மேற்கு வங்க மாநிலம்

மேற்கு வங்காளம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும்.
மேற்கு வங்க மாநிலம்

கருவூலம்
மேற்கு வங்காளம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும். இது மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவின் நான்காவது பெரிய மாநிலமாகும். கொல்கத்தா மாநகரமே இம்மாநிலத்தின் தலைகரமாக உள்ளது. 
வங்காள மொழியே இங்கு பெரும்பான்மையாக பேசப்படும் மொழியாகும். சுந்தர வனக்காடுகள் மற்றும் வங்காளப் புலிகள், இரும்பு மற்றும் நிலக்கரிச் சுரங்கங்களுக்கு பெயர் பெற்ற மாநிலம் மேற்கு வங்காளம்.
88,752 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட மேற்கு வங்காளம் மாநிலத்தினை வடக்கில் பூட்டான் நாடும், வடகிழக்கில் அசாம் மாநிலமும், கிழக்கில் வங்காள தேசம் நாடும், தெற்கில் வங்காள விரிகுடாக் கடலும், மேற்கில் பீகார், மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களும், வடமேற்கில் நேபாள நாடும் மற்றும் சிக்கிம் மாநிலமும் சூழ்ந்துள்ளன. மேற்கு வங்காள மாநிலம் நிர்வாக வசதிக்காக 23 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
வங்காள வரலாறு!
வங்காள வரலாறு என்பது வங்காள மொழி பேசும் மேற்கு வங்காளம் மாநிலம் மற்றும் நம் நாட்டின் அண்டை நாடான வங்காள தேசம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வரலாற்றைக் குறிக்கும். 
வங்காளத்தின் நாகரிகம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். மகாஜனபத நாடுகளின் காலத்தில் வங்காளம் மகத நாடு மற்றும் அங்க நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. அதன்பின் வந்த மெளரியப் பேரரசு மற்றும் குப்தப் பேரரசின் காலங்களில் வங்காளம் ஒரு மாகாணமாக விளங்கியது.
அதன் பின்னர் வந்த கெளடப் பேரரசு. பாலப் பேரரசு, காம்போஜ பால வம்சம், ஹரிகேள ராஜ்ஜியம், சென் பேரசு, தேவா பேரரசு ஆகிய பேரரசுகள் வங்காளத்தை ஆண்டனர். அக்காலத்தில் வங்காள மொழி, இசை, கலை மற்றும் கட்டடக்கலை போன்றவை நன்கு வளர்ந்தது. 
13 - ஆம் நூற்றாண்டில் வங்காளத்தின் நிலப்பகுதி இஸ்லாமிய சுல்தான்கள், இந்து மன்னர்கள், மற்றும் பெரும் நிலக்கிழார்களின் ஆளுகையின் கீழ் சென்றது. வரலாற்றின் மத்திய காலத்தில் வங்காளம் குறுநில மன்னர்களால் ஆளப்பட்டது. 
கி.பி. 16 , மற்றும் 17 - ஆம் நூற்றாண்டுகளில் வங்காளத்தின் கழிமுகத் துவாரப் பகுதிகளை 12 ராஜபுத்திர மற்றும் இஸ்லாமிய நிலக்கிழார்கள் ஆண்டனர். 
வங்காளம் முகலாயர் ஆட்சியின் கீழ் இருந்தபோது வேளாண்மையும், மஸ்லின் துணி நெய்தல் சணல் நூல் மற்றும் சணல் பொருட்கள் தயாரித்தல் மற்றும் கப்பல் கட்டும் தொழில்கள் சிறப்பாக நடைபெற்றன. 
முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் வங்காளம் படிப்படியாக இஸ்லாமிய வங்காள நவாப்களின் பிடியில் சென்றது. பின்னர் மராத்தியப் பேரரசினர் வங்காள நவாப்களிடமிருந்து வங்காளத்தின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளைக் கைப்பற்றினர். 
கி.பி. 18 - ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிப் படைகளுக்கும், வங்காள நவாப் படைகளுக்கும் இடையே நடைபெற்ற பிளாசி மற்றும் பக்சார் போர்களின் முடிவில் கி.பி.1793 - இல் வங்காளத்தின் பெரும்பகுதியை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினர் கைப்பற்றினர்.
வங்காளத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியரின் ஆட்சி 1757 முதல் 1858 முடிய நடைபெற்றது. கொல்கத்தா நகரம் அவர்களின் தலைநகரமாக விளங்கியது. 
1857 - இல் சிப்பாய்க் கிளர்ச்சிக்குப்பின் பிரிட்டிஷ் அரசு கிழக்கிந்திய வணிக நிறுவனத்தையும் மற்றும் கம்பெனி ஆட்சியையும் கலைத்துவிட்டு, பிரிட்டிஷ் அரசு நேரடியாக வைஸ்ராய் தலைமையில் வங்காளத்தை 1858 முதல் 1947 முடிய ஆட்சி செய்தது. 
வங்காளப் பிரிவினை!
வங்காள மாகாணம் பிரிட்டிஷ் இந்தியாவின் மிகப் பெரிய மாகாணங்களில் ஒன்று. 1905 - இல் 1,89,000 சதுர மைல்கள் பரப்பளவையும், 8 கோடி மக்கள் தொகையும் கொண்டிருந்தது. பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் பெரியதாக உள்ள மாகாணத்தை நிர்வகிப்பது கடினமாக உள்ளதெனக் கருதி 1905 - ஆம் ஆண்டு மேற்கு வங்காளம் மற்றும் கிழக்கு வங்காளம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 
மேற்கு வங்காளத்தில் இந்துக்களும், கிழக்கு வங்காளத்தில் இஸ்லாமியர்களும் அதிக அளவில் இருந்தனர். இந்தப் பிரிவினைக்கு எதிராகப் பரவலாக எதிர்ப்பும் போராட்டங்களும் நடைபெற்றது. அதனால் 1911 - ஆம் ஆண்டு வங்காளம் ஒன்றிணைக்கப்பட்டது. 
ஆனாலும் 1947 - இல் நாடு சுதந்திரம் பெற்றபோது மத அடிப்படையில் இந்தியா இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அப்போது இந்துக்கள் அதிகமுள்ள பகுதியான மேற்கு வங்காளத்தை இந்தியாவுடன் இணைத்தனர். இஸ்லாமியர் அதிகம் வாழ்ந்த கிழக்கு வங்காளத்தை பாகிஸ்தானுடன் சேர்த்து "கிழக்கு பாகிஸ்தான்' என்ற பெயரில் அழைத்தனர். 
ஆனாலும் கிழக்கு பாகிஸ்தான் என்ற நிலை நீண்ட காலம் நீடிக்கவில்லை. மக்கள் அதிருப்தி அடைந்து போராடத் தொடங்கினர். 1971 - இல் தனி நாடு கோரும் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் இந்தியாவின் உதவியுடன் பாகிஸ்தானிடம் போராடி விடுதலை பெற்றனர். கிழக்கு வங்காளம் எனும் கிழக்கு பாகிஸ்தானுக்கு வங்காளதேசம் எனப் பெயரிடப்பட்டது. 
வங்காள தேசம் புதிய சுதந்திர நாடாக உருவானது!
இந்தியாவுடன் இணைக்கப்பட்ட மேற்கு வங்காளப் பகுதி இந்தியாவின் ஒரு மாநிலமாகத் திகழ்கிறது. 
பொருளாதாரம்!
துர்காப்பூர் மற்றும் ஆசான்சால் பகுதியில் அமைந்துள்ள இரும்பு, நிலக்கரி மற்றும் அலுமினிய சுரங்கங்கள் மூலம் எஃகு மற்றும் இரும்பாலைகள், மின்சார மற்றும் மின்னணுக் கருவிகள் தயாரித்தல் மின் கம்பிகள் தயாரித்தல் போன்ற தொழில்கள் நடைபெறுகின்றன. 
மேலும் ரயில் என்ஜின்கள், ரயில் பயணிகள் பெட்டிகள், ரயில் சரக்குப்பெட்டிகள், மோட்டார்கார் உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், துணி நெசவு, நகைகள், தேயிலை உற்பத்தி, சர்க்கரைத் தயாரிப்பு, இரசாயனப் பொருட்கள் தயாரிப்பு, சணல் பொருட்கள் போன்ற தொழில்கள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக உள்ளன. 
வேளாண்மை!
மேற்கு வங்காள மாநிலத்தின் பிரதான தொழில் வேளாண்மைப் பயிராகும். நெல் தவிர உருளைக்கிழங்கு, சணல், கரும்பு, தேயிலை, பருப்பு வகைகள் மற்றும் கோதுமை போன்றவை முக்கிய விளை பொருட்களாகும்.
கொல்கத்தா மாநகரம்!
மேற்கு வங்காளம் மாநிலத்தின் தலைநகரம் பரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். கொல்கத்தா நகரின் புறநகர் பகுதிகளையும் கணக்கில் கொண்டால் இந்நகரின் மக்கள் தொகை சுமார் 1.5 கோடி ஆகும். எனவே இந்நகர் இந்தியாவின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகக் கருதப்படுகிறது. மேலும் இந்நகர் உலக அளவில் பரப்பளவில் எட்டாவது மிகப் பெரிய நகரமாகும்.
கொல்கத்தா நகருக்கு அருகாமையில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூரில் கிடைத்த அகழ்வாராய்ச்சிப் பொருட்கள் மூலம் இப்பகுதியில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னரே மக்கள் வசித்து வந்தது அறியப்படுகிறது. இருப்பினும் நகரின் தெளிவான வரலாற்றை 1690 - க்குப் பின் இப்பகுதிக்கு வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய வாணிப கழகத்தின் வருகைக்குப் பின்தான் அறியமுடிகிறது. 
"கல்கத்தா' என்று அழைக்கப்பட்ட இந்நகரின் பெயர் 2001 - ஆம் ஆண்டில் வங்காள மொழி உச்சரிப்பான "கொல்கத்தா' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கொல்கத்தா நகரம் "ஹூக்ளி' ஆற்றின் கரையில் தெற்கு வடக்காக நீள வாக்கில் அமைந்துள்ளது. இந்நகரின் பெரும்பாலான நிலம் முற்காலத்தில் சதுப்பு நிலமாக இருந்தது. காலப்போக்கில் அதிகரித்து வந்த மக்கள் தொகையால் அந்த ஈர சதுப்பு நிலப்பகுதிகள் படிப்படியாய் மேம்படுத்தப்பட்டன. இவ்வாறு மேம்படுத்தப்படாமல் மீதியிருக்கும் ஈர நிலம் இப்போது "கிழக்குக் கல்கத்தா ஈரநிலம்' என்று அழைக்கப்படுகிறது. கிழக்கு மேற்கு திசையில் இந்நகரம் மிக ஒடுக்கமானது.
கல்கத்தா நகர் ஆங்கிலேயரின் ஆட்சியின்போது 1772 - ஆம் ஆண்டு முதல் 1911 - ஆம் ஆண்டு வரை இந்தியாவின் தலைநகரமாக விளங்கியது. அக்காலத்தில் இந்நகரம் கல்வி, அறிவியல், தொழில், பண்பாடு மற்றும் அரசியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கியது.
இரண்டாம் உலகப் போரில் கல்கத்தா நகரும் அதன் புறநகர் பகுதிகளும், துறைமுகமும் ஜப்பானியத் தரைப்படையால் தாக்கப்பட்டன. 20 டிசம்பர் 1942 முதல் 24 டிசம்பர் 1944 - ஆம் ஆண்டு வரை கல்கத்தா பலமுறை தாக்கப்பட்டது.
முக்கியமாகக் காண வேண்டிய இடங்கள்!
விக்டோரியா நினைவிடம்! - கொல்கத்தா

இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி நினைவாகக் கட்டப்பட்டது. பரந்த கொல்கத்தா மைதானத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ளது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் 25 ஆண்டு கால ஆட்சியைக் கொண்டாடுவதற்காக கட்டப்பட்டது.
இந்த நினைவிடத்தின் அடிக்கல்லை வேல்ஸ் இளவரசர் ஐந்தாம் ஜார்ஜ் 1906 - ஆம் ஆண்டில் நாட்டினார். 1921 - ஆம் ஆண்டு இந்த வெள்ளை மார்பிள் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இது லண்டனில் உள்ள விக்டோரியா நினைவுச் சின்னம் போன்றே கட்டப்பட்டுள்ளது
இந்த நினைவுச் சின்னத்தை பசுமையான நன்கு பராமரிக்கப்பட்ட 64 ஏக்கர் பரப்பளவு கொண்ட தோட்டம் சூழ்ந்துள்ளது. இங்கு ஏராளமான சிற்பங்கள் உள்ளன.விக்டோரியா மகாராணியின் வெண்கலச் சிலை சிம்மாசனத்தில் அமர்ந்த நிலையில் இங்குள்ளது. இக்கட்டடம் இப்போது அருங்காட்சியகமாக உள்ளது. ராயல் கேலரி, நேஷனல் லீடர்ஸ் கேலரி, ஸ்கல்ப்சர்ஸ் கேலரி, உட்பட 25 - க்கும் மேற்பட்ட கேலரிகள் இங்குள்ளன. அத்துடன் அரிய பழங்காலப் புத்தகங்களும், ஓவியங்களும், ஆயுதங்களும், ஜவுளி கலைப்பொருட்களும், முத்திரைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 
கொல்கத்தாவின் பெருமையாகக் கருதப்படும் இக்கட்டடம் இன்று ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது. 
வில்லியம் கோட்டை! - கொல்கத்தா. 
இந்தக் கோட்டை ஹூக்ளி ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. 17 - ஆம் நூற்றாண்டில் இறுதியில் இப்பகுதியில் வசித்த ஆங்கிலேயர் பிற ஐரோப்பிய நாட்டவர்களிடம் (நெதர்லாந்து, பிரெஞ்சு, போர்த்துகீசியர்) இருந்து தங்களைக் காத்துக்கொள்ள ஒரு கோட்டையை கட்ட விரும்பினர். அதன்படி 1696 - ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தக் கோட்டைக்கு மூன்றாம் வில்லியம் மன்னரின் பெயரிடப்பட்டது. இக்கோட்டையைக் கட்டி முடிக்க பத்து ஆண்டுகாலம் ஆனது. இது நம் நாட்டில் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட முதல் கோட்டையாகும். இக்கோட்டையே ஆங்கிலேயப் படையினரின் குடியிருப்பாகவும், தலைமையிடமாகவும் இருந்தது.
பின்னர் "கொல்கத்தா' (கல்கத்தா) வங்காள மாகாணத்தின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனிப் படையினரால் ஆங்கிலேயர்கள் தொடர்ந்து தாக்கப்பட 1756 - ஆம் ஆண்டு வில்லியம் கோட்டை மேலும் பலப்படுத்தப்பட்டது. இதனால் கோபம் அடைந்த வங்காள நவாப் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றினார். அடுத்த ஆண்டே மீண்டும் கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். அத்துடன் ஆங்கிலேயர்களால் இந்தியாவின் தலைநகரமாக கல்கத்தா நகரம் அறிவிக்கப்பட்டது. 
இக்கோட்டை 70.9 ஏக்கர் பரப்பளவில் அற்புதமான அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டையின் மேற்பரப்பு கற்களால் ஆன வேலைப்பாடுகள், பசுமையான தோட்டங்கள் என கம்பீரமாக அழகுடன் காணப்படுகிறது.
ஹவுரா பாலம்!
இப்பாலம் கொல்கத்தாவின் ஒரு முக்கிய அடையாளம். இது ஹூக்ளி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு பெரிய எஃகு பாலமாகும். இது உலகின் மிக நீளமான பிடிமானப் பாலங்களில் (கான்டிலீவர் பிரிட்ஜ்) ஒன்றாகக் கருதப்படுகிறது! இப்பாலம் இரட்டை நகரங்களான ஹவுரா மற்றும் கொல்கத்தாவை இணைக்கிறது. இந்த பாலத்தை தினமும் சுமார் ஒரு லட்சம் வாகனங்கள் மற்றும் எண்ணற்ற பாதசாரிகள் கடந்து செல்கின்றனர். 
ஹவுரா பாலம் அதன் கட்டுமானத்தின்போது உலகின் மூன்றாவது மிக நீளமான காண்டிலீவர் பாலமாக இருந்தது. ஆனால் இப்போது இது காண்டிலீவர் வகைகளில் ஆறாவது நீளமான ஒன்றாக இருக்கிறது. 1500 அடி நீளமும், 71 அடி அகலமும் கொண்டிருக்கிறது. இப்பாலத்திற்கு போல்டுகளோ நட்டுகளோ ஒன்று கூடப் பயன்படுத்தவில்லை! முழுக்க, முழுக்க ரிவெட்டுகளால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் கட்டுமானத்தில் 26, 500 டன் எஃகு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் கட்டுமானம் 1936 - இல் தொடங்கி 1942 - இல் முடிவடைந்தது.
பரபரப்பான போக்குவரத்தைக் கொண்ட இந்தப் பாலத்தில் நின்று ஆற்றின் அமைதியைப் பார்த்து ரசிக்கலாம். 
சுந்தரவனம் உயிர் கோளக் காப்பகம்! 
(SUNDARBAN BIOSPHERE RESERVE)
இந்தியாவிற்கும், பங்களா தேஷிற்கும் இடையில் உள்ள மிகப் பெரிய மாங்குரோவ் சதுப்பு நிலப்பகுதிதான் சுந்தரவனக் காடுகள்! இதன் பெரும்பாலான பகுதிகள் பங்களாதேஷ் நாட்டிற்குள் இருக்கிறது. என்றாலும் இக்காடுகளின் மூன்றில் ஒரு பகுதி இந்திய எல்லைக்குள் இருக்கிறது. பயணிகள் எளிதில் சென்று வருவதற்கு ஏற்ற சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.
இந்த வனப்பகுதி கொல்கத்தாவிற்கு தென்கிழக்கு திசையில் 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. உலகளவில் பெரும்பரப்பளவில் காணப்படும் சதுப்பு நிலக் காடுகளைக் கொண்ட சுந்தரவனம் யுனெஸ்கோவினால் 1989 - ஆம் ஆண்டு உயிர்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது! உலகப் பாரம்பரியக் களமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுந்தரவனக்காடுகள் சுமார் 10,000 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் பங்களாதேஷில் 6017 ச.கி.மீ. பரப்பளவும் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் "தெற்கு 24 பர்கானாஸ்' மற்றும் "வடக்கு 24 பர்கானாஸ்' மாவட்டங்கள் பகுதியில் 4260 ச.கி.மீ. பரப்பளவும் உள்ளது. இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் ஹூக்ளி நதியிலிருந்து பங்களா தேஷின் பலேஸ்வர் நதி வரை பரவியுள்ளது. இவ்வனப் பகுதி வங்காள விரிகுடாவில் கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் மேக்னா நதிகளின் டெல்டா பகுதியில் அமைந்துள்ளது. உலக அளவில் புலிகள் வாழும் மிகப் பெரிய சதுப்பு நிலக்காடுகள் இக்காப்பகத்தில் மட்டுமே காணப்படுகிறது. இந்த உயிர்கோளக் காப்பகத்தில் வங்காளப் புலி காப்புப் பகுதி, சுந்தரவனம் தேசியப் பூங்கா ஆகியவை உள்ளன. மேலும் சக்னோகாலி வனவிலங்கு சரணாலயம், லோத்தியன் தீவு வனவிலங்கு சரணாலயம் மற்றும் ஹாலிடே தீவு வனவிலங்கு சரணாலயம் ஆகிய மூன்று சரணாலயங்களும் இக்காப்பகத்தில் உள்ளன. இவ்வனப்பகுதியில் பல்வேறு வகையான பாசிகள், தாவரங்கள், கண்டறியப்பட்டுள்ளன. 
இப்பகுதிக்கே உரிய "சுந்தரி' என்னும் மரமும் காணப்படுகிறது. மேலும் இவ்வனப்பகுதியில் 150 - க்கும் மேற்பட்ட பறவையினங்கள், பல்வேறு வகையான பாலூட்டிகள், 50 - க்கும் மேற்பட்ட வகையில் ஊர்வன, பல்வேறு வகையான மீன் இனங்கள், இறால்கள், நண்டுகள், போன்றவை இருக்கின்றன. வங்காளப் புலிகள் இவ்வனப்பகுதியில் அதிகமாக உள்ளன. இப்பகுதியில் சுற்றுலா செல்வதற்கு செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரை மிகவும் ஏற்ற காலமாகும். இந்தச் சுற்றுலா மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்! 
தொடரும்
தொகுப்பு : 
கே.பார்வதி, திருநெல்வேலி டவுன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com