தந்தைச் சொல்!

முன்னொரு காலத்தில் ஜானவி என்ற நாட்டில் அதீதன் என்று ஒரு வணிகன் இருந்தான். அவனுக்கு சுசீலன் என்று ஒரு மகன் இருந்தான்
 தந்தைச் சொல்!

முன்னொரு காலத்தில் ஜானவி என்ற நாட்டில் அதீதன் என்று ஒரு வணிகன் இருந்தான். அவனுக்கு சுசீலன் என்று ஒரு மகன் இருந்தான். சுசீலனுக்கு ஒரு நெருங்கிய நண்பன் இருந்தான். அவன் பெயர் பிரசண்டன். பிரசண்டன் நல்லவனில்லை. அதீதன், தன் மகன் சுசீலனிடம், ""சுசீலா, உன் நண்பன் நல்லவனில்லை....உன் பெயரைச் சொல்லி அவன் என்னைப் பலமுறை ஏமாற்றியிருக்கிறான். அவனிடம் நான் பலமுறை ஏமாந்திருக்கிறேன்.... நீ அவனிடம் பழகுவது நல்லதல்ல.... அவன் நட்பை விட்டுவிடு!'' என்றார்.
 சுசீலன் தந்தையின் சொல்லை ஏற்கவில்லை. அவரிடம், "தந்தையே, என்னைப் பொறுத்தவரையில் திலீபன் நல்லவன். நேர்மையானவன். அவ்வளவுதான். அவனுடன் பழகுவதை நான் நிறுத்த முடியாது. உங்களை மறுத்துப் பேசுவதற்கு என்னை மன்னித்துவிடுங்கள்!'' என்று கூறிவிட்டான்.
 நாட்கள் சென்றன. ஒருநாள் அதீதன் ஒரு சிறிய பெட்டி நிறைய சின்னச் சின்னக் கூழாங்கற்களை நிரப்பினான். பிறகு, தன் மகன் சுசீலனை அழைத்து, ""நாம் இருவரும் வாணிபம் செய்வதற்காகப் பக்கத்து நாட்டிற்குச் செல்ல வேண்டியுள்ளது. திரும்பி வர ஒரு மாதம் ஆகும். நம்மிடம் விலை உயர்ந்த ரத்தினக் கற்கள் இருக்கின்றன. நான் அவற்றை இந்தப் பூட்டிய பெட்டியில் வைத்திருக்கிறேன்.... பெட்டியைப் பூட்டிய சாவி என்னிடம்தான் இருக்கிறது. இந்தப் பெட்டியைப் பாதுகாப்பாக யாரிடம் கொடுத்துவிட்டுச் செல்லலாம் நீயே சொல்!'' என்றார்.
 "என் நண்பன் பிரசண்டனிடம் கொடுத்து விடலாம்!.... அவன் எனக்கு நேர்மையானவன். கவலைப்பட வேண்டாம்!'' என்றான் சுசீலன்.
 "சரி, உன் விருப்பப்படியே செய்!'' என்று பெட்டியைத் தன் மகனிடம் தந்தார் அதீதன். சுசீலனும் சற்று கனமான அந்தப் பூட்டிய பெட்டியைத் தன் நண்பன் பிரசண்டனிடம் தந்து, "இதை பத்திரமாக வைத்துக்கொள்.... நானும் என் அப்பாவும் வியாபார நிமித்தம் வெளியூர் செல்கிறோம்...திரும்பி வர ஒரு மாதம் ஆகும். நாங்கள் ஊரிலிருந்து திரும்பிய பின்பு பெட்டியை வாங்கிக்கொள்கிறோம். உள்ளே நிறைய விலையுயர்ந்த ரத்தினக் கற்கள் இருக்கின்றன. ஜாக்கிரதை!'' என்று கூறிப் பெட்டியை பிரசண்டனிடம் ஒப்படைத்தான்.
 அவர்கள் ஊருக்குச் சென்றதும், பேராசையால் பெட்டியை மாற்றுச் சாவி போட்டுத் திறந்து பார்த்தான் பிரசண்டன். அதில் வெறும் கூழாங்கற்களே இருந்தன. அவனுக்கு ஏமாற்றமாகவும், அவமானமாகவும் இருந்தது. சுசீலனிடம் வெறுப்பும் வந்தது. சுசீலனும், அவனது தந்தையும வியாபாரத்தை முடித்துக்கொண்டு நல்ல லாபத்துடன் ஊர் திரும்பினர்.
 "சரி, நீ சென்று உன் நண்பன் பிரசண்டனிடமிருந்து பெட்டியை வாங்கிக்கொண்டு வா!'' என்று சுசீலனை அனுப்பினார் அதீதன்.
 சுசீலன் கையில் பெட்டியுடன் கோபத்துடன் திரும்பி வந்தான்! தந்தையைப் பார்த்து, "அப்பா!.... நீங்க செய்தது சரிதானா?.... வெறும் கூழாங்கற்களைப் பெட்டியில் இட்டு நிரப்பிவிட்டு, அதை ரத்தினக்கற்கள் என்று கூறிவிட்டீர்களே.... பிரசண்டனுக்கு அவமானமாகப் போய்விட்டதாம்!... என் மீதும் மிகவும் கோபமாகப் பேசினான்!.... நானும், அதை ரத்தினக்கற்கள் என்று கூறித்தானே அவனிடம் தந்தேன்!.... இது சரியா?'' என்றான்.
 "மகனே!.... பொறுமையாகக் கேள்!.... பூட்டப்பட்ட பெட்டியையே உன் நண்பனிடம் நீ கொடுத்தாய்!.... பெட்டியின் சாவியோ என்னிடம் இருக்கிறது!.... உன் நண்பன் நேர்மையாக இருந்திருந்தால் அதை அப்படியே அல்லவா உன்னிடம் தந்திருக்க வேண்டும். பெட்டியில் இருந்தது அவனுக்கு எப்படித் தெரிந்தது? அவன் பெட்டியைத் திறந்து பார்த்திருக்கிறான்!.... ஒரு வேளை ரத்தினக் கற்களை அவனிடம் தந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?.... எடுத்துக்கொண்டு ஊரை விட்டே போயிருப்பான்!.... இல்லையா?.....யோசித்துப் பார்!..... இப்படிப்பட்டவன் நட்பு தேவையா? நீயே சொல்!'' என்றார் அதீதன்.
 உண்மையை உணர்ந்த சுசீலன். "தந்தையே, என்னை மன்னித்து விடுங்கள்!.... இனி உங்கள் அனுபவமும், அறிவும் எனக்கு வழி காட்டட்டும்!.... உங்கள் சொற்படியே நான் இனி நடப்பேன்!'' என்று கூறினான்.
 ஆர்.அஜிதா.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com