டாதீங்கம்மா.. நான் ஒன்னும் பொய் சொல்லல.. உண்மையாவே அந்தக் கிளிதான் அப்டியெல்லாம் சொல்லுச்சு..
 அம்மா : ஓ.கே. கிளிதான் சொல்லுச்சு.. இப்ப என்ன அதுக்கு?
 கோதை : இந்த வாரம் லீவுல நாம கிளியோட மரத்துக்குப் போகலாம்..
 (அம்மா அமைதியாகப் பார்க்கிறார்.)
 அம்மா : இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல.. ரொம்பப் படுத்தாதடி..
 கோதை : அதெல்லாம் ஒன்னும் இல்ல.. இந்த வாரம் நாம அங்க போகறோம்..
 (அம்மா அமைதியாகப் பார்க்கிறார்.)
 
 காட்சி : 3
 இடம் : வெவ்வேறு இடங்கள்
 நேரம் : வெவ்வேறு நேரங்கள்
 மாந்தர் : கோதை, அம்மா , வழிப்போக்கர்
 (காலை 9.45 : கோதை இருசக்கர வாகனத்தின் அருகில் நிற்கிறாள். அம்மா வீட்டைப் பூட்டுகிறார்.
 முற்பகல் 11.50 : அம்மா வழிப்போக்கரிடம் விசாரிக்கிறார். வழிபோக்கர் மேற்கு திசையைக் காட்டுகிறார்.
 பிற்பகல் 2. 05 : அம்மா வாகனத்தைப் பூட்டுகிறார். கோதை பெரிய மரத்தைப் பார்த்தவாறு நிற்கிறாள்.)

காட்சி : 4
 இடம் : மேற்கு மலை / பெரிய மரம்.
 நேரம் : பிற்பகல் : 2.30
 மாந்தர் : கோதை, அம்மா , கிளிகள்
 அம்மா : முதல் ரைட்டுலியே திரும்பியிருந்தா எப்பவோ வந்திருக்கலாம்.. பாரு மணி என்னன்னு..
 கோதை : ம்மா.. இந்தப் பக்கம் வந்து பாருங்க..
 (அம்மா அங்கே சென்று பார்க்கிறார்.)
 
 அம்மா கிளி : அன்பாய் வாழ வேண்டும் நாம் அனைவரும் ஒன்றாக..
 அக்கா கிளி : இளமையில் கல்வி பயில்வோம் நாம் மிகவும் நன்றாக..
 அப்பா கிளி : உதவிகள் செய்து வருவோம் நாம் உழைப்பின் பயனாக..
 தம்பி கிளி : எதிலும் உறுதி கொள்வோம் நம் வெற்றிகள் உருவாக..
 அனைத்தும் : நம் வெற்றிகள் உருவாக..
 (அம்மாவும் கோதையும் அதிசயித்து நிற்கிறார்கள்.)
 
 காட்சி : 5
 இடம் : மேற்கு மலை / பெரிய மரம்.
 நேரம் : பிற்பகல் 3.25
 மாந்தர் : கோதை, அம்மா , கிளிகள்
 
 தம்பி கிளி : கோதை அக்கா.. பழங்கள் எல்லாம் நல்லா இருக்கா..
 கோதை : (சாப்பிட்டுக்கொண்டே) சூப்பரா இருக்கு.. இந்தா ( ஊட்டி விடுகிறாள்)
 அம்மா : தப்பா எடுத்துக்காதீங்க.. கிளி-னா சொன்னத சொல்லும்.. ஆனா, நீங்க ரொம்ப சரளமா பேசறீங்களே.. எப்டி?
 அப்பா கிளி : அது ஒரு ரகசியம்.. சொன்னா நம்பமாட்டீங்க..
 அம்மா : நம்பமாட்டனா ? அதான் நேர்லயே பார்க்கறனே..
 அம்மா கிளி : இதோ.. இங்க இருக்கே பெரிய மரம் இதுக்கு முந்நூத்து நாப்பது வயசு இருக்கும்.. நாங்க இருநூறு தலைமுறையா இங்கதான் இருக்கோம்..
 அப்பா கிளி : ஒரு கவிஞர் குடும்பம் இங்க இருந்துச்சாம்.. அவங்க தலைமுறையில் எல்லாருமே எங்க தலைமுறைக்குக் கொஞ்சம் கொஞ்சமா பேசச் சொல்லிக் கொடுத்தாங்க..
 அக்கா கிளி : நாங்களும் தொடர்ந்து பழகி சரளமா பேசக் கத்துகிட்டோம்.. அப்படியே பாடவும் தொடங்கிட்டோம்..
 (தொடர்ந்து கிளிகள் சொல்வதை கோதையும் அம்மாவும் ஆழ்ந்து கவனிக்கிறார்கள்.)
 
 காட்சி : 6
 இடம் : மேற்கு மலை /
 பெரிய மரம்.
 நேரம் : மாலை 4 மணி
 மாந்தர் : கோதை, அம்மா ,
 கிளிகள்
 
 கோதை : கிளியக்கா.. எங்களுக்காக ஒரு பாட்டு பாட்றீங்களா.. ப்ளீஸ்.. கிளிகள் சிறகடித்து எழும்புகின்றன.
 அக்கா கிளி : மாலை வேளையில் மாடியில் நின்ற கோதையைப் பார்த்தேனே.. கோதையைப் பார்த்தேனே..
 அம்மா கிளி : கூட்டிற்கு வந்ததும் கோதையைப் பற்றி எங்களிடம் சொன்னாளே .. எங்களிடம் சொன்னாளே..
 அப்பா கிளி : கிளிகளைப் பார்க்க கிளிகளைப் பார்க்க அம்மாவும் வந்தாரே.. அம்மாவும் வந்தாரே ..
 தம்பி கிளி : விருந்துக்குக் கொடுத்த பழத்தில் பங்கு எனக்கும் கிடைத்ததே.. எனக்கும் கிடைத்ததே..
 (கோதையும் அம்மாவும் சிரிக்கிறார்கள்.)
 
 காட்சி : 7
 இடம் : மேற்கு மலை / பெரிய மரம்.
 நேரம் : மாலை 4.15
 மாந்தர் : கோதை, அம்மா , கிளிகள்
 
 (கோதை எதையோ தேடுகிறாள்.)
 அம்மா : என்ன தேடறே?
 கோதை : இந்த மரத்தோட விதைங்க.. எடுத்துட்டுப் போய் நாமும் எங்காவது விதைப்போம்.. இந்தக் கிளிகள் மாதிரி எதாவது உருவாகும்ல..
 அம்மா : என்ன விளையாடறியா .. ? முந்நூறு வருஷம்.. நாம என்ன அதையெல்லாம் பார்க்கவா போறோம்.. ?
 கோதை : பரவாயில்ல.. வேற யாராவது பார்க்கட்டும்.. இந்த மரத்தை என்ன நாமளா வெச்சோம்?
 (அம்மா அமைதியாகப் பார்க்கிறார்.)
 
 (கோதையும் அம்மாவும் விதைகளைச் சேகரிக்கத் தொடங்குகிறார்கள்.....கிளிகள் பாடத் தொடங்குகின்றன.....கோதையும் அம்மாவும் சிரிக்கிறார்கள். )
 (திரை )
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com