சேகரிப்பில் சாதனை படைக்கும் பாலசந்தர்!

சேகரிப்பில் சாதனை படைக்கும் பாலசந்தர்!

மதுராந்தகம் அடுத்த பழமத்தூர் கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவன் பாலசந்தர்.

மதுராந்தகம் அடுத்த பழமத்தூர் கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவன் பாலசந்தர். பண்டைய கால நாணயங்களையும், பல்வேறு நாடுகளின் ரூபாய் நோட்டுகளையும், பல்வேறு நாடுகளின் அஞ்சல்தலைகளையும், சேகரித்து கண்காட்சிகளை நடத்தி சாதனை படைத்து வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த பழமத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவர் சென்னை அரசு போக்குவரத்து கழக நடத்துநராக பணியாற்றிய நிலையில், விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். அவரது மனைவி அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தின் மருந்தாளுனராக பணியாற்றி வருகிறார். அவர்களுக்கு ஒருமகளும், மகனும் உள்ளனர். அதில் மகன் பாலசந்தர் வயது 17. செங்கல்பட்டு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தற்சமயம் பிளஸ் 2 படித்து வருகிறார். பள்ளி படிப்பில் அதிக ஈடுபாடுக் கொண்ட மாணவர் பாலசந்தர், சோழர் கால நாணயங்கள், ஆங்கிலேயஆட்சியாளர்கள் வெளியிட்ட நாணயங்கள், பல வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு அஞ்சல் தலைகள் ஆகியவற்றை சேகரித்து பல கண்காட்சிகளை நடத்தி சாதனை படைத்து வருகிறார்.

தனது சாதனைகளின் ஆர்வத்தினை பற்றி கூறியபோது, கடந்த 2013ல் சென்னையில் நடைபெற்ற சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பொருட்காட்சியை தந்தையுடன் பார்க்க சென்றேன். அங்கு இந்திய, வெளிநாடுகளின் நாணயங்கள் உண்மையான உருவத்தை வைக்காமல் நகல் தாள்களாக சுற்றுலா பயணிகள் காண காட்சி பொருளாக வைக்கப்பட்டிருந்தன. அப்போதே இதன் உண்மையான நாணயங்களை பார்க்கவேண்டும். அவற்றை நாமும் இது மாதிரி கண்காட்சி வைக்கவேண்டும் என அசைக்க முடியாத எண்ணம் எனக்கு ஏற்பட்டது. எனது தாத்தா, உறவினர்கள் ஆங்கிலேயர் ஆட்சியாளர்களிடம் பணியாற்றியதால் அவர்கள் வைத்திருந்த 50-க்கும் மேற்பட்ட நாணயங்களை தந்தை என்னிடம் அளித்தார்.எனது எண்ணத்துக்கு அடிக்கல் நாட்டுவது போல அவர் அளித்த நாணயங்களை முதலில் சேகரித்தேன். உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் அவர்களிடமிருந்த பல நாணயங்களை கேட்டு வாங்கி சேகரித்தேன். கணினி இண்டர்நெட் வழியாக, வெளிநாடுகளில் புழக்கத்தில் உள்ள நாணயங்கள், அதன் மதிப்பு, வரலாறு போன்றவற்றை ஆர்வத்துடன் அறிந்தேன்.

தற்போது, இதுவரை 1957 முதல் 2018 வரை வெளியிடப்பட்ட இந்திய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், பண்டைய சோழர்கால நாணயங்கள், 1835-இல் கிழக்கிந்திய கம்பெனி வெளியிட்ட நாணயங்கள், விக்டோரியா ராணி உருவம் பொறித்த நாணயங்கள், இந்திய சுதந்திரத்துக்கு பின் அரசினால் வெளியிடப்பட்ட அணா பைசா, தொண்டி காலணா எனத் தொடங்கி ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட ரூ ஆயிரம் நாணயம் மற்றும் பழைய, தற்சமயம் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் என சுமார் 4 ஆயிரம் நாணயங்களும், ரூபாய் நோட்டுகளும் வைத்து உரிய பாதுகாப்புடன் நாணய கண்காட்சிகளை நடத்தி வருகிறேன்.

மேலும் 2015 முதல் இந்திய, வெளிநாடுகளின் அஞ்சல்தலைகள் ஆகியவற்றை சேகரித்து வருகிறேன். கருங்குழி பேரூராட்சி, திருக்கழுக்குன்றம் அஞ்சலகம், பல்வேறு பள்ளிகளின் விழாக்களின் போது எனது நாணயங்கள், அஞ்சல்வில்லை கண்காட்சிகளை கடந்த 5 ஆண்டு காலமாக நடத்தி வருகிறேன். பள்ளி மாணவ மாணவிகள், முக்கிய விருந்தினர்கள் எனது கண்காட்சியை பார்வையிட்டு பாராட்டியதோடு, இவைகளை சேகரிக்க என்ன செய்ய வேண்டும் என ஆர்வத்துடன் கேட்டுச் செல்வார்கள். செங்கல்பட்டு தலைமை அஞ்சலகத்தின் சார்பாக நடைபெற்ற விழாவில் எனது நாணய, அஞ்சல்தலை கண்காட்சியை பார்வையிட்ட அஞ்சலக உயர் அதிகாரி, கலா ஸ்ரீ பாரதி என்ற விருதினை வழங்கி பாராட்டினார்.

வகுப்பறையில் முதன்மை மதிப்பெண்களை பெற்று கல்வியில் சிபுநிலையுடன், கிடார், கீபோர்டு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று, இசை ஆர்வத்துடன் கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன்.

சென்னை அஞ்சலக உயர் அதிகாரியின் அறிவுறுத்தலின்படி, தமிழ் இலக்கிய வரலாற்றையும், மொழி பண்பாட்டையும் எனது இரு கண்களாக பாவித்து செயல்படுத்தி வருகிறேன். எனது மூத்த சகோதரி அரசு நடத்திய முதல் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்று மருத்துவக் கல்லூரியில் தற்சமயம் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். அவரைப்போல தானும் பல் மருத்துவ படிப்பை படித்து, ஏழை மக்களின் பல்மருத்துவ சிகிச்சையை அளிக்க எனது உயர் லட்சியமாக உள்ளது என புன்முறுவலுடன் கூறினார்.

மகனின் துள்ளலான ஆர்வத்துக்கு, பின்புலமாக இருந்து வருபவர் தந்தை பழனி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com