அறிவு மோதிரம்!

முன்னொரு காலத்தில் சுவர்ணபுர நாட்டில் பிம்பாதரர் என்ற கல்விமான் இருந்தார்.
 அறிவு மோதிரம்!

முன்னொரு காலத்தில் சுவர்ணபுர நாட்டில் பிம்பாதரர் என்ற கல்விமான் இருந்தார். சுவர்ணபுரி நாட்டில் அரசவைப் புலவராக அவர் இருந்தார். கல்வி கேள்விகளில் சிறந்தவராக இருந்தாலும் பிம்பாதரர் மிகவும் கர்வம் உடையவர். பல புலவர்களை வம்புக்கு இழுத்து அரச சபையில் போட்டி வைத்து அவர்களை வெற்றி கொள்வார். எனவே இவ்வுலகிலேயே தானே சிறந்த அறிஞனென அவர் நினைத்துக் கொண்டிருந்தார்.
 சுவர்ணபுரியில் இருந்த மயிலாபுரம் என்ற கிராமத்தில் பிரேமானந்தர் என்ற ஒரு ஏழை விவசாயி இருந்தார். அந்த விவசாயி கல்வி கேள்விகளில் சிறந்தவராக இருந்தார். மயிலாபுர கிராம மக்கள் அவரை மிகவும் சிறந்த அறிஞனாகப் போற்றி வந்தனர். இந்த விஷயம் பிம்பாதரருக்கு எட்டியது. . அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.
 அதன்படி அந்த விவசாயியை நேரில் சந்திக்க முடிவெடுத்தார். அவனுடன் சபையில் வாதம் செய்து தோற்கடிக்க வேண்டுமென நினைத்தார். அதுவே தனது அறிவுக்கூர்மையை, அரசரின் மற்றும் மக்களின் மனதில் தெளிவுப்படுத்தும் என்பது அவரது எண்ணமாக இருந்தது.
 உடனே, தனது குதிரையின் மீது ஏறி விவசாயியைச் சந்திக்கப் புறப்பட்டுப் போனார். விவசாயி வாழுகின்ற மயிலாபுரம் கிராமத்தின் எல்லையை அடைந்தார்.
 அங்கு ஒருவன் வயலில் வேலை செய்துக் கொண்டிருந்தான். அவன் மிகவும் எளிமையான கோலத்தில் இருந்தான். அவனிடம், "ஏய்... யாரது...இங்க யாரோ ஒரு விவசாயி இருக்கானாமே.... அவன இங்க இருக்குறவங்க அறிஞன் னு சொல்றாங்களாமே... அவனைத் தெரியுமா...?'' என்று அலட்சியமாக கேட்டார் பிம்பாதரர்.
 அதற்கு அந்த விவசாயி, "அவனை எனக்கு நன்றாகத் தெரியும். அவனை நீங்கள் ஏன் பார்க்க விரும்புகிறீர்கள்...? "என்று பணிவாகக் கேட்டான்.
 " நான் இந்த நாட்டின் தலை சிறந்த கல்விமான். என் பெயர் பிம்பாதரர். உலகிலேயே புத்திசாலி! இந்தக் குக்கிராமத்தில் உள்ள பிரேமானந்தர் என்ற விவசாயி மிகப் பெரிய அறிவாளியாமே! அதைப் பொய்யாக்கவே இங்கு வந்துள்ளேன். எனது கேள்விகளால் அவனைத் துளைத்தெடுத்து முட்டாள் ஆக்காமல் திரும்ப மாட்டேன்'' என்று இறுமாப்பாகக் கூறினார்.
 அதற்கு அந்த விவசாயி, ""துணைக்கு யாரும் இல்லாமல் நீங்கள் மட்டும் வந்திருக்கிறீர்கள். எங்கள் ஊரின் எளிய அறிஞனிடம் தோற்றாலும்,வென்றாலும் யாருக்கும் தெரியாது.'' என்று பணிவாகச் சொன்னான்.
 "அநாவசியமான பேச்சு வேண்டாம்! போட்டி சபையில்தான் நடக்கும்! உலகில் என்னை எவனும் வெல்ல முடியாது. என்னை உடனடியாக, பிரேமானந்தரிடம் அழைத்துப் போ...'' என்று கர்ச்சித்தார்.
 இதைக் கேட்ட விவசாயி புன்முறுவல் பூத்தான். பின்பு, " பிம்பாதரரே... நீங்கள் தேடி வந்திருக்கும் பிரேமானந்தர் நான் தான்...'' பவ்யமாகக் கூறினார்.
 பிம்பாதரர், " அட... நீதானா... அது...நான் ஏதோ அறிவாளியாய்... கம்பீரமான ஆளாக இருப்பாய் என்று எதிர் பார்த்தேன். நீயோ... அப்பாவி விவசாயியாய் இருக்கிறாய்... பரவாயில்லை. நான் வந்த வேலை எளிதில் முடிந்துவிடும். அரச சபையில் என்னோடு போட்டியிட நீ தயாரா... இப்போதே செல்ல வேண்டும்..... என்னுடன்.... வா! '' என்று அவசரப்பட்டுக் கேட்டார்.
 "உங்கள் அளவுக்கு நான் பண்டிதனில்லை.... என்றாலும் நான் போட்டிக்குத் தயார்!.... உங்களை வென்றால் எனக்குப் பேரும் புகழும் கிடைக்கும்!... என்னை நீங்கள் வென்றாலோ, ஒரு சாதாரண விவசாயியை வெற்றி பெற்ற சிறிய புகழ் கிடைக்கும் அவ்வளவே! '' பவ்யமாகக் கூறினார்.
 "இந்த வீண் பேச்சு வேண்டாம்!.... சபையில் போட்டிக்கு ஏற்பாடு செய்யப் போகிறேன்... புறப்படத் தயார் செய்துகொள்! இப்பொழுதே போக வேண்டும்!''
 "தங்களுடன் போட்டியிட நான் தயார்!...ஆனால்... அதற்குள் நான் போய் எனது அறிவு மோதிரத்தை அணிந்து வர வேண்டும்...'' என்றான் விவசாயி.
 உடனே அரசர், "அதென்ன... அறிவு மோதிரம்?..... அதனை எப்போழுதும் அணிவதில்லையா...?'' என்றார்.
 விவசாய வேலைக்கு வரும் நாங்கள் மோதிரம் அணிய மாட்டோம். அறிவு மோதிரம் அணிந்து வருகிறேன். தாங்கள் கூறிய படி உடனே புறப்படலாம்! அதன்பின் பாருங்கள்!... என்னையும் ஒரு அறிவாளியாக நீங்கள் ஏற்பீர்கள்...'' என்றான் விவசாயி.
 ""பார்க்கலாம்!.... இதோ... எனது குதிரையை எடுத்துச் சென்று உனது அறிவு மோதிரத்தை சீக்கிரம் அணிந்து வா... வந்த பின்பு யார் முட்டாள் என்பது தெரியும்!'' என்று அவசரப் படுத்தினார் பிம்பாதரர்.
 விவசாயி குதிரை மீதேறிப் புறப்பட்டான். நெடுநேரம் ஆனது. விவசாயி வரவில்லை. பிம்பாதரருக்கு "அறிவு மோதிரம் என்பது எப்படி இருக்குமோ...?'' என்ற எண்ணம் தத்தளிப்பில் ஆழ்த்தியது. நேரம் ஆக ஆக விவசாயி மீது எரிச்சலாக வந்தது. இருட்டத் தொடங்கியது. ஆனால், விவசாயி வரவில்லை.
 பிறகு தான் தான் முட்டாளாக்கப் பட்டது அவருக்குப் புரிந்தது. தனது கர்வத்தால் குதிரையையும் பறிகொடுத்து விட்டோமே என்று எரிச்சலடைந்தார். பிறகு விசாரித்து பிரேமானந்தரின் வீட்டை அடைந்தான். வீடு பூட்டியிருந்தது! சோர்வுற்ற பிம்பாதரர் தன் வீட்டை அடைந்தார். அங்கு அவரது குதிரை நின்றிருந்தது! குதிரையின் கழுத்தில் ஒரு பெரிய சீட்டும் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. அதில், "அறிவு மோதிரம் என்ற ஒன்று கிடையவே கிடையாது!.... தாங்கள் சிறந்த கல்விமான் என்பதில் சந்தேகமில்லை! தங்களுக்கு என் பணிவான வணக்கங்கள்! தாங்கள் தன்னடக்கத்தையும், பணிவையும் கற்றுக்கொண்டால் மகிழ்வுடன் வாழ்வீர்கள்! - அன்புடன்..... பிரேமானந்தர்' என்று எழுதியிருந்தது.
 தனது கர்வத்தால் சற்று நேரம் தான் முட்டாளாக்கப்பட்டதை உணர்ந்தார் பிம்பாதரர். இனி என்றும் கர்வப்படுவதில்லை என்ற முடிவுக்கும் வந்தார் அவர்.
 பல்லவிகுமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com