கருவூலம்: ஈராஸ்!

""ஹலோ!..... இ.ஐ. மினி மார்க்கெட்டா?'' என்று போனில் கேட்டாள் நான்ஸி.
கருவூலம்: ஈராஸ்!

""ஹலோ!..... இ.ஐ. மினி மார்க்கெட்டா?'' என்று போனில் கேட்டாள் நான்ஸி.
""ஆமாம்!.... நான் மரியா பேசறேன். உங்களுக்கு என்ன வேணும்?''
""நான்ஸி பேசறேன்!''
""அப்படியா சந்தோஷம்!.... நீங்க எங்க ரெகுலர் கஸ்டமராச்சே! சொல்லுங்க எழுதிக்கிறேன்''
""ஒரு லாங் சைஸ் பிரெட்....., இரண்டு கோதுமை மாவுப் பொட்டலம்,..... ஒரு கிலோ ஆலிவ் எண்ணெய் சமையலுக்கு! ட்ரை ஃப்ரூட்ஸ் மிக்சர் அரை கிலோ!.அப்புறம்,... சானிடைசர் ஒரு பாட்டில்.... பாத் சோப் ரெண்டு'' என்றாள் நான்ஸி.
""எழுதிக்கிட்டேன்,.... நீங்க உங்களுக்குத் தேவையானதை வாட்ஸப்பிலோ, மெஸ்ஸேஜாகவோ கூட அனுப்பலாம்.... அட்ரஸ் சொல்லுங்க....''
""எழுதிக்குங்க.... '' என்று அட்ரûஸ சொல்லி முடித்தாள் நான்ஸி.
கடைக்கு நேரடியாகச் சாமான் வாங்க வந்தவர்கள் சமூக விலகலைக் கடைப்பிடித்து ஒழுங்காக சாமான்களை எடுத்துக் கூடையில் போட்டுக்கொண்டிருந்தார்கள்.
மரியா சாமான்களை ஒரு கூடையில் போட்டுவிட்டு, ""ஈராஸ்!....'' என்று அழைத்தாள்.
ஈராஸ் வந்து நின்றது. அஃறிணையில் சொல்கிறேனே என்று நினைக்க வேண்டாம். ஆமாம்!.... ஈராஸ் ஒரு நாய்!
சாக்லேட் கலர் லாப்ரடார் வகை நாய்!
கூடையை வாயில் கவ்விக்கொண்டது.
""நான்ஸி வீட்டுக்குப் போ!....'' என்றாள் மரியா.
ஈராஸ் சமத்தாகக் கிளம்பியது. டெலிவரி செய்தது. நான்ஸி சாமான்களை எடுத்துக் கொண்டு காலிக் கூடையை ஈராஸூக்குத் தந்தாள். அவளுக்கு அந்த நாயை ரொம்பப் பிடிக்கும். அதற்கு ரெண்டு பிஸ்கெட்டுகளைத் தந்து, கழுத்தில் தடவிக் கொடுத்தாள்.
திரும்ப தன் எஜமானி மரியாவின் இ.ஐ. மினி மார்க்கெட்டுக்கு வந்தது.
""இந்தா, ராபர்ட் வீட்டுக்குப் போய் இதைக் கொடுத்துட்டு வா!'' என்று ராபர்ட் ஆர்டர் செய்திருந்த சாமான்களைக் கூடையில் அடுக்கி ஈராஸிடம் கொடுத்தாள் மரியா.
வாலை ஸ்டைலாக ஆட்டிக்கொண்டு மறுபடியும் சென்றது. ராபர்ட்டும் ஒரு நல்ல வாடிக்கையாளர். இந்த முறை ராபர்ட் ஈராஸூக்கு கேக் கொடுத்தார். அவருக்கு ஷேக் ஹாண்ட் கொடுத்து விட்டு, வாயில் ஒட்டிக்கொண்டிருந்த கேக்கின் துகள்களை நக்கியபடி வாலை குழைத்து ஆட்டிவிட்டு, காலிக்கூடையை எடுத்துக்கொண்டு மரியாவிடம் திரும்பியது.
மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் நிஜம்! கொலம்பியாவில் இருக்கிறது மரியாவின் இ.ஐ.மினி மார்க்கெட்! செல்ல நாய் சாக்லேட் கலர் லாப்ரடார் அந்த ஸ்டோரின் டெலிவரி பாய் போல் செயல்படுகிறது. அருகில் உள்ள தெருக்களில் உள்ள வாடிக்கையாளர்கள் பெயரையும், உருவத்தையும், அவர்களது வீட்டையும் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறது. மரியா அட்ரஸ் எழுதி கூடைக்குள் வைக்கிறார். ஈராஸூக்கு அதைப் படிக்கத் தெரியாது. ஆனால் பெயரைச் சொல்லிவிட்டால் போதும்! அதைக் காதில் வாங்கிக் கொண்டு அவர்கள் இருப்பிடத்தைத் தெரிந்து கொண்டுவிடும்!
""ஒரு குட்டி நாயை வளர்க்கலாம் மா!'' என்று தன் மகன் கேட்டுக்கொண்டபடி ஒரு நாய்க்குட்டியை வாங்கினாள் மரியா. ஈராஸ் என்று பெயரும் வைத்தார்கள். இந்த கரோனா தொற்று நோய் பாதிப்பில் இருக்கும்போது இந்த நாய் அதற்குப் பேருதவியாக இருக்கிறது என்கிறார் மரியா. ஈராஸின் புத்திசாலித்தனமும், சுறுசுறுப்பும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இழுக்கிறது.
ஈராஸூக்கு ஏதாவது ட்ரீட் கொடுத்தால் சந்தோஷமாக இருக்கும். சிலர் ட்ரீட்டைக் கொடுத்துவிட்டு உடம்பை லேசாக மசாஜும் செய்து விடுவார்கள்!
ஆமாம்!.... ஈராஸூக்குப் பிடித்த சம்பளம் அதுதான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com